Saturday, February 17, 2007

ஒரு சங்கடமான உண்மை (An Inconvenient Truth)

சனிக்கிழமை கூட அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்துடன் (பொய்) சாயங்காலம் வீடு திரும்பிய பின் கடைக்கு அழைத்துச் செல்லலாம் என்று அழைத்தால் யாரும் செவி சாய்ப்பதாக இல்லை.நூலகத்தில் இலவசமாக கிடைக்கக் கூடிய படத்தைக் கூட , பணம் செலுத்தி NetFlix-ல் பார்க்கும் என் சாமர்த்தியத்தை மெச்சிய என் மனைவியின் வஞ்சப் புகழ்ச்சி , செலவழித்த பணத்திற்கு வந்த படத்தையாவது பார்த்து விடலாம் என்று நினைவு படுத்தியது. அப்படி பார்த்த படம் தான் An Inconvenient Truth.

இணையத்தை கண்டுபிடித்ததாக பீற்றிக் கொண்டவர் அல் கோர் என்று பின்னிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிம் கிண்டலடிக்கப் பட்டவர் என்ற வகையிலும், தேர்தல் நேரத்தில் தன் ஆளுமையை காண்பிக்க தன் மனைவியை மேடையில் ஆழ முத்தமிட்டவர் என்ற வகையில் தான் எனக்கு , அல் கோர் அறிமுகம்.

ஒரு இரண்டு மணி நேர படத்தை , ஒருவரை பேச வைத்து மட்டும் சுவாரஸ்யமாக எடுக்க முடியும் என்பது ஆச்சர்யமாக இருந்தது. சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தின் விதிகளுக்கு அடங்காத படம்.

ஒரு விவாதத்திற்கு உரிய கருத்தைப் பற்றிய ஒருவரின் மேடை பேச்சை, அவரின் சொந்த வாழ்க்கையை கொஞ்சம் இடை சொருகி, இது கட்சியின் பிரசார படமோ அல்லது ஒரு தனிநபரின் அரசியல் பயன் பாட்டிற்கு அப்பாற் பட்டது என்ற நம்பகத் தன்மையை நாசுக்காக நிலை நிறுத்தியது.அல் கோரின் பேச்சுத் திறமையும், கடினமான விஷயங்களை கூட எளிதாக விளக்கிய முறையும் , நகைச்சுவை கலந்த பேச்சும் அருமை.

சில சமயங்களில் , பூதாகரமாக உலகின் எல்லா நிகழ்விற்கும் முடிச்சு போட பார்ப்பது போல இருந்தாலும், இந்த விஞ்ஞானிகளுக்கு வேறு வேலை இல்லை , இன்றைக்கு ஒன்று சொல்லுவார்கள் , நாளைக்கு அதற்கு மாற்று கருத்து தான் சரி என்பார்கள். எல்லாம் இயற்கை பார்த்துக் கொள்ளும்என்று அலட்சியமாக விடக் கூடிய விஷயம் அல்ல. நாம் இயற்கையின் மீது காட்டும் அலட்சியமான வன்முறை மாற வேண்டும் என்பது மட்டும் உண்மை.

படத்தை என் மனைவி இரண்டு முறை பார்த்து விட்டாள். ஒரு நல்ல தலைவரின் தலைமையை அரசியல் இழந்து விட்டது என்ற கருத்து அவளது கணிப்பு. படத்தை பார்த்த என் பத்து வயது மகள் , அடப் பாவிகளா நீங்கள் நல்லா என்ஜாய் பண்ணி விட்டு , எங்களுக்கு பூமியை விட்டு வைப்பீர்களா இல்லை மாட்டீர்களா என்று ஒரு பார்வை பார்த்தாள்.

Thursday, February 15, 2007

மரணம்

உன் உயிரணை உடைந்ததால்
உருவானது இந்த கண்ணீர் நதி
உலராது உறைந்து விடும்
உன் புகழ் தாங்கி

ஓர் நாள்
உப்பளமாய் உய்வு பெறும்
உனக்கு நன்றி நவிலச் சொல்லி

வார நட்சத்திரமாய்
வந்தது போதுமென
துருவ நட்சத்திரமாய்
சுடரச் சென்றாய்

மீண்டும்
துடிக்காதா உன்இதயம் என
துடிக்கிறது பார்
ஓராயிரம் உள்ளம்

வார்த்தையால்
வடிக்க முடியாத
வருத்தத்திற்கு
காரணப் பெயர் தான்
இந்த மரணமோ

நீ தந்த
இந்த அபாய அறிவிப்பொலி
நினைவுபடுத்துகிறது
வாழ்வாங்கு வாழச் சொல்லி

ஐம்புலன் அடங்கினாலும்
ஐம்பூதத்திலும் கலந்து
ஆட்கொள் இனி
நல்வழி நடக்க