Wednesday, October 13, 2004

சிரஞ்சீவி தோசை

சிவாஜி கணேசன் மாதிரி பல அவதாரங்கள் எடுக்கக் கூடிய ஒரே உணவு வகை தோசை தான்.வீட்டில் பெரும்பாலும் சாதா தோசை தான். அவ்வப் பொழுது குழந்தைகளை குஷிப் படுத்த , சின்ன தோசை , வெவ்வேறு வடிவங்களில் செய்து அசத்துவதுண்டு. முறுகல் தோசை மேல் எனக்கு
தனி காதலே உண்டு.

உணவகங்களில் பெரும்பாலும் மாசாலா தோசை மற்றும் ரவா தோசை பொதுவாக காணப்படும். விஜிபி தங்க கடற்கரை மூலம் "குடும்ப தோசை" ரொம்ப பிரபல்யம்.உணவு மேசை கொள்ளாத "குடும்ப தோசை" செய்வதை பார்க்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை. நகைச்சுவை துணுக்குகளில் அடிக்கடி பேப்பர் ரோஸ்ட் வந்து செல்லும்.கொஞ்சம் கனமானவர்களுக்கு நெய் தோசை , அசைவ பிரியர்களுக்கு முட்டை தோசை என்று சகலமானவர்களின் ருசிக்கேற்ப பலவகைகளில் கிடைக்கும் தோசை "ஆசை தோசை" என்ற சொற்தொடரில் இடம்பெற்றதில் ஆச்சர்யமில்லை. :)

வழக்கமான உணவு வகைகளில் அலுப்படைந்தவர்கள் வெங்காய தோசை , தக்காளி தோசை என்று எதை வைத்து வேண்டுமானலும் தோசை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பெங்களூரில் இருந்த போது மைசூர் மசாலா தோசை என்று கார சட்னி உள்ளே வைத்து கூம்பு வடிவத்தில் தோசை செய்து , உச்சியில் வெண்ணெய் ( கொக்கு பிடிப்பது போல) வைத்து கிடைக்கும். அதே போல ஆந்திரா தோசை உப்புமாவை உள்ளே வைத்து 2-இன் - 1 ஆக கிடைக்கும்.

அலுவலக நிமித்தம் பயணம் செய்யும் போது , பணத்தைப் பற்றி கவலைப்படாமல் , பயணப்படியின் மேல் பாரத்தை போட்டு விட்டு , நல்ல உணவகம் சென்று ஒரு வெட்டு வெட்டுவதில் அலாதியான சுகம் உண்டு. கடந்த மாதம் ஹைதராபாத் சென்றிருந்த போது , ஒரு மாலை நேரம் , "சட்னி" உணவகம் சென்றிருந்தேன்.புதிதாக என்ன சாப்பிடலாம் என்று உணவு பட்டியலை பக்கம் பக்கமாக தேடிக் கொண்டிருந்த போது , ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு பிடித்தமான தோசை என்று குறிப்பிடப் பட்டிருந்த தோசை கண்ணில் பட்டது. உடனே நானும் சூப்பர் ஸ்டாராக ஆசைப்பட்டு , அதை வாங்கி சாப்பிட்டேன். எண்ணெய் இல்லாமல் , இட்லி போல ஆவியில் சமைக்கப்பட்டு , ஊத்தப்பம் போல உப்பலாக , ஆப்பம் போல மெத்து மெத்தென்று , இடியாப்பம் போல சுவையாக இருந்தது சிரஞ்சீவி தோசை. வாய்ப்பு கிடைக்கும் போது தவற விட்டு விடாமல் ருசி பாருங்கள் நண்பர்களே !!!

இதன் புகழ் பற்றி இன்னும் தெரிய வேண்டுமானல் கூகிளில் "chiranjeevi dosa" என்று தேடிப் பாருங்கள் அல்லது http://timesofindia.indiatimes.com/articleshow/22857624.cms படித்துப் பாருங்கள்.

Friday, October 01, 2004

எரிமலை எப்படி பொறுக்கும்

எங்க ஊர் எரிமலை ஹெலன்( அந்த கால ஆட்ட நாயகி பேர் மாதிரி இருக்கா?)ஸ் கொஞ்சம் குமுற ஆரம்பித்திருக்கிறது.சிவப்பு மல்லி படத்தில் , சந்திர சேகர் தொண்டை நரம்புகள் தெரிக்க உணர்ச்சி பூர்வமாக "எரிமலை எப்படி பொறுக்கும்" என்று எரிமலைகள் எல்லாம் கம்யூனிஸ்ட் சொந்தகாரர்கள் மாதிரி வாயசைத்து செல்வார்.நேரில் பார்த்த போதுதான் , இயற்கையின் உக்கிரம் தெரிந்தது. இப்பொழுதெல்லாம் சீஸ்மோகிராப் வைத்து கிட்டத்தட்ட எப்பொழுது எரிமலை வெடிக்கும் என்று அபாய அறிவிப்பு முன்னெச்சரிக்கை கொடுத்து விடுகிறார்கள்.
இப்பொழுதெல்லாம் பல மனிதர்கள் எரிமலை மாதிரி அவ்வப்பொழுது வெடித்து விடுகிறார்கள். அதெற்கெல்லாம் முன்னெச்சரிக்கை கிடைத்தால் நன்றாக இருக்கும்.
http://www.fs.fed.us/gpnf/mshnvm