Friday, August 27, 2004

ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் 100வது பதக்கம்

இந்தியா ஒலிம்பிக்ஸில் 100 பதக்கங்களை வென்றது. இதில் 25 தங்க பதக்கங்கள் அடங்கும். முதல் இடத்தில் இருக்கும் சீனாவிற்கு கடுமையான போட்டியாக , இந்தியா விளங்கி வருகிறது.அடுத்த ஒலிம்பிக்ஸில் , இந்தியா முதல் இடத்தை பிடிப்பது உறுதியாகி விட்டது. இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் , அரசாங்கம் , வர்த்தக நிறுவனங்கள் , விளையாட்டு கட்டமைப்புகள், பயிற்சி நிறுவனங்கள் இவை அனைத்தும் இணைந்து வெல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு , திறமையாளர்களை இள வயதிலேயே கண்டறிந்து கடும் பயிற்சி அளிப்பதும் , வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கும் பரிசுகளும் , சலுகைகளும் வேறெந்த துறையில் அடைய முடியாத அளவிற்கு உயர்ந்த அளவில் இருப்பதுமே. வீணாய் போன கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகளை தடை செய்தது தான் இந்த அளவிற்கு வெற்றி கிடைத்ததற்கு உண்மையான காரணம்.

பி.கு.
1.நாஸ்ட்ராடமஸ் மாதிரி இதை எழுதி வைத்து விட்டேன். 3979 க்குள் ( நாஸ்ட்ராடமஸ் கணிப்புகள் தொடும் கடைசி வருடம்) கண்டிப்பாக இது நடக்கும்.
2. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கு , இது தானா முக்கியம் என்று நினைக்கின்றீர்களா?. உணவு , உடை , உறக்கம் மட்டும் போதாது. அமைதி , கலை, விளையாட்டு , இலக்கியம், சம உரிமை , சுதந்திரம் என்று எல்லாம் இருந்தால் தான் வாழ்க்கை. கடந்த 10 நாட்களக , ஒவ்வொரு நாளும் 5 மணி நேரம் ஒலிம்பிக்ஸ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்தா , வேற என்ன நினைக்க தோன்றும். நேற்று கனவில் கூட ஒரு வெண்கல பதக்கம் தான் வந்தது.

Monday, August 23, 2004

ஒலிம்பிக்ஸில் நட்புச் சாரல்

நூறு மீட்டர் அரையிறுதியில் ஜஸ்டின் கேட்லின் (Justin GATLIN ) மற்றும் ஷான் க்ராஃபோர்ட் (Shawn CRAWFORD) இருவரும் இலக்கிற்கு அருகாமையில் வந்தவுடன் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து , ஓடிக்கொண்டிருக்கும் போதே நீ முதலில் செல் என்று பேசிக் கொண்டதை பார்த்து வர்ணனையாளர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஓட்டம் முடிந்தவுடன் , நெஞ்சோடு மோதிக் கொள்வதம் , ஓடுவதற்கு முன் வாழ்த்திக் கொள்வதும் , இறுதியில் ஜஸ்டின் வென்றவுடன் , மகிழ்ச்சியோடு ஷான் வாழ்த்தியதை பார்த்த போது நட்புச் சாரல் அடித்தது தெரிந்தது.

கர்ட்னி குபெட்ஸ் (Courtney Kupets) கால் காயம் காரணமாக , பதக்க நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படாத நிலையில் , தங்க பதக்கம் வென்ற கார்லி பேட்டர்ச்ன் (Carly PATTERSON ) அவரின் உதவியாளராக , சமனில்லாத பார் ஜிம்னாஸ்டிக்ஸ் ( Uneven Bars) போட்டியில் , கர்ட்னிக்காக பாரில் சாக் தடவி சரிபார்த்த போது நட்புச் சாரல் அடித்தது தெரிந்தது.கர்ட்னி வெண்கலம் வென்றார்.

டைவிங் அரையிறுதியில் முதல் பனிரெண்டு நபர்கள் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்ற நிலையில் , பதிமூன்றாவது இடத்திலிருந்த சாரா ஹில்டெப்ரண்ட்(Sara HILDEBRAND) கடைசி டைவ் அடிப்பதற்கு முன்பு டென்ஷனின் உச்ச கட்டத்தில் இருந்த போது அவரிடம் ஆறுதலாக பேசி தைரியம் கொடுத்த லாரா வில்கின்சன் (Laura WILKINSON ) , தான் தகுதி பெற்றதை விட சாரா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சியும் , சாராவுடன் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியின் போதும் நட்புச் சாரல் அடித்தது தெரிந்தது.

100 மீட்டர் வண்ணத்து பூச்சி (100m Butterfly) போட்டியில் முதலிடம் வந்த மைக்கேல் பெல்ப்ஸ்(Michael PHELPS),4X100 தொடர் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை , இரண்டாமிடத்தில் வந்த இயன் குரோக்கர்க்கு விட்டுக் கொடுத்த போது (Ian CROCKER) நட்பு சாரல் அடித்தது தெரிந்தது.
பெண்கள் டென்னிஸ் போல பிரபல்யமடைந்து வரும் கடற்கரை கைப்பந்து ( Beach Volleyball) போட்டியில் வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் கெர்ரி வால்ஸ்(Kerri WALSH) மற்றும் மிஸ்டி மே (Misty MAY) இருவரின் ஆட்டம் முழுவதுமே நட்புச் சாரல் தெரிகிறது ( கூடவே ஜொள் மழையும்).

மகேஷ் பூபதி மற்றும் லியாண்டர் பயஸ் இருவரும் முன்னொரு காலத்தில் வெற்றிகளை குவித்ததற்கு காரணமும் இந்த நட்புச் சாரல் தான்.

Friday, August 20, 2004

இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு ஜே!!!

மீண்டும் ஒரு முறை வெண்கலப் பதக்கம் நூலிழையில் தவறிவிட்டது இந்தியாவிற்கு. ஆனால் , கடைசிவரை போராடி தோற்றதில் பெருமிதம் தான். http://www.nbcolympics.com -ல் உடனுக்குடன் ஆட்டத்தின் புள்ளி விவரங்கள் வந்து கொண்டிருந்தது , நேரில் பார்ப்பது போன்ற நிலையை ஏற்படுத்தி விட்டது. அலுவலகத்தில் , இந்தியர்களின் குழு மின்னஞ்ல்களிலும் ஆர்வலர்கள் சிலர் , ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஆட்டத்தின் நிலையை தெரியப் படுத்தி வந்தார்கள். பொதுவாக , இது போன்ற மடல்கள் அலுவலை பாதிக்கும், அலுவலக அஞ்சலை பயன்படுத்தும் நெறிக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் பெருசுகள் கூட கொஞ்சம் பொறுமை காத்தார்கள். கடைசி செட்டில், எதிரணியை முறியடிக்கும் வாய்ப்பு நமக்கு அதிகம் கிடைத்தும் , வெற்றி கிட்டாதது , பெருத்த ஏமாற்றமே. முதல் செட்டில் ஆரம்பத்தில் கிடைத்த முன்னணி நிலையை உடனே கோட்டை விட்டதும் , இது கடினமான போட்டியாக இருக்கும் என்பது தெரிந்து விட்டது. எனினும் உலக அரங்கில் , இந்தியாவை தலை நிமிர வைத்த இந்தியன் எக்ஸ்பிரஸ் கூட்டணிக்கு என்றென்றும் ஜே!

விஜய் அமிர்தராஜ் , ரமேஷ் கிருஷ்ணன் போன்றவர்கள் விம்பிள்டன் காலிறுதிக்கு சென்றதை விடவும் ,இந்தியாவை டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்திற்கு எடுத்துச் சென்றதை விடவும் கிரிக்கெட் மோகத்தில் திளைத்திருந்த இந்தியர்களை டென்னிஸ் பக்கம் திருப்பியதில் பெரும் பங்கு லியாண்டர் பயஸ் / மகேஷ் பூபதி ஜோடிக்கு உண்டு. அதற்கு சிறப்பு காரணம் , அவர்கள் தனியாக உலக தர வரிசைக்கு ஆடுவதை விட , நாட்டிற்காக ஆடும் போது காட்டும் அதீத உற்சாகம் தான்.

Thursday, August 19, 2004

காற்றே நீதானா!

தென்றலாய் தழுவிய நீதானா
சூரைக் காற்றாய் இன்று!

காதல் தீபத்தை வளர்த்த நீதானா
காட்டுத் தீயாய் கருக்கியது இன்று!

காற்றாலையாய் இயக்கி வந்த நீதானா
அறுந்த மின்கம்பமாக்கியது இன்று!

பாய்மர கப்பலாய் செலுத்தி வந்த நீதானா
காகித ஓடமாய் சுழற்றியடித்தது இன்று!

பருவக் காற்றாய் வந்த நீதானா
கண்ணீர் மழைக்கு காரணகர்த்தாவாய் இன்று!

பூங்காற்றாய் வந்த நீதானா
பாலை அனல் காற்றாய் இன்று!

புல்லாங்குழலாய் இசைத்த நீதானா
பேரிரைச்சலாய் இன்று!

சுவசமாய் இருந்த நீதானா
சிதை எரிக்கும் நெருப்பிற்கு துணையாய் இன்று!

Tuesday, August 17, 2004

Rathore strikes silver

Proud moments for all Indians and truely the armed forces once again keeping the flag flying high.

http://us.rediff.com/news/2004/aug/17medal.htm

Union Defence Minister Pranab Mukherjee on Tuesday congratulated double trap shooter Major Rajyavardhan Singh Rathore on becoming the first Indian to win a silver medal in an individual event at the Olympics.
"You have done the armed forces proud and brought honour to India by your performance par excellence," Mukherjee said in a release in Delhi today.
Rathore, who served the army in the Kargil War, won the silver in double trap shooting with a score of 179 to bring India's first medal at the ongoing Athens Olympics Games.

.

Monday, August 16, 2004

மணிப்பூர்

மணிப்பூரில் என்ன நடக்கிறது? இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை திரும்ப பெற சொல்லி , தற்கொலை மற்றும் ஆர்ப்பாட்ட கலகங்கள் ஒரு புறம்.கடத்தல் , பணம் பறிப்பு, சட்ட ஒழுங்கு சீர்கேடு , இவற்றை கட்டுப்படுத்த தான் இந்த சிறப்பு அதிகாரங்கள் என்று நியாயப் படுத்தி மற்றொரு புறம்.உச்ச கட்டமாக இந்திய பொருட்களை (?) ஒதுக்கச் சொல்லி போராட்டம் வேறு.

இந்தியா வறுமை கோட்டிற்கு கீழே இருந்தாலும் , வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும் , ஒற்றுமையாக பிரச்சனையில்லாமல் இருந்தாலே பெரிய விஷயம் என்றாகிவிட்டது.வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் எங்கே?. அஸ்ஸாம், நாகாலாந்த் என்று வடகிழக்கு மாநிலங்களிலெல்லாம் எப்படி இந்த பிரச்சனை முற்றி விட்டது. ஆரம்பத்திலேயே கவனித்து , சரி செய்யாமல் விட்டது யார் குற்றம் என்று தெரிந்தவர்கள் யாரேனும் பதிந்தால் நல்லது.

லாட்டரி டிக்கெட்டுகளிலும் , வரைபடத்தில் வட கிழக்கில் எங்கோ ஒரு மூலையில் இந்த மாநிலங்கள் உள்ளன என்பதும் , பொறியியல் கல்லூரியில் வேற்று மாநில கோட்டாவில் படித்த ஒன்றிரண்டு மாணவர்களையும் தவிர , வடகிழக்கு மாநிலங்களைப் பற்றி வேறொன்றறியேன் பராபரமே!

இளம் உயிர்கள் , தற்கொலை செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அளவிற்கா இந்திய ஜனநாயகம் இருக்கிறது?

Wednesday, August 11, 2004

என்னை திட்டியவர்கள்

ஒரு வாரமாய் ஊரில் இல்லை.காலை 4 மணிக்கு வீடு வந்து சேர்ந்தவுடன், வந்திருந்த 362 அலுவலக மின்னஞ்சல்களை மேலோட்டமாக மேய்ந்து விட்டு , பின்னால் அசை போட்டுக் கொள்ளலாம் என்று ஆவலுடன் வலைப்பதிவுகளை பார்க்க ஆரம்பித்தேன். சி(ப)ல பதிவுகளுக்கு 30 , 60 என்று பின்னூட்ட எண்ணிக்கைகளை பார்த்தவுடன், கோடை மழை மாதிரி , எல்லா
வலைபதிஞர்களும் பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்களா என்று படிக்க ஆரம்பித்ததில் , கார சாரமாக ஆரம்பித்த விவாதம் நார சாரமாக சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

இதிலிருப்பது போலில்லாமல் திட்டு வாங்குவதும் சில நல்ல அனுபவங்களாக அமைவது உண்டு. என்னை திட்டியவர்களை எண்ணிப் பார்க்க , இதை விட சிறந்த சந்தர்பம் வேறு ஏது?

திட்டு வாங்குவது என்றவுடன் , பலருக்கு அப்பாதான் ஞாபகம் வரும்.அப்பாவிடம் விவாதம் செய்து , அவரை கோபத்தின் உச்சிக்கு கொண்டு செல்வது எனக்கு கை வந்த கலை. எல்லாரும் அவரைப் பார்த்து நடுங்கும் போது , கொண்ட கொள்கையை (?) விடாமல் , நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அவரிடம் விவாதம் செய்து கொண்டிருப்பேன். அவர் அப்பொழுதெல்லாம் , "பெரிய லார்ட் வேவல் இவரு. இவர் சொல்றதுதான் சரி..." என்று என்னை திட்டுவார். திட்டுவதில் கூட என்னை லார்ட்-ஆக பார்த்தவர்.

மானாமதுரையில் சிறுவர்களெல்லாம் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த கால கட்டம். ஒரு முறை பெரியம்மா மகனின் உடைந்த மட்டையயும், கிரிக்கெட் பந்தும் எனக்கு பரிசாக கிடைத்தது. ( விடாத கெஞ்சலுக்கு பின்).கிரிக்கெட் மட்டை வைத்திருந்ததால் , நான் வைத்தது தான் சட்டம். தேவிலால் போல நான் கேப்டன் பதவி வேண்டாம் என்று, துணை கேப்டன் பதவி வைத்து கொண்டேன். முதலில் மட்டையடிக்க நான் செல்வது வழக்கம். பந்து எப்படி வந்தாலும் , ஸ்டம்பில் பட்டு விடாமல் , மட்டையை சரியாக பந்து வரும் வழியில் வைத்து , அங்கேயே செத்து விழுந்து விடும் படி கட்டை வைப்பது என் வழக்கம். அடித்து விளையாட தெரியாது. அதனால் ஆட்டம் இழக்காமல் , கடைசி வரை விளையாடி ரன் அதிகம் எடுக்காமல் இருப்பது என் வழக்கம்.நண்பர்களெல்லாம் பொறுமை இழந்து , என்னை அடித்து விளையாட சொல்வார்கள். என்னை நேரிடையாக திட்ட முடியாமல் , "டெஸ்மண்ட் ஹெயின்ஸ்" என்று என்னை அழைப்பார்கள். (பின்னாளில் ஒரு நாள் ஆட்டங்களில் ஹெயின்ஸ் அபாரமாக அடித்து ஆடி , என் பெயரை காப்பாற்றியது வேறு விஷயம்.)

பனிரெண்டாம் வகுப்பு படித்த போது , இயற்பியல் ஆசிரியருக்கு என் மேல் கொஞ்சம் கோபம். வகுப்பு முடிய சற்று நேரம் இருக்கும் முன்னரே , அவர் பாடம் நடத்துவதை கவனிக்காமல் , எல்லா புத்தகங்களையும் பையில் எடுத்து வைத்து , தோள் பட்டையில் பையை மாட்டிக் கொண்டு , மணியடித்தவுடன் வகுப்பிலிருந்து ஓடிவிட ஆயத்தமாக உட்கார்ந்திருப்பேன். ஒவ்வொரு நாளும் , நான் செய்யும் ஆயத்தங்களை பார்த்து , அவர் என்னை "கிளர்வுற்ற எலக்ட்ரான்" மாதிரி , ஏண்டா இப்படி வெளியே ஓட ரெடியா இருக்கே என்று திட்டுவார்.

மற்ற திட்டல்கள் மற்றொரு நாளில்....

Wednesday, August 04, 2004

நரகம்+நம்பிக்கை=முன்னேற்றம்

நரகத்தை நம்பும் நாடுகளில் வளர்ச்சி அதிகமாக இருப்பதாகவும் , ஊழல் குறைவாக இருப்பதாகவும் Federal Reserve Bank of St. Louis ஆய்வு அறிக்கை கூறுகிறது.அமெரிக்காவில் 71 விழுக்காட்டினர் நரகம் இருப்பதை நம்புவதாகவும் , அதனால் ஊழல்/தவறு செய்வதை தவிர்ப்பதாகவும் சொல்கிறது இந்த அறிக்கை. இந்த அறிக்கை மதநம்பிக்கைகளை வளர்க்க சில மதவாத நிறுவனங்களால் செய்யப்பட்ட முயற்சி என்று சிலர் குற்றம் சாட்டவும், இந்த பகுதி அறிக்கையில் மாற்றப் பட்டு விட்டது.

நான் குழந்தையாக இருந்த போது , நரகத்தில் கொதிக்கும் எண்ணெய்யில் வறுக்கும் படங்களையும் , மற்ற கொடுமைப் படுத்தப் படும் படங்களையும் பார்த்து சில நாட்கள் பொய் பேசாமல் இருந்ததுண்டு. அதெல்லாம் சில நாட்களே.... .

சொர்க்கத்திற்கு போனா தனியா போரடிக்கும் . நரகம் என்றால் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் . என்ன ? நான் சொல்றது சரிதானே..


அமெரிக்காவில 71 % நரகத்திற்கு பயப்படுகிறார்களா ???!!!!

Monday, August 02, 2004

கரும் துளைகளை காணவில்லை

தற்காலத்து ஐன்ஸ்டீன் என்றழைக்கப் படும் ஸ்டீபன் ஹாகிங் (Stephen Hawking) ( இவரது உடல் நலக் குறைவு மற்றும் கரும் துளைகள் - blackhole பற்றிய கண்டுபிடிப்புகளால் உலக பிரசித்தம் பெற்றவர்) சில நாட்களுக்கு முன் தனது கரும்துளைகள் பற்றிய கருத்து சிறிது பிழைபட்டது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். நான்கு வருடங்களுக்கு முன்பே நம்ம ஊர் அபாஸ் மித்ரா (Abhas Mitra) இதைப் பற்றி கரும் துளைகள் என்பது இல்லவேயில்லை என்று கட்டுரை எழுதியதாகவும் , அப்பொழுது யாரும் அவரது கருத்தை ஒத்துக் கொள்ளவில்லை என்றும் , அவரை அத்துறையிலிருந்தே மாற்றி விட்டதாகவும் Rediff-ல் படித்தேன். சாக்ரடீஸ் காலத்திலிருந்து , இன்று வரை இதே நிலை தான்.

Monday, July 26, 2004

வலைப்பூ

ஈழநாதனின் நீல நிலவு பரிசு கேள்விக்கு சிரத்தையாக கூகிளில் தேடி பதில் சொன்னதற்கு பரிசாக ( வேறென்ன காரணம் இருக்க முடியும்?) , வலைப்பூ ஆசிரியராக இந்த வாரம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.


இந்த வார பதிவுகள் வலைப்பூவில்.




Tuesday, July 20, 2004

பணம் படுத்தும் பாடு

5000 கோடி லாட்டரி அடித்திருக்கிறது திரு.லோதாவிற்கு ஒரு நான்கு வரி உயிலால். அதை எதிர்த்து 17 பிர்லாக்களும் ஒரே அணியில்.காந்தியின் நண்பரான GD பிர்லாவின் உறவு வழியில் இப்படி ஒரு குழப்பமா?.

5000 கோடி உயில் எழுத சொன்னால் இவர்கள் என்ன செய்வார்கள்...

ரஜினி : நதி நீர் இணைப்புக்கு 1 கோடி. இமயமலை to சென்னை சாலை போட 4999 கோடி.அடி வாங்கிய ரசிகர்களுக்கு பட்டை நாமம்.
ஜெயலலிதா:குருவாயூருக்கு 5000 யானை.திருவரங்கத்திற்கு பசு மாடு. மற்றதெல்லாம் உயிர் தோழிக்கு.
கருணாநிதி : உடன் பிறப்பிற்கு 1 கடிதம். தமிழுக்கு 1 கவிதை. மற்றதெல்லாம் கட்சியின் செயற்குழு, பொது குழு முடிவுப்படி இளைஞர் அணி தலைவர் , புது மந்திரிக்கு ......
அப்துல் கலாம்: கனவு காணும் பள்ளி குழந்தைகளுக்கு எல்லாம்.
விஜய்காந்த்: இலவச சைக்கிள் , சேலைக்கு ஒரு கோடி. புகைப்படம், விளம்பரம் , ரசிகர் மன்ற கூட்டங்களுக்கு மற்றதெல்லாம்.
டெண்டுல்கர்: அவுட்சுவிங் பந்து போட்டு அவுட் ஆக்காமல் , அடிக்கிற மாதிரி பவுலிங் போட்ட பவுலர்களுக்கு , ஒரு பந்திற்கு 1000 ரூபாய் வீதம்.
கமல்: (தோழியர்களுக்கு பிரித்து கொடுக்க 5000 கோடி பத்தாது என்பதால் ..)மார்லின் பிராண்டோ என் அப்பா , சிவாஜி என் அப்பா , எம்ஜியார் பெரியப்பா என்று எல்லாரையும் சொந்தம் கொண்டாடுவது போல , எந்த நடிகர் "கமல் என் அப்பா ( மாதிரி....)" என்று சொல்கிறாரோ அவருக்கு. யாருக்கும்
புரியாத மாதிரி ஆங்கில படங்களை காப்பி அடித்த படம் எடுக்க மட்டுமே இந்த பணத்தை பயன் படுத்த முடியும்

அடிப்படை கல்வி , சுகாதாரம், ஆராய்ட்சி என்று எத்தனையோ துறைகளுக்கு 50000000000.00 ( கோடிக்கு எத்தனை சுழி என்று மறந்து விட்டது)  ரூபாய் எவ்வளவோ உதவும். அத்தனையையும் விட்டு விட்டு லட்டு மாதிரி ஒருவருக்கு ( அந்த ஒருவர் நானாக இல்லாத பட்சத்தில்) 5000 கோடி அதிர்ஷ்டம் நியாயமா?
 
சொக்கா... ஒன்றா இரண்டா 5000 கோடியாச்சே?

ஆமாம் , பிர்லாக்களில் ஒரு பிர்லாவிற்கு ஏன் குமாரமங்கலம் என்று பெயர் வைத்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா? 
 

Wednesday, July 14, 2004

வெடிக்காத வெடி

பட்டாசு வெடிக்கும்
என் ஆசை
பட்டுச் சேலை கட்டிய அம்மாவிற்கு
ஏன் புரிவதில்லை?

பட்டுக் கரங்கள்
நெருப்பு பட்டு விடுமென்று
வேடிக்கை பார்க்கச் சொல்லி
வெடிக்க சொல்வது
வேலைக் காரர்களை...

வெடிப்பதை விட
விழும் குப்பையிலும்
வேடிக்கை பார்க்கும் கூட்டத்திலும் தான்
இவர்களின் பெருமிதம்!

வெடிப்ப்து நானில்லை என்று
தெரிந்து வெடிக்காமல்
நீ குப்பையில் ஒதுங்குவது
குப்பையை கிளறும்
சிறுவர்கள் பின்னாளில்
வெடித்து மகிழவோ?

சிவகாசி சிறார்களின்
கைபட்டதாலா உனக்கு
சிறுவர்களின் மனம் புரிந்தது?

Monday, July 12, 2004

கோதண்டராம பிரசாத்

சென்ற வாரம் மறைந்து விட்ட எங்கள் கல்லூரி நண்பர் கோதண்டராம பிரசாத்தை பற்றி சுந்தர்ராஜனின் பதிவு வந்து விட்டது.இந்த பதிவு என்னுடைய நினைவஞ்சலி.

ராகிங்கிற்கு பயந்தும் , கடாமுடா ஆங்கிலத்திற்கு பயந்தும் , தமிழ் மீடியத்தில் 12 வருடம் பயின்று விட்டு , தலையில் தண்ணீர் தெளிக்கப் பட்டு வெடவெடவென்று ஆடும் பலிகிடா போல,
மஞ்சள் பை புத்தக/சாப்பாட்டு மூட்டையை தூக்கிக் கொண்டு , 5 நிமிடம் தாமதமாக முதல் நாள் பொறியியல் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன். இந்த உலகையே (கல்லூரியையே) கட்டிக் காக்க அவதாரம் எடுத்ததாக நினைத்து,நேரம் கிடைக்கும் போதெல்லாம் விடாது அறிவுரை செய்யும் , கடமையுடன் கணிதம் கற்றுத் தரும் , தமிழில் கையொப்பம் இடும் , தி.வீ யின்
வகுப்பு அது. ஏளனப் பார்வையுடன், மேலும் 5 நிமிடம் வெளியே நிற்க வைத்து , நேரம் தவறாமை பற்றி நீண்ட விளக்கம் கொடுத்து மற்ற மாணவர்களெல்லாம் சாமர்த்தியமாக தவிர்த்த முதல் பெஞ்சில் வந்து அமரச் சொன்னார்.அங்கே அருகாமையில் தோழமையுடன் KRP என்று அழைக்கப் படும் , அன்பே உருவான கோதண்டராம பிரசாத்.ஆரத்திற்கும், விட்டத்திற்கும் ஆங்கில வார்த்தைகள் தேடும் போது ஆபத்பாந்தவனாய் உதவியவன். பயம் நீங்கி , மெல்ல நாமும் முதல் நிலையெடுக்கலாம் என்ற நம்பிக்கையை வளர்த்தவன்.

முதல் தேர்வில் , இயற்பியலில் அதிக மதிப்பெண் பெற்ற வரிசையில் அவனையும் , என்னையும் ஒரு முறை வகுப்பெடுக்க சொன்னார் திரு.ஹரிஹரன். நானோ பின்னாளில் படிக்கப் போகிற , பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு எளிய தலைப்பை தேர்ந்தெடுத்து , மேடை பயம் காரணமாக , பேந்த பேந்த முழித்துக் கொண்டு , குரல் நடுங்கி , பிரசவ வேதனையுடன் கடமையென அதை செய்து முடித்தேன். முற்றிலும் மாறாக, பாட சம்பந்தமில்லாத வானியலைப் பற்றி , கொடுக்கப்பட்ட நேரத்தை விடவும் அதிகமாக அதி அற்புதமாக பேசி வகுப்பிலுள்ளோர் அத்தனை பேரயும் அசர வைத்தவன்.பாடப் புத்தகம் தவிர மற்ற பொருளிலும் விருப்பத்துடன் படிக்கலாம் என்று என் அறிவுக் கண்ணை திறந்த நிகழ்ச்சி இது.

பொறியியல் கல்லூரியிம் அத்தியாவசிய தேவை காரணமாக எனக்கு கிடைத்த விலை உயர்ந்த சொத்து கால்குலேட்டர் தான். இயற்பியல் வகுப்பில் ,கால்குலேட்டரில் பெருமையுடன் கணக்கு
போடும் போது , அதை விட வேகமாக கால்குலேட்டர் இல்லாமல் கணக்கு போட்டு , என்னை எத்தனையோ முறை அசர வைத்திருக்கிறான் KRP.

அவன் ஒரு வளர்ந்து விட்ட குழந்தை போல கள்ளம் கபடமில்லாமல் , அதி வேகமாக பேசக் கூடியவன்.அவன் பேசிய மொழி தமிழா , ஆங்கிலமா என்று பல முறை குழம்பியது கூட உண்டு.
ராகிங்கில் , நாங்களெல்லாம் பதில் சொல்ல கூச்சப்படும் பல கேள்விகளிக்கு , யாருமே எதிர்பார்த்திடாத , குபீர் சிரிப்பை வரவழைக்கும் குழந்தைதனமான அவனது நீதி நெறி பதில்கள் பிரசித்தம்.

இரண்டாமாண்டில் , நான் மின்னியலும் , KRP மின்னணுவியலும் எடுக்க , எங்கள் நட்பு மெல்ல தேய்ந்து , வெறும் ஹலோ சொல்லும் அளவிற்கு சென்றது

கடைசியாக பார்த்தது , பெங்களூர் இரயில்வே நிலையத்தில்.சூரத்தில் பிளேக் நோய் பரவிக் கொண்டிருந்த போது, அதை பொருட்படுத்தாமல் வேலைக்கு சூரத் சென்ற நண்பன் முத்தையாவை
வழியனுப்ப சென்ற போது,அங்கே அப்பொழுது MBA முடித்து விட்டு , அனைவரின் கனவிடமான Infosys-ல் வேலைக்கு சேர்ந்திருந்த KRP அதே உற்சாகத்துடன் வந்திருந்தான்.

பல வருடங்களுக்குப் பிறகு , ஏதோ ஒரு உந்துதலில் , நான்கு வருட சிங்கப்பூர் வாழ்க்கையை உதறி தள்ளி விட்டு, மனைவியையும் குழந்தையையும் இந்தியா அனுப்பி விட்டு ,
அமெரிக்க வந்த போதும், காரில்லாமல் , Driving license/Credit Card இல்லாமல் , நிரந்தர வேலையில்லாமல் , ஏனடா அமெரிக்கா வந்தோம் என்று அனைவரும் நொந்து கொள்ளும் ஆரம்ப கால கட்டத்தில் , நம்பிக்கையை ஊட்டியவர்களில் ஒருவன் "மீண்டும்" KRP. Yahoo groupsல் நண்பர்களைப் பற்றி சுவை பட அவ்வப் பொழது எழுதி வந்த KRP யின் முடிவும் , அதே Yahoo groups-ல் வந்த போது ( இப்பொழுதும் ) சற்றே பிரமை போன்றே உள்ளது.

"தொடர்ந்த உற்சாகம் அறிவின் மிகத் தெளிவான அடையாளம்" என்ற பொன்மொழி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதற்கு KRP தான் சிறந்த உதாரணம்.

Wednesday, July 07, 2004

லு டாப்ஸ்

லு டாப்ஸ் (Lou Dobbs) சிஎன்என்னில் நேற்றைய "Moneyline" / இன்றைய "Lou Dobbs
Tonight" நிகழ்ச்சியை திறம்பட நடத்துபவர். 2001-ல் சிஎன்எனின் "Moneyline" நிகழ்ச்சிக்கு திரும்ப பொறுப்பெடுத்த போது வணிகத்தை பற்றி அதிகம் பேசாமல் , அரசியல்/ பொது நிகழ்ச்சிகளை பற்றி , அதிகம் பேசுகிறாரே என்று நினைத்த போது , அதன் பெயரையே "Lou Dobbs Tonight" என்று மாற்றி விட்டார்கள்.

சமீப காலமாக "Exporting America" அவரது நிகழ்ச்சியில் நீக்கமற நிறைந்து விட்ட ஒரு அங்கமாகி விட்டது.சம நிலைப்பாடை எடுக்காமல் , சரியோ/தவறோ அவரது ஒரு நிலைப்பாடான கருத்தை திணிக்கிறாரே (மைக்கேல் மூர் போல) என்று நினைத்து கோபமடைந்ததுண்டு. ஆனால் அவர் சொல்வதிலும் சற்று நியாயம் இருப்பது புரிந்தது.

பொதுவாக நிகழ்ச்சியை வழங்குபவர்கள் , வாதம்/எதிர்வாதம் செய்ய ஒரு கருத்தின் இரு புறம் உள்ளவர்களை அழைத்து , விவாத்தை நடுநிலை தவறாமல் நடத்தி செல்வார்கள். இல்லாவிட்டால் "Meet the Press" Tim Russert மாதிரி ஒருவரை அழைத்து , அவரது நிலைப்பாட்டிற்கு எதிர் நிலையில் இருந்து கேள்விகள் கேட்டு உண்மையான பதிலை வரவேற்பார்கள். ரபி பெர்னார்ட் கூட இது மாதிரி சிறப்பாக செய்து வந்தார் ( அம்மாவிடம் பேட்டி காணும் போது காட்டிய பவ்யம் தவிர).

மைக்கேல் மூர் கருத்தை ஆதரிக்க முடிந்த நம்மால் , ஏன் லு டாப்ஸ் சொல்வதை ஆதரிக்க முடியவில்லை?.(ஜீன்களின் வேலையாக இருக்குமோ?)

குப்பனும் , சுப்பனும் செய்கிறான் என்று , வேலையை கண்மூடித்தனமாக ஏற்றுமதி செய்யாமல் , அவரவர் தொழிலின் தேவைக்கேற்ப செய்ய வேண்டும். தொழிலாளர் , சுற்றுச் சூழல் சட்ட திட்டங்களும் ஏறத்தாழ சமமாக இருக்க வேண்டும். அதற்கேற்ப "Most Favored Nation" / Tax System இருக்க வேண்டும்.அப்பொழுது தான் "Global Work Force" என்ற பதத்திற்கு உண்மையான அர்த்தம் இருக்கும்.

Sunday, July 04, 2004

மரண தண்டனை ?

மரண தண்டனை சரியா , தவறா என்ற விவாதம் பற்றியது அல்ல இந்த பதிவு.கல்கத்தா சிறுமியின் கொலை வழக்கு குற்றவாளியின் கருணை மனு பற்றியும், அதைத் தொடர்ந்து விருமாண்டி மாதிரி மரண தண்டனை தேவையா இல்லையா என்று விவாதித்தும் பல பதிவுகள் வந்து விட்டது.அதனால் அதைப் பற்றி இங்கே விவாதிக்கவில்லை.

கருணை மனுவை பரிசீலிக்கும் ஜனாதிபதியின் மன நிலை எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். ஒரு உயிர் குறித்து முடிவு எடுப்பது எவ்வளவு கடினமான விஷயம். இது போல் எண்ணற்ற வழக்குகளில் தண்டனை வழங்கும் நீதிபதிகள் ஒவ்வொரு முடிவு எடுக்கும் போதும் எவ்வளவு கஷ்டப் பட வேண்டியிருக்கும்.

சிறு விஷயங்களில் கூட முடிவெடுக்க திணறும் ,"எண்ணித் துணிக கருமம்" என்ற வள்ளுவரின் வாக்கை என்றென்றும் எண்ணி முடிவெடுத்தாலும், பின்னாளில் தவறான முடிவென்று வருந்தும் என்னைப் போன்ற எண்ணற்றவர்களைக் கொண்ட சமுதாயத்தில் இருந்து தான் இத்தகைய நீதிமான்கள் தோன்ற வேண்டியுள்ளது.

குற்றம் புரிந்தவர் யார் என்று சரியாக கண்டு பிடிப்பதும், குற்றத்தின் அளவிற்கேற்ப தண்டனை வழங்குவதும் மிகக் கடிய பணி. அதை தொண்டென புரியும் , நீதி தவறாத , தண்டனை கொடுக்க அஞ்சாத, சரியான முடிவெடுக்கும் ,கடின சித்தம் படைத்த நீதிமான்கள் , மானிட சமுதாயம் சரியான வழியில் என்றும் சென்றிட மிக மிக தேவை.

Wednesday, June 30, 2004

பாரத் ரத்னா

இந்த முறையும் பாரத் ரத்னா விருது அறிவிக்க(வழங்க) படவில்லை. கொஞ்ச காலம் "லேட்டா லேட்டானவர்களுக்கே" வழங்கப் பட்டு வந்தது. அதற்கு பின் கொஞ்சம் காலா காலத்தில் வந்தது.இப்ப மறுபடியும் மக்கர் பண்ண ஆரம்பித்து விட்டது.மற்ற எல்லா "பத்ம" விருதுகளுக்கும் எளிதாக தேர்வு செய்ய முடியும் போது (சுலுவா ஆள் கிடைக்கும் போது ), இதற்கு மட்டும் என்ன கஷ்டம்?.எல்லா விருதுகளுடன் இதனையும் அறிவித்தால் ,இதற்கான மதிப்பு குறைந்து விடுமோ?.நோபல் பரிசு மாதிரி வருடா வருடம் , கண்டிப்பாக "பாரத ரத்னா" விருது வழங்க எப்ப வழி பிறக்குமோ?.இணையத்தில் ஒரு பெட்டிஷன் போட்டு , ஓட்டு வேட்டை ஆரம்பிக்கலாமா? ( தேசபக்தி மிக்கவர்கள் , கடமையாக எப்பொழுதோ ஹலோ சொன்னவர்களுக்கு கூட forward பண்ண ஆரம்பித்து விடுவார்கள்). அடுத்த பாரத் ரத்னா யாருக்கு கிடைக்கும் என்பது எனக்கு நல்லா தெரியுது.உங்களுக்கு?

Tuesday, June 29, 2004

மாட்டி ஸ்டெபனெக் ( MATTIE STEPANEK )

Muscular Dystrophy Association-ன் நல்லெண்ண தூதுவராக திகழ்ந்த, அற்புதமான கவிதைகள் எழுதிய 13 வயது மாட்டி ஸ்டெபனெக் ( MATTIE STEPANEK ) சென்ற வாரம் மரணமடைந்த செய்தி என்னை கலங்க வைத்ததுடன் , மனித வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை உணர்த்தியது.மனித சமுதாயத்தின் மூட நம்பிக்கையின் மீதான கோபத்தையும் எனக்கு இந்த சம்பவம் ஏற்படுத்தியது.

சிஎன்எனின் லேரி கிங் நிகழ்ச்சியில் பார்த்ததினால் எனக்கு MATTIE-யின் கதை தெரியும். பிறந்தவுடன் இறந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு உடல் நலக் குறைவுடன் பிறந்த இந்த குழந்தை , மரணத்தை எதிர்பார்த்தே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தது. 13 வயதிற்குள் எழுதிய கவிதைகளின் ஆழமும், வாழ்க்கையை எதிர் கொண்ட முறையும் உலகம் முழுவதும் பிரபல மடைய வைத்தன.Muscular Dystrophy பற்றி இணையத்தில் நான் படித்திருக்கிறேன்.

Muscular Dystrophy மற்றும் அது மாதிரியான தசைகளை பாதிக்கும் , நரம்பு மண்டலத்தை பாதிக்கும் குறைகள் பரம்பரையாக வரக் கூடியவை என்பதும் , ஆண் குழந்தைகளை அதிகம்
பாதிக்கும் என்பதும் , இவற்றை குணப்படுத்த மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை என்பதும் கொடுமையான விஷயங்கள். நம்ம ஊரில் ஊழ்வினை என்றும், செய்வினை என்றும் இத்தகைய
நோய்கள் கண்டு கொள்ளப் படுவதில்லை. stem cells research இது போன்ற நோயில் வாடும் எண்ணற்ற குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும். ஆனால் , stem cell ஆராய்dசியின் சில வகைகள் தடை செய்யப் பட்டிருப்பதும் , மேற்கத்திய நாடுகளில் இதற்கு காணப்படும் எதிர்ப்பும் , மருத்துவ முன்னேற்றத்தை தாமதிக்க செய்கிறது. அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சி , மனித சமுதாயத்திற்கு எதிராக அமைந்து விடும் என்பது இவர்களின் மூட நம்பிக்கை. ஆயிரம் கை கொண்டு மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது.

மேலும் தகவலுக்கு http://www.mdausa.org/mattie/remember.cfm

Monday, June 28, 2004

களைப்பு

குறுக்கே போகும் பூனையையும்
காணவில்லை.

சகுனம் பார்த்து வழியனுப்பும் அம்மாவும்
வரவில்லை.

வேலை தேடி களைத்தது
நான் மட்டும் இல்லை...


கவிதை குறிப்பு : 21-30 வயதில் ctrl+c, ctrl+v வேலை பார்ப்பவர்களுக்கு இந்த களைப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Thursday, June 24, 2004

வட்டி

கூட்டலில் ஆரம்பித்து
பெருக்கலில் முடிந்து
மகிழ்ச்சியை கழித்து
கஷ்டத்தை வகுத்த
விசித்திர கணக்கு
கடனுக்கு கட்டிய
வட்டி

Monday, June 21, 2004

விண்கப்பல்ஒன்று

மைக்ரோசாப்ட் நிறுவனர் பால் அலெனின் பண உதவியுடன் செய்யப்பட்ட விண்கப்பல்ஒன்று (SpaceShipOne) வெற்றிகரமாக பறந்து சசாதனை புரிந்துள்ளது. 10 வருட கடின் உழைப்பு தந்த சாதனை இது.
3 நபர்களை பத்திரமாக பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் அனுப்பி உயிருடன் மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து சேர்க்கும் ( 2 வாரத்திற்குள் , அதே விண்கலத்தில் அந்த சாதனையை திரும்ப செய்ய வேண்டும்) விண்கலத்தை தாயரிக்கும் நிறுவனத்திற்கு

காத்திருக்கிறது 10 மில்லியன் பரிசுத் தொகை. இந்த முயற்சி அந்த பரிசுத் தொகையை குறி வைத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுப் போட்டி , ஆராய்ச்சிகளை ஊக்குவித்து, எல்லாருக்கும் வாண்சுற்றுலா கட்டுபிடியாகும்படி செய்வதே அதன் நோக்கம்.
2020 வருடத்தில் 100,000$க்கு டிக்கெட் கிடைக்கும் என்கிறார்கள். Priceline-ல் முயற்சி செய்தால் கொஞ்சம் cheap-பாக கிடைக்கலாம்.

நம்ம இதிகாசங்களில் வருகின்ற விமான வகைகளையும் , அஸ்திரங்களையும் (missile) பார்க்கும் போது ,எனக்கென்னவோ இந்தியாவில் அந்த காலத்திலேயே இத்தகைய சாதனையுல்லாம் செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.
கொஞ்சம் தொல்பொருள் ஆராய்ச்சி செய்தால் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கலாம் என்று நம்புகிறேன்.கிடைத்தால் 10மில்லியன் நாமும் claim- பண்ணலாம்.
"உலகை முதலில் சுற்றி வந்தது யார் என்று அறிவியல் பரீட்சையில் கேட்டால் , ஏதாவது வாய்க்குள் நுளையாத பெயரை எழுதாமல் , முருகன் என்று எழுதுணும்டா " என்று எங்கள் தமிழாசிரியர் கம்பீரமாக முழங்குவார்.
அந்த காலத்திலேயே நாம எல்லாம் கண்டு பிடுச்சிட்டோம். எதையும் முறையாய் எழுதி வைக்காமல், மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் நம்ம சமுதாயத்தின் அரிய கண்டுபிடுப்புள் எல்லாம் அழிந்து விட்டது என்று வருத்தப்படுவார்.
"அர்த்தமில்லாமல் நாம செய்கிற பல விஷயங்களுக்கு ரொம்ம மெனக்கெட்டு அர்த்தம் கண்டிபிடித்து அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன் மாதிரி , அறிவியல்பூர்வமான இந்திய வரலாறு என்று நீங்கள் யாரவது எழுதணும்டா" என்று வேண்டுவார்.
கம்பராமாயணத்தில் , இராவணன் சீதையை தூக்கிச் செல்லும் போது, விமானம் ஓடிச்சென்று மேல் எழும்பியது என்று takeoff பற்றி விவரித்திருக்கிறார் என்று ஒருமுறை நண்பர் ஒருவர் கூட சொன்னார் .
அதை படிக்காமல், சென்ற நூற்றாண்டில் விமானம் கண்டு பிடிக்க முயற்சி செய்தவர்களெல்லாம் , மலையிலிருந்து குதித்து விமானத்தை பறக்க விட முயற்சித்தார்கள். பல முயற்திகளிக்கு பின் தான் runway/takeoff மகத்துவம் புரிந்தது அவர்களுக்கு என்று

சொன்னார். எனக்கு கம்பராமாயணம் படிக்கும் அளவுக்கு புலமையில்லாததால் அவர் சொன்னதை சரி பார்க்கவில்லை.ஆனால் அவர் சொன்ன விஷயம் என் பழைய நம்பிக்கையை வளர்த்தது. அந்த நம்பிக்கையில் நானும் , என்னை போல் நம்பும் நண்பர் ஒருவரும்

செய்த தேடலில் ( வேறெங்கே , இணையத்தில் தான் அந்த தேடல்) கிடைத்த தகவல்களை பின்னொரு நாளில் பதிகிறேன்.


இப்படி பழங்கதை பேசி , தொல்பொருள் ஆராய்ட்சி செய்து தான் இத்தகைய பரிசுகளை வாங்க எண்ண முடியும் என்ற காலமெல்லாம் கரையேறி , உலக அளவிலான போட்டிகளில் நம்மவர்கள் கலந்து கொள்வதை படிக்குக் காலம் விரைவில் வரும் ( வந்து விட்டது என்று சிலர் சொல்வது கேட்கிறது).