Monday, September 13, 2004

கோல்கொண்டா

ஹைதராபாத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசியில் மனைவியிடம் நாளை கோல்கொண்டா போகப் போகிறேன் என்று சொன்னேன். அப்படியா , அங்கேயும் கோல்கொண்டா நல்ல புகழ்பெற்ற ஹோட்டலா என்று கேட்டாள். எனக்கும் சென்ற வாரயிறுதி வரை , கோல்கொண்டா ஒரு ஹோட்டலாக தான் அறிமுகம். சரித்திரத்தில் எப்பொழுதோ படித்த ஞாபகம் , பெயர் பரிட்சயத்தை தந்ததை தவிர , வேறொன்றும் தெரியாது.

இந்தியாவில் சுற்றுலா செல்லும் இந்தியர்களை விட , வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்று நாளிதழில் படித்தேன். நம்ம ஊரில் , சுற்றுலா பள்ளி/கல்லூரி காலங்களில் செல்லும் சடங்காகவும் , அலுவலகத்தில் தரப்படும் பயணப்படியை பெற உதவும் ஒரு விஷயமாகவும் மட்டுமே உள்ளது. அதனால் வாரயிறுதியில் சென்னைக்கு சென்று உற்றார் உறவினர்களை பார்ப்பதை விட , ஹைதராபாத் அருகிலுள்ள கோல்கொண்டாவிற்கு சென்று வரலாம் என்று முடிவு செய்தேன்.

கோல்கொண்டா ஒரு அற்புதமான அனுபவம். கதைகளில் படித்த கோட்டைகளின் பிரமாண்டம் நேரில் இன்னும் பிரமிப்பூட்டியது. இப்பொழுதெல்லாம் , நம்ம வீடுகளில் ஹாலில் இருந்து கூப்பிடுவது , அடுப்பறையில் உள்ளவர்களுக்கு கேட்பதில்லை. ( கேட்பதில்லையா இல்லை கேட்காதது போல் இருந்து விடுகிறார்களா என்று தெரிவதில்லை). ஆனால் 500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டையின் வாயிலில் இருந்து கை தட்டினால் 400 அடி உயரத்தில் கிட்டத்தட்ட 3 கி.மீ தூரத்தில் உள்ள தர்பாரில் கேட்கிறது. தொலைபேசி இல்லாத அந்த காலத்தில் , ஒரு சுவரின் கடைசியில் பேசுவது , மற்றொரு கடைசியில் கேட்கிறது , இங்கே கைதட்டினால் , அங்கே கேட்கிறது என்று ஓரே acoustics மாயா ஜாலம். தண்ணீர் கொண்டு செல்லும் அதி நவீன அமைப்புகள் மற்றொரு ஆச்சர்யம். காகடியா மன்னர்கள் கட்டிய காளி கோவிலை , பின்னர் வந்த முஸ்லிம் மன்னர்கள் இந்த கோட்டையில் விட்டு வைத்தது , மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது.

இரவில் ஒலி ஒளி காட்சியாக , இந்த கோட்டையின் கதையை சுற்றுலா துறை 1 மணி நேரம் விளக்குகிறது. நேரத்தை குறைத்து , இன்னும் சுவை பட நன்றாக இந்த நிகழ்ச்சியை செய்யலாம்.கல்லூரியிலிருந்து சுற்றுலாவில் வந்திருந்த நூற்றுக்கணக்கான இளசுகள் , கத்தி ஆர்ப்பட்டம் பண்ணி ஒன்றுமே கேட்காமல் செய்து விட்டார்கள். இவர்களின் சந்தோஷங்களையும் , யாரையும் கண்டுகொள்ளாத அவர்களின் தனி உலகமும், கத்தலும் , கேலியும் , கிண்டலும் மற்றொரு உலக அனுபவம். கல்லூரி நாட்களில் , பிரிவு உபசார விழாவில் கூட்டமா திரையரங்கிற்கு சென்று கத்தி ஆட்டம் போட்டு , மற்றவர்களை படம் பார்க்க விடாமல் செய்தது ஞாபகம் வந்தது.

கோஹினூர் வைரம் இருந்த இடம் ,மார்க்கபோலோ புகழ்ந்து எழுதிய இடம் என்று , இதன் சரித்திர புகழ் நீண்டு கொண்டே போகிறது.

http://7wondersofhyderabad.com/golkonda-fort/golconda-fort.html

Friday, September 10, 2004

வானம் எனக்கொரு போதி மரம்

விமானத்தில் பறக்கும் போதும் , ஓய்வறையிலும் ( அமெரிக்க ஆங்கிலப்படி) மட்டும் தான் அதிகம் சிந்திப்பதாக நண்பர் ஒருவர் சொன்னாது , விமானத்தில் செல்லும் போதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்து விடும். பல வருடங்கள் கழித்து , அலுவல் நிமித்தமாக பயணம். பக்கத்து இருக்கையில் ஹாலந்து நாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர். குசலம் விசரித்து முடித்த பின் , இந்திய ஹாக்கி அணியை பாரட்டியபடி , அவர் கேட்ட முதல் கேள்வியே பதக்கப் பட்டியலில் குட்டி நாடான ஹாலந்து முன்னனியில் இருக்கும் போது , இந்தியா எங்கோ கீழே இருப்பதன் காரணம் என்ன என்பது தான். அரசியல் , விளையாட்டு கட்டமைப்புகளின் நிலைமை , இந்தியர்களின் மன நிலை , கிரிக்கெட்டின் ஆதிக்கம் என்று அலசல் விரிந்தது.நான சில வாரங்களாக குமுறிக் கொண்டிருந்ததை கொட்டித் தீர்த்தேன். என்னுடைய அர்ஜூன்தனமான பதில்களை பார்த்தபின் , உன்னை மாதிரி இளைஞர்கள் ( சத்தியமா , அப்படித்தான் சொன்னார் தம்பிகளா!) ஏன் தாய்நாட்டிற்கு திரும்பி தாய்நாட்டின் வளர்ச்சியில் ஈடுபட்டால் என்ன என்று பொட்டில் அறைந்தால் போல் கேட்டார். நான் வழக்கம் போல எனது நீண்ட கால திட்டத்தை சொல்லி , இன்னும் ஒரு 5 வருடங்களுக்கு வாய்தா வாங்கினேன்.

அடுத்து பள்ளியில் படித்த ஹாலந்து நாட்டு கதை பற்றி பேச்சு சென்றது. கடல் மட்டத்தை விட தாழ்வாக இருக்கும் அந்நாட்டில் , கடல் நீரை தடுத்து நிறுத்தும் சுவரில் ஏற்பட்ட ஓட்டையை பார்த்த சிறுவன் தன் கை விரலால் அடைத்து இரவு முழுவதும் நின்று நாட்டை பேரழிவில் இருந்து காப்பற்றிய கதையைப் பற்றி சொல்லி , என் ஹாலந்து அறிவை அவருக்கு காண்பித்தேன். இரண்டாயிரம் வருடங்களாக , இப்படி கடல் நீர் உள்ளே வந்து விடாமலும் , உள்ளே உள்ள நீரை கடலுக்கு கொண்டு செல்ல அவர்கள் செய்திருக்கும் ஏற்பாடுகளையும் சொல்லி, இத்தகைய இயற்கை சூழலிலும் , இங்கிலாந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று பெரிய நாடுகளுக்கு நடுவில் குட்டி நாடாய் இருந்து கொண்டு , பல மொழிகளைக் கற்றுக் கொண்டு வியாபாரம் மூலம் செழிப்பாக இருப்பதாகவும் ஹாலந்து நாட்டுக் கதையை அவர் அளந்தார்.

அடுத்த முறை இந்தியா ஹாக்கியில் ஹாலந்து நாட்டை வெல்லும் போது , கண்டிப்பாக என்னை பற்றி அவர் நினைப்பார் என்று நான் எண்ணுகிறேன்.