Wednesday, November 30, 2005

மூணாம் கிளாஸ் கவிதை

நாம எழுதறது எப்பவுமே மூன்றாம் தர கவிதைதானே , இதில தலைப்பு என்னத்துக்கு மூணாம் கிளாஸ் கவிதை என்ற கேள்வி நியாயம் தான்.
இது நான் தத்துபித்துன்னு எழுதினது கிடையாது. மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகள் , பள்ளியில் நடந்த "Reflections" என்ற தலைப்பில் நடந்த கலைப் போட்டியில் பங்கு பெற்று

எழுதியது. போட்டியில் பங்கு பெற்றவர்களில் முக்காலே மூணு விசம் பேர் ஓவியம் வரைந்திருந்த போது , கவிதை எழுதின ஒரே ஒரு ஆளு , நம்ம வாரிசு தான்.

Earth , dear Earth
Hope you like
you're Birth !

I Wonder
what it feels like
Covered in Dirt !!

You look so beautiful
And different too!

I wonder
Almost everything about you !!

I bet everyone
loves you And
wonders about you too!!!

Reflections judge comments:
The use of rhyme in this work was quite successful. Earth/Birth and then the use of "dirt" on the following line of the

couplet show and ability to be flexible with rhyme and was excellent.

பரிசு - அப்பா மாதிரி தான் :) !!!

Tuesday, November 29, 2005

சிறந்த மதம்

வலைப்பதிவுகளில் அவ்வப் பொழுது சிலர் தங்கள் மதத்தின் சிறுமைகளையும் , அவற்றின் பாதிப்புகளையும் புரட்சியாளர்களாக பதிப்பதை படித்ததுண்டு.வேறு சிலரோ மற்ற மதத்தின் குறைகளை விலா வாரியாக தொடர்ந்து எழுதுவதை முழு நேர தொழிலாக கொண்டுள்ளதை கண்டு வி(ப)யந்ததுண்டு. ஒருவர் முப்பது ஆண்டுகள் வாழ்ந்த மதத்தை விட , மூன்று மணி நேரம் சென்ற ஒரு நாட்டின் கோவிலின் கதையை கேட்டறிந்து , அதுதான் சிறந்த மதம் என்று எழுதியதை பார்க்க நேர்ந்தது. அவர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாத காரணத்தால் , அவர்கள் அவ்வாறு எழுதுவது எதனால , எந்த பாதிப்புகளினால் என்று ஊகிக்க முயற்சி செய்ததுண்டு.

நான் சில வருடங்களுக்கு முன் வேலை பார்த்த பிரிவின் இயக்குநராக பணி புரிந்தவர் , சென்ற வருடம் அந்த வேலையை விட்டு விட்டு சால்ட் லேக் சிட்டி பக்கம் பல்கலையில் ஆராய்ச்சி மாணவராக/பயிற்சியாளராக சென்றார். அவரின் பதிவில் , ஊடகங்களில் மிகவும் விமர்ச்சிக்கப் படும் மோர்மொன் பற்றியும் , அதன் குறைகளை கூறி விலகுபவர்களிடம் அணுக வேண்டிய முறைகளைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து பதிந்துள்ளார். அதில் Slide 36 - "Things for them to consider" என்பது எந்த ஒரு மதத்திற்கும் , அமைப்பிற்கும் பொருந்தும். அதன் சாரம்சம் பிழையற்ற (அல்லது பெரும் குறைகள் இல்லாத) அமைப்பு என்று எதுவுமே இல்லை எனும் பொழுது , எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு தனி மரமாக இருப்பதை விட , தான் சார்ந்துள்ள அமைப்பை அதன் நிறைகளை , தனக்கு ஒத்த கருத்துக்களை மட்டுமே பின் பற்றி ,குறைகளை களைவதே சிறந்தது என்பதாகும்.மதவாதிகள் சொல்வதை மந்திரமாக கண்மூடித்தனமாக அது மட்டும் தான் உண்மை என்று நம்பாமல் , அவர்கள் தவறு செய்திருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்று புரிந்து கொள்வது அவசியம் என்ற கருத்தும் அருமை.

1) Is perfection, or even the lack of major flaws, the measure of affiliation/relationships?
1.a) Where is the perfect XYZ? Government? Business? Marriage? Family?
1.b) If "lack of major flaws" were the criteria, what relationship would survive?
2) Do we ever have an obligation to help make things better, vs. pack up and leave?
3)Forget "true".... consider "good"
4) What will bring you the most joy?
5) Look to the XYZ as a good place to SERVE
6) You CAN be a XYZ on your own terms - At the core, everyone is

மோர்மொன் அல்லது வேறு எந்த மதமானாலும் , அதன் பற்றிய குற்றசாட்டுகளை சரி என்றோ அல்லது தவறு என்று நியாப்படுத்தியோ அல்ல இந்த பதிவு.

Saturday, November 19, 2005

பீட்டர் ட்ரக்கர்

நாளைய நிர்வாக துறையில் தோன்றக் கூடிய போக்குகள் இன்றே தெரியும் மந்திரக் கண்ணாடி போலும் அவரது மூக்கு கண்ணாடி என்று குறிப்பிடும் படியான ஆளுமை படைத்தவர் பீட்டர் ட்ரக்கர் (Peter F. Drucker).

சில வருடங்களுக்கு முன் சிஎன்என்னில் அவரைப் பற்றிய விவரண படத்தை பார்த்த மாத்திரத்தில் , அவரது கட்டுரைகளையும் , புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன்.
காலங்களை கடந்த சிந்தனையோட்டம் அதில் தெளிவாக தெரியும்.நிர்வாக மேலாண்மை மட்டுமின்றி , சமூக , பொருளாதார மாற்றங்களையும் அலசும் தன்மை என்னை மிகவும் கவர்ந்தது. சேவை நிறுவனங்களை நிர்வாகிப்பது மற்றும் அவற்றின் தாக்கம் பற்றிய அவரின் கருத்துக்கள் , புதிய பார்வையை தந்தது.

வர்த்தக மேலாண்மை பட்டப் படிப்பு படித்திராத என்னைப் போன்றோர்க்கு , படிக்கத் தூண்டும் பயனுள்ள பல படைப்புகள் தந்தவர். மேலும் இன்று என்னைப் போன்றோருக்கு சோறு போடும் "Knowledge worker" என்ற பதத்தை தந்தவர். அண்மையில் தனது 95வது வயதில் நிறைவான வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தை முற்றிலுமாக நிறைவடைந்தார்.

Monday, November 07, 2005

கடற் கன்னி

சாண்டில்யன் கதை மாதிரி தலைப்பை பார்த்தவுடன் , இதை மேலும் படிக்க கிளிக் செய்ய நினைப்பவர்கள் மன்னிக்க.இது சென்ற வாரம் , கடற்கன்னி கதைகளை படைத்த ஹான்ஸ் கிர்ஸ்டின் ஆண்டெர்சன் சொந்த நாட்டிற்கு நான் அலுவல் நிமித்தம் சென்ற பயணக் க(கு)ட்டுரை.


சென்ற வாரம் அலுவல் நிமித்தம் கோபன்கேஹன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் சென்று பார்த்தது அங்கு இருந்த கடற்கன்னி சிலையை தான்.அமெரிக்காவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ,இதை பார்க்க வரும் முன் , வழிகாட்டுபவரிடம் ,இதை ஏறிப் பார்க்க , மின் தூக்கி இருக்கின்றதா என்று விசாரித்துக் கொண்டே வருவார்களாம்.இந்த இடத்தைப் பார்த்தபின் , அசடு வழிவது சகஜம் என்று அலுவலகத்தில் ஒருவர் சொன்னார். கடற் கன்னி சிலை நம்மை விட சிறியதாக இருக்கும்:)

கோபன்கேஹன் டென்மார்க்கின் தலை நகரம். குழந்தைகளுக்கு லெகோ ப்ளாக் , வளர்ந்த குழந்தைகளுக்கு கார்ல்ஸ்பெர்க் , மற்றவர்களுக்கு குக்கி என்று ஏதாவது ஒரு வகையில் டென்மார்க் பரிச்சயமான நாடு தான்.

ஆனால் நான் அறியாதது , (கடற்கன்னியை தவிர) மிதிவண்டிகளின் தலை நகரம் இது என்பது தான்.எங்கு பார்த்தாலும் சைக்கிள்கள் தான். டென்மார்க்கின் மொத்த மக்கள் தொகை ( 6 மில்லியன்) கிட்டத்தட்ட சிங்கப்பூர் அளவு தான்.மக்கள் தொகை அளவிற்கு சைக்கிள்களின் தொகையும். அது தவிர தலைசிறந்த கட்டிட நிர்மாணிகள் , கலை ல்லுனர்கள் இங்கு அதிகம் போலும். கடந்த 1000 வருடங்களின் தலைசிறந்த பல கட்டிட கலைகளையும் ஒருங்கே காணலாம்.

மற்றொரு ஆச்சர்யம் பயணம் செய்த இரயிலில் ஒவ்வொரு முறையும் , பரிசோதகர் வந்து 100% டிக்கெட்டை பரிசோதித்தது தான். ( ஹிஹி. என்னை மட்டும் இல்லை. எல்லாரையும் தான்.)