Thursday, December 29, 2005

சரியா ! தவறா ? - 2

சரியா தவறா - 2

முடிவு என்பது ஒரு தெரிவு. ஒரு வழியில் செல்ல முடிவெடுத்தவுடன், மற்ற வழிகளில் செல்வது இல்லை என்றாகிவிடும் போது, எல்லா வழிகளுக்கும் அதற்கென்ற தர்க்கம், உத்வேகம், நியாயங்கள் இருக்கையில்முடிவெடுக்கும் போது கருத்து மோதல்கள் வருவது இயல்பு.

ஆனால் முடிவு செய்வதை கருத்து மோதல்களை சமாளிப்பதாக மட்டும் எடுத்துக் கொண்டால் சரியான முடிவு அமையாது. ஒரு பிரச்சனையை ,தீர்வின் ஆரம்பமாக பார்க்கும் அளவிற்கு ,எண்ணங்களை விரிவடையச் செய்வதன் மூலமே , சரியான முடிவை அடைய முடியும்.

முடிவெடுப்பதிற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது மாற்றத்தைப் பற்றிய பயம் தான். எல்லா தெரிவுகளும் செயலுக்கு வழிகோலும். செயல் மாற்றத்தை உண்டு பண்ணும். விருப்பமில்லாத விஷயத்தில் முடிவெடுப்பதில் தடுமாறுவதை விட,திருமணம், வேலை மாறுதல் போன்ற நல்ல மாற்றங்களுக்கான முடிவெடுப்பது இன்னும் கடினமான ,அழுத்தமான செயல்.

தர்க்க அறிவும் (காரண காரணிகளும்) , மன உணர்வுகளும் , முடிவெடுப்பதில் சம ஈடுபாடு கொண்டவை. உணர்வுகளுக்கும் இடம் கொடாமல் ,வெறும் காரணங்களை மட்டும் ஆராய்ந்தால் எதிலும் நிலையான முடிவெடுக்க முடியாது. ஏனெனில் , உலகுன் பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று முரணானவை. உணர்வோடு ஒட்டிய பகுத்தறிவு தான் , நம்க்கு ஒத்த நல்ல பாதையை தேர்ந்தெடுக்க உதவம்.

செயல்படுத்தப் படாத எண்ணமும் , எண்ணாமல் எடுத்த செயலும் இல்லாமைதான்.கண நேரத்தில் எடுத்த பல முடிவுகள் சரியாக அமையும் போது , யோசித்து முடிவெடுப்பது தேவைதானா என்ற கேள்வியை எழுப்பும்.அதும் யோசிப்பது கடினமாகவும் , மன அழுத்தை தரும் போதும் , அது கொண்டு வரப் போகும் மாற்றத்தைப் பற்றிய பயத்தை பெரிதாக்கும் போதும் , எதற்காக யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று தோன்றும்.
யோசித்து முடிவெடுப்பது , நம்மை முடிவின் மாற்றத்திற்கு தயார் செய்யும். வெற்றியுன் வாய்ப்புகளை இது அதிகரிக்கச் செய்யும். எனினும் , சில சமயங்களிம் மன உண்ர்வுகள் உந்தி தள்ளும் கண வேர முடிவுளும் சரியாக இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

மகிழ்ச்சியைத் தேடி

ஒரு பூனை தன் வாலை கவ்வி பிடிக்க தொடர்ந்து முயற்சி செய்து சுற்றி சுற்றி வந்ததாம்.அதைப் பார்த்த நகைத்த மற்றொரு பூனையிடம் , பூனைகளின் மகிழ்ச்சி அதன் வாலில் தான் இருக்கிறது என்பது தெரிந்ததால் தான் , என் வாலை பிடிக்க சுற்றி வருகிறேன் என்றதாம். அதைக் கேட்ட இரண்டாவது பூனை, அது எனக்கும் தெரியும். நம் வாலைப் பிடிக்க நாமே முயன்று சுற்றி வந்தால் , வால் நம்மை விட்டு விலகியே செல்லும் என்பதும் எனக்கும் தெரியும். அதை விட்டு , நம் வேலையை பார்க்க போனால் , சந்தோஷம் இருக்கின்ற வால் விலகிச் செல்லாது , நம் பின்னே வரும் என்றதாம்.

மேலே குறிப்பிட்ட தகவல்கள் சேகரிக்க உதவிய தளம் http://www.gita-society.com/section2/dharmic-management.htm

Monday, December 19, 2005

இந்த ஆண்டின் சிறந்த நபர்(கள்)

டைம் - இந்த ஆண்டின் சிறந்த நபர்(கள்) விருது

போனோ,மெலிண்டா,பில் இவர்களுக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள், பொது சேவைக்கு பெருமளவிற்கு பணம் செலவளிப்பதில் ஆச்சரியமில்லை என்றாலும், அவர்களின் ஈடுபாடும் , தன்னார்வமும், திட்டமிடலும்,தெளிந்த கூர்மையான நோக்குடன் தேர்ந்தெடுத்து செய்யும் காரணங்களும் , அதனால் ஏற்படும் விழிப்புணர்வும் , தாக்கமும் அளவிட முடியாதவை. தனி மனிதர்கள் , தொண்டு நிறுவங்கள் முதல் அரசாங்கங்கள் , உலக அமைப்புகள் வரை இதனால் கற்றுக் கொள்ள கூடியது நிறையது.

பில் கேட்ஸ்-ன் நிறுவனத்தைப் பற்றி மாற்று கருத்து கொண்டவர்கள் கூட மறுக்க இயலாத கருத்து. நேபெல் பரிசு கிடைத்திட வாழ்த்துக்கள்.பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை அடைய லட்சியம் கொண்டவர்கள் இதையும் இனி கவனித்திட வேண்டும்.


http://www.time.com/time/magazine/article/0,9171,1142278,00.html

Wednesday, December 14, 2005

சரியா ! தவறா ?

ஆய கலைகள் அறுபத்து நான்கில், முடிவெடுக்கும் ( முடி எடுக்கும் அல்ல) கலை தான் என்னை கவர்ந்தது போல. அது பற்றி என்ன கட்டுரை வந்தாலும் என்னை ஈர்த்து விடுகிறது.
"சரியான முடிவெடுப்பது கடினமல்ல. எடுத்த முடிவை சரியானதாக்குவது தான் கடினம்" (The problem is not to make the right decision; it's to make the decision right) என்ற மேற்கோளை சுட்டிக் காட்டிய பெரடரிக் ப்ரூக்ஸ் (Frederick Brooks)-ன் Fortune பேட்டியை படித்தவுடன் பிடித்து விட்டது.

http://www.fortune.com/fortune/print/0,15935,1135298,00.html

ஒரு முடிவின் இருபக்கம் 80/20 என்று கீழ்மட்டத்தில் மிகச்சரியான முடிவாக ஆரம்பிப்பது , ஒவ்வொரு நிர்வாக அடுக்கை தாண்டும் போது 70/30 , 60/40 என்று தேய்ந்து , கடைசியாக

உயர் அதிகாரிகளின் வசம் செல்லும் போது 49/51 என்ற அளவில் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நிலையை அடைகிறது. எடுத்த முடிவில் உறுதியாக இருந்து செயல்படுத்துவதில் தான் வெற்றியே தவிர , இருபக்கமும் ஊசலாடுவதில் இல்லை என்று செல்கிறது.

பல விவாதங்களில் இரு பக்கங்களிலும் நியாயம் இருக்கிறது. சிக்கல்கள் ,நல்லதற்கும் கெட்டதற்கும் இடையில் வருவதல்ல. ஒரு நல்லதிற்கும் , மற்றொரு நல்லதிற்கும் இடையில் வருவது தான் என்று படித்தது , இந்த கட்டுரையை படித்த போது நினைவில் வந்தது.

Wednesday, November 30, 2005

மூணாம் கிளாஸ் கவிதை

நாம எழுதறது எப்பவுமே மூன்றாம் தர கவிதைதானே , இதில தலைப்பு என்னத்துக்கு மூணாம் கிளாஸ் கவிதை என்ற கேள்வி நியாயம் தான்.
இது நான் தத்துபித்துன்னு எழுதினது கிடையாது. மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகள் , பள்ளியில் நடந்த "Reflections" என்ற தலைப்பில் நடந்த கலைப் போட்டியில் பங்கு பெற்று

எழுதியது. போட்டியில் பங்கு பெற்றவர்களில் முக்காலே மூணு விசம் பேர் ஓவியம் வரைந்திருந்த போது , கவிதை எழுதின ஒரே ஒரு ஆளு , நம்ம வாரிசு தான்.

Earth , dear Earth
Hope you like
you're Birth !

I Wonder
what it feels like
Covered in Dirt !!

You look so beautiful
And different too!

I wonder
Almost everything about you !!

I bet everyone
loves you And
wonders about you too!!!

Reflections judge comments:
The use of rhyme in this work was quite successful. Earth/Birth and then the use of "dirt" on the following line of the

couplet show and ability to be flexible with rhyme and was excellent.

பரிசு - அப்பா மாதிரி தான் :) !!!

Tuesday, November 29, 2005

சிறந்த மதம்

வலைப்பதிவுகளில் அவ்வப் பொழுது சிலர் தங்கள் மதத்தின் சிறுமைகளையும் , அவற்றின் பாதிப்புகளையும் புரட்சியாளர்களாக பதிப்பதை படித்ததுண்டு.வேறு சிலரோ மற்ற மதத்தின் குறைகளை விலா வாரியாக தொடர்ந்து எழுதுவதை முழு நேர தொழிலாக கொண்டுள்ளதை கண்டு வி(ப)யந்ததுண்டு. ஒருவர் முப்பது ஆண்டுகள் வாழ்ந்த மதத்தை விட , மூன்று மணி நேரம் சென்ற ஒரு நாட்டின் கோவிலின் கதையை கேட்டறிந்து , அதுதான் சிறந்த மதம் என்று எழுதியதை பார்க்க நேர்ந்தது. அவர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாத காரணத்தால் , அவர்கள் அவ்வாறு எழுதுவது எதனால , எந்த பாதிப்புகளினால் என்று ஊகிக்க முயற்சி செய்ததுண்டு.

நான் சில வருடங்களுக்கு முன் வேலை பார்த்த பிரிவின் இயக்குநராக பணி புரிந்தவர் , சென்ற வருடம் அந்த வேலையை விட்டு விட்டு சால்ட் லேக் சிட்டி பக்கம் பல்கலையில் ஆராய்ச்சி மாணவராக/பயிற்சியாளராக சென்றார். அவரின் பதிவில் , ஊடகங்களில் மிகவும் விமர்ச்சிக்கப் படும் மோர்மொன் பற்றியும் , அதன் குறைகளை கூறி விலகுபவர்களிடம் அணுக வேண்டிய முறைகளைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து பதிந்துள்ளார். அதில் Slide 36 - "Things for them to consider" என்பது எந்த ஒரு மதத்திற்கும் , அமைப்பிற்கும் பொருந்தும். அதன் சாரம்சம் பிழையற்ற (அல்லது பெரும் குறைகள் இல்லாத) அமைப்பு என்று எதுவுமே இல்லை எனும் பொழுது , எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு தனி மரமாக இருப்பதை விட , தான் சார்ந்துள்ள அமைப்பை அதன் நிறைகளை , தனக்கு ஒத்த கருத்துக்களை மட்டுமே பின் பற்றி ,குறைகளை களைவதே சிறந்தது என்பதாகும்.மதவாதிகள் சொல்வதை மந்திரமாக கண்மூடித்தனமாக அது மட்டும் தான் உண்மை என்று நம்பாமல் , அவர்கள் தவறு செய்திருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்று புரிந்து கொள்வது அவசியம் என்ற கருத்தும் அருமை.

1) Is perfection, or even the lack of major flaws, the measure of affiliation/relationships?
1.a) Where is the perfect XYZ? Government? Business? Marriage? Family?
1.b) If "lack of major flaws" were the criteria, what relationship would survive?
2) Do we ever have an obligation to help make things better, vs. pack up and leave?
3)Forget "true".... consider "good"
4) What will bring you the most joy?
5) Look to the XYZ as a good place to SERVE
6) You CAN be a XYZ on your own terms - At the core, everyone is

மோர்மொன் அல்லது வேறு எந்த மதமானாலும் , அதன் பற்றிய குற்றசாட்டுகளை சரி என்றோ அல்லது தவறு என்று நியாப்படுத்தியோ அல்ல இந்த பதிவு.

Saturday, November 19, 2005

பீட்டர் ட்ரக்கர்

நாளைய நிர்வாக துறையில் தோன்றக் கூடிய போக்குகள் இன்றே தெரியும் மந்திரக் கண்ணாடி போலும் அவரது மூக்கு கண்ணாடி என்று குறிப்பிடும் படியான ஆளுமை படைத்தவர் பீட்டர் ட்ரக்கர் (Peter F. Drucker).

சில வருடங்களுக்கு முன் சிஎன்என்னில் அவரைப் பற்றிய விவரண படத்தை பார்த்த மாத்திரத்தில் , அவரது கட்டுரைகளையும் , புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன்.
காலங்களை கடந்த சிந்தனையோட்டம் அதில் தெளிவாக தெரியும்.நிர்வாக மேலாண்மை மட்டுமின்றி , சமூக , பொருளாதார மாற்றங்களையும் அலசும் தன்மை என்னை மிகவும் கவர்ந்தது. சேவை நிறுவனங்களை நிர்வாகிப்பது மற்றும் அவற்றின் தாக்கம் பற்றிய அவரின் கருத்துக்கள் , புதிய பார்வையை தந்தது.

வர்த்தக மேலாண்மை பட்டப் படிப்பு படித்திராத என்னைப் போன்றோர்க்கு , படிக்கத் தூண்டும் பயனுள்ள பல படைப்புகள் தந்தவர். மேலும் இன்று என்னைப் போன்றோருக்கு சோறு போடும் "Knowledge worker" என்ற பதத்தை தந்தவர். அண்மையில் தனது 95வது வயதில் நிறைவான வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தை முற்றிலுமாக நிறைவடைந்தார்.

Monday, November 07, 2005

கடற் கன்னி

சாண்டில்யன் கதை மாதிரி தலைப்பை பார்த்தவுடன் , இதை மேலும் படிக்க கிளிக் செய்ய நினைப்பவர்கள் மன்னிக்க.இது சென்ற வாரம் , கடற்கன்னி கதைகளை படைத்த ஹான்ஸ் கிர்ஸ்டின் ஆண்டெர்சன் சொந்த நாட்டிற்கு நான் அலுவல் நிமித்தம் சென்ற பயணக் க(கு)ட்டுரை.


சென்ற வாரம் அலுவல் நிமித்தம் கோபன்கேஹன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் சென்று பார்த்தது அங்கு இருந்த கடற்கன்னி சிலையை தான்.அமெரிக்காவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ,இதை பார்க்க வரும் முன் , வழிகாட்டுபவரிடம் ,இதை ஏறிப் பார்க்க , மின் தூக்கி இருக்கின்றதா என்று விசாரித்துக் கொண்டே வருவார்களாம்.இந்த இடத்தைப் பார்த்தபின் , அசடு வழிவது சகஜம் என்று அலுவலகத்தில் ஒருவர் சொன்னார். கடற் கன்னி சிலை நம்மை விட சிறியதாக இருக்கும்:)

கோபன்கேஹன் டென்மார்க்கின் தலை நகரம். குழந்தைகளுக்கு லெகோ ப்ளாக் , வளர்ந்த குழந்தைகளுக்கு கார்ல்ஸ்பெர்க் , மற்றவர்களுக்கு குக்கி என்று ஏதாவது ஒரு வகையில் டென்மார்க் பரிச்சயமான நாடு தான்.

ஆனால் நான் அறியாதது , (கடற்கன்னியை தவிர) மிதிவண்டிகளின் தலை நகரம் இது என்பது தான்.எங்கு பார்த்தாலும் சைக்கிள்கள் தான். டென்மார்க்கின் மொத்த மக்கள் தொகை ( 6 மில்லியன்) கிட்டத்தட்ட சிங்கப்பூர் அளவு தான்.மக்கள் தொகை அளவிற்கு சைக்கிள்களின் தொகையும். அது தவிர தலைசிறந்த கட்டிட நிர்மாணிகள் , கலை ல்லுனர்கள் இங்கு அதிகம் போலும். கடந்த 1000 வருடங்களின் தலைசிறந்த பல கட்டிட கலைகளையும் ஒருங்கே காணலாம்.

மற்றொரு ஆச்சர்யம் பயணம் செய்த இரயிலில் ஒவ்வொரு முறையும் , பரிசோதகர் வந்து 100% டிக்கெட்டை பரிசோதித்தது தான். ( ஹிஹி. என்னை மட்டும் இல்லை. எல்லாரையும் தான்.)

Monday, October 24, 2005

எண்ணுவம்

நான் எதிலும்
முடிவெடுக்க
தயங்கியதில்லை!

சரியா தவறா
என்று
குழம்பி திரிந்ததில்லை!

பிரசவ வேதனை
என் பிறழ்ம்பி
திரிந்ததில்லை!

வாதங்களில்
காலங்களை
கடத்திய தில்லை!

என் குழப்பம்
எல்லாம்
முடிவெடுத்த பின் தான்
ஆரம்பம் :)

எனினும்
இழுக்கை விட
துணிவுக்கு
கவர்ச்சி அதிகம் தான்!

Saturday, October 01, 2005

பிரம்மன் நானே!!!

என்
சிறிய தவறுகளை கூட
நான்
பெரிதாக பிரகடனப்படுத்துவது
பெரும் குறைகள்
என்னிடம் இல்லை
என தெரிவிக்கத் தான்!

முட்டாள் தனமான
கேள்விகளை
நான்
பொதுவிடங்களில்
வெட்கப் படாமல் கேட்பது
கற்ற கர்வம்
என்னிடம் இல்லை
என் தெரிவிக்கத் தான்!!

முட்டித் தள்ளி
ஓடும் கூட்டத்தில்
நான்
காலில் உரசியதற்குக் கூட
கவனமாய் வருத்தம் தெரிவிப்பது
கண்ணியனாய் காட்டிடத் தான்!!!

உன்
உள்ளக் கண்ணாடியில்
ஓளிரும் உருவம்
நான் வடித்தது
என்பதனால்
இரவில் கூட
என் வீட்டுக் கண்ணாடியில்
பார்க்க விரும்புவதில்லை
அந்த பிரம்மன் படைத்த
உண்மை உருவத்தை

எனக்கு
நானே பிரம்மன்!!

Tuesday, August 30, 2005

கவர்ந்த காலை பேச்சு

காலையில் எப்பொழுதும் போல் இல்லாமல் , அலாரம் வைத்து எழுந்து , வாகன வெள்ளத்தில் மெதுவாக நீந்தி , வாகன நிறுத்தும் இடத்தில் ஒவ்வொரு தளமாக தேடி , கலப்பின வாகனத்தை நிறுத்தி , அலுவலகத்தின் காலை சிறப்பு பேச்சு நடைபெறும் சந்திப்பறையில் நுழைந்த போது , கடைசி வரிசையில் ஒரு சில இடங்கள் மட்டுமே காலியாக இருந்தது.நூற்றுக் கணக்கானவர்கள் நுழைவாயிலில் வந்து கொண்டிருக்க நடை ஓட்டமாக விரைந்து , இருக்கையில் அமர்ந்து மடிக் கணினியை தட்டி , மின் அஞ்சலை அலச தொடங்கு முன் , கிரெய்க் (Craig Mundie) அறிமுக உரையை ஆரம்பித்தார்.

ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த கூட்ட அறைக்கு , அன்றைய பேச்சை கேட்க இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்களாம். மிகுதி அறைகள் மேலும் இரண்டு அமைத்தும் ,கூட்டம் நிரம்பி வழிந்தது இதற்கு முன்பு XBox 360க்கு மட்டும் தான் என்று நகைச்சுவையாக அறிமுகப் படுத்தி , சிறப்புரையாற்ற வந்த தாமஸ் ப்ரைட்மேனை(Thomas L. Friedman) பேச அழைத்தார். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு , மடிக்கணினியை மறந்திருந்து அவரின் பேச்சாற்றலில் மயங்கியிருந்தேன்.

உலகம் சம தளம் என்ற அவரின் நூலைப் பற்றி , உண்மையில் பாதி உலகம் தான் சம தளமாகி இருக்கிறது என்று பில்ஜி கூறியதாக சொன்னது மிகவும் சரி என்பது எனது கருத்து. என்றாலும் , தாமஸின் புதிய சிந்தனையும்,படைப்பாற்றலும், கருத்துகளை தொகுக்கும் திறனும் , அவற்றை தொடர்பு படுத்தி சிறந்த கதை போல ஆர்வமுடன் படிக்கும் வகையில் எழுதும் திறனும், தனது கருத்தில் தீவிர நம்பிக்கையுடன் கேட்பவர்களை கவரும் வகையில் பேசும் திறனும் நேரில் பார்த்து கேட்க கிடைத்து ஒரு சிறந்த அனுபவம்.

Friday, August 19, 2005

மாயை

கண்ணால் காண்பதும் ....





நடுவில் இருக்கும் crosshair-ஐ (எப்படி இதை தமிழ் படுத்துவது) உற்று நோக்குங்கள். பச்சை பந்து ,மெதுவாக ஊதா பந்தின் மேல் வட்டமிடுவது தெரிந்தால் சில மணித் துளிகளை வீணாக்குவது எப்படி என்று தெரியும்.
வெறும் பச்சை பந்து மட்டும் தெரிந்தால் பல மணித் துளிகளை வீணாக்குவது எப்படி என்று தெரியும். இதை வலைப்பதிந்தோ அல்லது மினஅஞ்சலுலில் அனுப்பத் தொடங்கினால் , வார இறுதி நெருங்கி விட்டது என்று தெரியும்.

விளக்கம்: http://www.michaelbach.de/ot/col_rapidAfterimage
ஆக்கம்: Jeremy L Hinton (2005-05-22, personal communication, jeremy dot hinton at bigfoot dot com)


மேலும் சி(ப)ல: http://www.michaelbach.de/ot

Sunday, August 07, 2005

வெற்றிக் கோப்பை



வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் , அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் டீம்மைச் (தாமரை) சேரும்.வாழ்க்கையில் வாங்கிய முதல் வெற்றி கோப்பை.

கம்பெனி பிக்னிக் வாலிபால் போட்டி முதல் பரிசு ( ஊதா பிரிவு) Posted by Picasa


பி.கு: நம்பிக்கை கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Thursday, August 04, 2005

அலுவலக வருடாந்திர மகிழ்வுணவு - கைப்பந்து போட்டி


கம்பெனி பிக்னிக் வாலிபால் போட்டி Posted by Picasa

Tuesday, July 26, 2005

நம்பிக்கை

நாளை
வரும் மரணம்
எனும் நம்பிக்கை
தூண்டும் எனை
நன்றே வாழ்ந்து விட
இன்று!!

பி.கு எனக்கு போட்டி , பரிசு இதிலெல்லாம் நம்பிக்கை :) இல்லை என்றாலும், 'நம்பிக்கை' என்ற தலைப்பு எழுத தூண்டிவிட்டது.

Thursday, July 21, 2005

தரையில் இறங்கும் மேகங்கள்


தரையில் இறங்கும் மேகங்களை படம் பிடித்த இடம் Yellowstone  Posted by Picasa

Wednesday, July 06, 2005

நிறைவு

வர்ணம் தீட்டப்படாத
வானவில்
வானவெளியில்
என்றென்றும்!

மீட்டாத வீணையின்
நாதம்
செவியில்
என்றென்றும்!!

மொழியில் அடங்காத
சொல்
நாவினில்
என்றென்றும்!!!

நிறைவை அறியாத
மனிதத்துவம்
வெறுமை என மறுகுவது
எந்த தர்க்கத்திலும்
அடங்காத
சாஸ்திரம்


விழியில் அடங்காத
விஸ்வரூபம்
என்று புரியும்!!!

Friday, July 01, 2005

தீர்வு குரங்கு

தீர்வு குரங்கு (Solutions Monkey) என்ற தொழில்/துறை சார்ந்த கூட்டுப் பதிவை நண்பர்களின் உதவியுடன் http://blogs.msdn.com/solutions என்ற முகவரியில் ஆரம்பித்திருக்கிறேன்.ஆக்கபூர்வமான கருத்துக்களையும் , விவாதங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கும்.

தீர்வு குரங்கு - 1.

Tuesday, June 28, 2005

தமிழனும் தண்டவாளமும்


தமிழனும் தண்டவாளமும் Posted by Hello

Tuesday, June 21, 2005

பசித்திரு! விழித்திரு!!

ஸ்டாண்போர்டு பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆப்பிள் நிறுவன இயக்குநர் ஸ்டீவ் ஜாப்ஸ் "Stay Hungry. Stay Foolish" என்று மாணவர்களிடம் கூறியுள்ளார்.நண்பர் ஒருவர் , அதை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.அவருக்கு அநேக கோடி நன்றிகள்.

மிக அருமையான கருத்துக்கள் அடங்கிய பேச்சு அது. மூன்று குட்டிக் கதைகளில் , உணர்வுபூர்வமாக , அருமையான கருத்துக்களை மாணவர்களுக்கு பொருத்தமாக சொல்லியிருக்கிறார்.


என்னை கவர்ந்த சில பகுதிகள்

வாழ்நாள் குறைந்தது , அதை மற்றவர்களின் கருத்திற்காக வாழாதே!

உன் வாழ்நாளில் பெரும் பகுதி உன் வேலையில் சென்று விடும் , அதனால் உனக்கு உண்மையில் பிடித்ததை வேலையாக செய்

தினம் இன்று தான் வாழ்க்கையின் கடைசிநாள் என்று வாழப் பழகு ( ஒரு நாள் உண்மையாகும்). உன் கடைசி நாளில் செய்யத் தகுந்த செயல் தானா நீ இன்று செய்வது என்று எண்ணி செயல் படு.


எழுத்து வடிவம்
http://news-service.stanford.edu/news/2005/june15/jobs-061505

ஒலி வடிவம்
http://news-service.stanford.edu/news/2005/june15/videos/53.html

ஒளி/ஒலி ( சிறு பகுதி மட்டும்)
http://news-service.stanford.edu/news/2005/june15/videos/51.html

Tuesday, June 14, 2005

பு(து)த்தகம்

என்னிடம் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை
156க்கும் மிகக் குறைவு ( ஒற்றை எண்ணிக்கை 156க்கு குறைவுதானே?). அது என்ன 156 கணக்கு?
கல்லூரி காலகட்டத்தில், வேலை கிடைத்தவுடன் , மாதம் ஒரு புத்தகம் மற்றும் ஒலிநாடா வாங்க வேண்டும் என்று கண்ட கனவு , பெங்களூர் பூங்காக்களில் சில மாதங்களிலேயே கரைந்து விட்டது.
13x12=156.


சமீபத்தில் படித்தவை
First Break All the Rules - Marcus Bukingham , Curt Coffman
இணையற்ற இளையற்றங்குடி - Dr.ஜவஹர் பழனியப்பன்
The Feiner Points of Leadership - Michael Feiner
அர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன்
I Can See You Naked - Ron Hoff (நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.சத்தியமா நல்ல புத்தகங்கோ...)
Business Speak - Suzette Haden Elgin

என்னை கவர்ந்த புத்தகங்கள் ( அந்தந்த கால கட்டங்களில்)

ரமணிச்சந்திரன் - லாவண்யா (10-13 வயதில்... அதனால் மன்னித்து விடுங்கள். )
கி.ராஜநாராயணன் - பல கரிசல் காட்டு சிறு கதைகள். கடைசியாக படித்தது "கோபல்லபுரத்து மக்கள்" என்று நினைக்கிறேன்.ஞாபக மறதி ஜாஸ்தி. காரைக்குடி கவிஞர் கிட்ட வாங்கி மெமரி+ மாத்திரை சாப்பிட வேண்டும்..
பாலகுமாரன் - தாயுமானவன் / மெர்குரிப் பூக்கள் ( வார்த்தைகளில் மனவியல் படம் பிடிக்க தெரிந்தவர்.Lathe பற்றியும் எழுத தெரியும்.)
சுஜாதா - கணையாழியின் கடைசி பக்கம் ( My Hero!!!)
வைரமுத்து - இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல / வைகறை மேகங்கள்

மற்றும் முதன் முதலில் படித்த விக்ரமாதித்தன் கதைகள் , கல்கியின் பொன்னியின் செல்வன் ( முடிவு தவிர), குமுதத்தில் எழுதிய ப்ரியா கல்யாணராமன், கிருஷ்ணா டாவின்ஸி எல்லாம் பிடிக்கும்.

இணைய பதிவுகளில் வரும் புத்தகங்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது , கதை படிக்கும் பழக்கத்தை கைவிட்டு விட்ட எனக்கு வெட்கமாக இருக்கிறது.
இன்றளவும் , தினமும் ஒரு நூலாவது விடிய விடிய ( பரிட்சைக்கு படிப்பது போல) படித்து முடிக்கும் என் அப்பாவை பார்க்கும் போது இன்னும் எனக்கு வெட்கமாக இருக்கிறது.

என்னைப் போல கூனி குறுகும் உள்ளங்களுக்கு...
மனதை தேற்ற உதவுவது எல்லாருக்கும் தெரிந்த ஒரு குட்டிக் கதை.

படகில் ஒரு சாமியார் சென்றார். அப்பொழுது படகோட்டியை பார்த்து ,"நீ இராமாயணம் படித்திருக்கின்றாயா?" என்று கேட்டார்."இல்லை சாமி" என்றார் படகோட்டி.
"அடப் பாவி வாழ்க்கையில் பாதி நாளை தொலைத்து விட்டாயே" என்றார் சாமியார். மீதி கதை உங்களுக்கே தெரியும்....


கடைசியாக , கல்லூரியில் ஆங்கில ( மற்றும் இதர) அறிவை வளர்த்துக் கொள்ள , ஆங்கில நாவல்கள் படிக்க ஆரம்பித்ததில் அமெரிக்க சாண்டில்யன் "இர்விங் வாலஸ்" நூல்கள் தான் அதிகம்.
அதில் பிடித்தது "தெய்வீக ...."

Thursday, June 02, 2005

பெயர் தேடும் படலம்

பஸ் ஸ்டாப்பில்
பார்த்த முகம்
பழகியதாய் தோன்ற
நினைவிடுக்கில்
சிக்கித் தவித்த பெயரை
வெளிப்படுத்த
தொடங்கிய துலவல்
தொடர்ந்தது நாளெல்லாம் !

முதலெழுத்தில் ஆரம்பித்து
முத்தெடுப்பது போல்
மூழ்கி பார்த்தும்
முடியாமல் தொடர்ந்தது
முயற்சி!

இயந்திர கதியாய்
இயங்கிய பொழுதும்
இடையிடையே இடித்துப் பார்த்த
இளம் பருவத்து ஞாபகங்கள்
இடர்படுத்தியது
இழந்து விட்ட பல பெயர்களை!

வாய் குவித்து
சொல்லிப் பார்த்தும்
வர மறுத்து
அடம் பிடித்தது
தொலைத்து விட்ட
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்!!!

விடி வெள்ளி கீற்றாய்
வீச்சொளியாய்
விரைந்து வந்த சம்பவங்கள் பல
விடை காணுமுன்
விலகியே சென்றது !

மறந்தது எது
மறக்கச் செய்தது எது
என மருகி
மணி அடித்ததும்
வீடு திரும்பும்
எனை
கடந்து சென்ற வாகனத்தில்
சென்ற முகம்
திரும்பி பார்த்து
கண் சுருக்கி
சிந்திக்க தொடங்கியது
எதேச்சை தானா?

Tuesday, May 24, 2005

சியாட்டல் பொது நூலகம்

சென்ற வார இறுதியில் "மழைக்காக" சியாட்டல் பொது நூலகத்தில் ஒதுங்கினோம். கல்வியா , செல்வமா , வீரமா என்ற காலம் போய் ,கல்வியும் செல்வமும் கைகோர்த்து நிற்கும் இன்றைய கால சூழலுக்கு ஏற்ப 165.5 மில்லியன் டாலர் செலவில் கட்டப் பட்டுள்ள , இந்த நவீன நூலகம் , ஒரு வணிக மையம் போல உள்ளது.

படிப்பவர்களை விட , என்னைப் போல 'கிளிக்'கியவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம். மின் விளக்குகளையும் , மின் படிக்கட்டுகளையும் , பரந்து விரிந்த பதினோரு அடுக்கு
மாடிகளையும் பார்த்த போது , வீண் ஆடம்பரமோ என்று தோன்றியது. விமான நிலையங்களையும், வணிக மையங்களையும் பார்க்கும் போது வராத இந்த குறுகுறுப்பு , இப்பொழுது மட்டும் ஏன் என்று உள்மனது அதட்டியது. படிக்க சென்ற காலங்களில் காலணா கூட செலவு செய்திடாமல்,"பார்க்க" சென்ற போது , வாகனம் நிறுத்த ஐந்து டாலர் அழுததன் காரணமாயிருக்கலாம்.

என் பார்வையில் புது உலகின் அலெக்சாண்ட்ரியா நூலகம் இது!!!!

www.spl.org இருந்து சில ஒளிப்படங்கள் (புகைப்படங்கள்) உங்கள் பார்வைக்கு






மேலும் ஒளிப்படங்களுக்கு
http://www.spl.org/images/slideshow/NewCentralSlideshow.asp?index=0

Saturday, May 07, 2005

பரிபாஷை

காலில்லா குதிரை
காதில் முளைத்த கம்பை பிடித்து
பறக்கும் ராட்டிணத்தில் பரவசம்!

மரக்குதிரை தான் எனினும்
மனம் விரும்பிய வெண்குதிரை
மாட்டாத வருத்தம் மனமெங்கும்...

பல நாள் கனவு
பாதியாய் கிட்டியதில்
சோகமா? சுகமா?

அடுத்த சுற்றிலாவது
அருகில் வருமா
ஆசை குதிரை
அல்லது...
அடுத்த சுற்றே அவ்வளவு தானா!

தவித்த மனத்திற்கு
தரை இறங்கிய தருணம்
சுற்றிய உலகம்
சுத்தமாய் புரிந்தது!!!

Sunday, May 01, 2005

உலகம் சமதளம்

Thomas L. Friedman எழுதிய "The World is Flat" என்ற உலகமயமாக்கல் பற்றிய புத்தகத்தை பற்றிய "Meet the Press" நிகழ்ச்சியை எதேச்சையாக தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் "Pulitzer" பரிசு பெற்ற எழுத்தாளர். அவரது பல தொலைக்காட்சி பேட்டிகளை பார்த்திருக்கிறேன். கொஞ்சம் இந்திய ஆதரவு நிலை அவரது பேச்சுக்களில் தெரியும்.இந்திய நிறுவனங்களில் நடத்தப் படும் "accent neutralization" பாடங்களைப் பற்றிய அவரது சமீபத்திய பயணக்கட்டுரை மிகப் பிரபல்யம்.

பேட்டியின் போது , அவரது குழந்தைப் பருவத்தில் உணவு அருந்த மறுத்து அடம்பிடிக்கும் போது அவரது தாயார்
"இந்தியாவிலும் , சீனாவிலும் பட்டினியால் நிறைய குழந்தைகள் வாடுகிறார்கள்.நீ ஒழுங்காக சாப்பிடாவிட்டால், அவர்கள் வந்து உணவை பறித்து சென்று விடுவார்கள்"
என்று மிரட்டிய காலத்தை நினைவு படுத்தி , இன்றைய காலகட்டத்தில் வீட்டுப் பாடத்தை ஒழுங்காக செய்யாத அவரது குழந்தைகளைப் பார்த்து , அவர்
"இந்தியாவிலும் ,சீனாவிலும் ஒழுங்காக பாடம் படிக்கும் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள்,நீ ஒழுங்காக பாடம் படிக்காவிட்டால் , அவர்கள் வந்து உனக்கும் கிடைக்க வேண்டிய வேலையை பறித்து சென்று விடுவார்கள்"
என்று மிரட்ட வேண்டிய சூழ்நிலையை அழகாக எடுத்துச் சொன்னார்.

ஐந்தாம் நிலையில் கணிதத்திலும் , அறிவியலிலும் முதல் நிலையில் இருக்கும் அமெரிக்க குழந்தைகள் , பனிரெண்டாம் நிலையில் கடை நிலைக்கு தள்ளப் படுவதை குறித்து
தேசிய அளவில் விவாதம் நடத்தப் பட வேண்டும்.மற்றும் அவர்களை அறிவியல் பாடம் படிக்க தூண்டும் வகையில் , நாட்டின் குறிக்கோளாக சக்தியில் தன்னிறைவு பெற்ற
நாடாக அமெரிக்காவை மாற்ற ஆராய்ட்சியை முன்னிறுத்த வேண்டும் என்று வலியுருத்தினார்.

பில் கேட்ஸ் கூட கவர்னர்களின் மாநாட்டில் பள்ளிப் பாட சீர்திருத்தத்தைப் பற்றி வலியுறுத்தி சிலவாரங்களுக்கு முன்பு பேசினார்.

Y2K should be a national holiday in India. Call it "Indian Interdependence Day" என்று Michael Mandelbaum குறிப்பிட்டதையும்
இந்த நிகழ்ச்சியில் நினைவு படுத்தினார்.

Thursday, April 21, 2005

சந்தரமுகி 'பஞ்ச் டயலாக்'

சந்தரமுகி விமர்சனம் எழுதியோ, திரைப்படம் பார்க்க சென்று வந்த அனுபவத்தையோ எழுதியோ பிறவி பயனை அடைய எனக்கும் ஆசை தான். இருந்தாலும் , நான் எழுதுவதை எப்பொழுதாவது படிக்கும் ஒன்றிரண்டு வாசக நெஞ்சங்கள் பல விமர்சங்களை படித்து குழம்பியிருக்கும் நிலையில் , மேலும் படுத்தாமல்நம்மால் ஆன உதவியாக அதை செய்யாமல் விட்டு விடிடுகிறேன்.

சியாட்டல் ( ரெட்மண்D) திரையரங்கில் , முதலில் சென்ற ஒரு சிலர் ,ஊரில் தெரிந்த அனைவருக்கும் சீட் பிடிக்கிறேன் பேர்வழி என்று , புறம்போக்கு நிலம் போல பல வரிசை இருக்கைகளை துண்டு போட்டு பிடித்து வைக்க , அடுத்த வந்த சிலர் , முன்னுரிமை கேட்டு போராட , கடைசியாகா டிக்கெட் வாங்கியும் , இருக்கை கிடைக்காமல் பலர் திரும்பி விட்டனர்.

அதனால் , அடுத்த நாள் அலுவலகத்தில் அதைப் பற்றி சூடான விவாதம் மின்னஞ்சல் குழுவில் இடம் பெற்றது. சந்தடி சாக்கில் , படம் பார்க்காத ஒருவர் படத்தில் 'பஞ்ச் டயலாக்'இல்லையாமே , படம் எப்படி இருந்தது என்று வினவ , அடுத்தவரின் பதில் இது

eppudu choodu.......I will give you one ....(Stepping in For RAJINI)
Munnadiye vanthu seetu pudicha 'family'um.......Avangaloda seetukku sandapodara 'family'um ozhunga padam pathatha saritharame illa.......


மின்அஞ்சல்கள் குவிவதை பார்த்த அடுத்தவர் , எப்பொழுதும் மின் அஞ்சலே வராத இந்த (தமிழ்) குழுவில் , இத்தனை ஈ-மெயில்களா என்று கடுப்படிக்கதிரையரங்கும் நிறைந்து வழிவதானாலும் , மெயில் பாக்ஸ் நிறைந்து வழிவதானாலும் , அதற்கு காரணம் தலைவர் தான் என்றார் மற்றொருவர்.

மொத்தத்தில் , எனக்கு ஒரே டிக்கெட்டில் 3 படம் பார்த்த திருப்தி.நீண்ட நாட்களுக்குப் பின் , அபரிமிதான வெற்றி பெற்ற ரஜினி படம் , அருமையான கதைப் பின்னணி கொண்ட ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படம் தமிழில் பார்த்த திருப்தி(ஒரிஜினல் கதை/படம் பண்ணியவர்களுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ..........), பக்கா மசாலா வாசு படம் ( அட்டகாசமான திரைக்கதை , இயக்கம் , இசை , நீண்ட நாட்கள் கழித்து SPBயின் குரலிசை)

படம் பார்த்து என் பெண்ணிற்கு காய்ச்சல். எனக்கும் ஜோவின் முட்டை கண் இரவில் வந்து பயமுறுத்தியது. லக்கலக்கலக்கல்க்கல்க...


பி.கு.: நான் விமர்சனம் எழுதும் பலரைப் போல நல்ல திரைப் பட ரசிகன் இல்லை. ரஜினி biased ரசிகன்.

Wednesday, April 06, 2005

மேடை பயம்

இன்று மேடை பேச்சு பற்றிய ஒரு பயிற்சிக்கு சென்ற இடத்தில் கேட்ட தகவல்.உலகில் அதிக மக்கள் பயப்படும் முதல் விஷயம் மேடை பேச்சு. அதற்கு அடுத்த இடம் தான் மரணத்திற்கு. செயின்ஃபெல்ட்(Seinfeld) ஒரு முறை நகைச்சுவையாக மரண அஞ்சலி செலுத்தி பேசுபவர்களில் , இப்படி மேடை ஏறி அஞ்சலி சொல்வதை விட மரண படுக்கையில் தானே இருந்திருக்கலாம் என்று எண்ணுபவர்கள் அதிகம் என்று கூறினாராம்.


கல்லூரி வரை மேடை பேச்சு என்றால் , கட்டை குரலில் எதுகை மோனையோடு பேசும் திராவிட சிகாமணிகள் , சுந்தர தமிழில் அடுக்கு மொழியில் மற்றவர்கள் படித்திடாத சங்க கவிதைகளை சுட்டிக் காட்டி பேசும் தமிழ் ஆர்வலர்கள் , இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசும் அரசியல் வாதிகள் , துணுக்கு தோரணம் கட்டும் பட்டிமன்ற சொற்பொழிவார்கள் , குட்டிக் கதைகள் சொல்லி அருள் மொழி வழங்கும் ஆன்மீகவாதிகள் , தத்து பித்தென்று பேசும் திரை நடிகர்கள் என்று தான் பார்த்திருந்தேனே தவிர , சொல்ல வந்த கருத்தை தெளிவாக , எளிமையாக புரியும்படி , மனதில் என்றும் இருக்கும் படி பேசியவர்களை பார்த்தது அரிது.

வேலை பார்க்க ஆரம்பித்த பின் தான் , நிறுவனங்களின் உயர் பதவியில் இருப்பவர்கள் (சிலர்) தான் , நான் பார்த்ததில் மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருந்திருக்கிறார்கள். மற்றவர்களைப் போல தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இதை பயன் படுத்தாமல் , கேட்பவர்கள் தான் பேசும் கருத்தில் உடன் பட்டு , நம்பிக்கையோடு உழைப்பதில் தான் , நிறுவனத்தின் வெற்றி இருக்கிறது என்று எண்ணுவதால் இப்படி அமைகிறது போலும். மைக்கேல் பெய்னர் (Michael Feiner) கூட தான் திறமைசாலி என்று மற்றவர்கள் எண்ணும்படி பேசுபவனை விட , கேட்பவர்கள் திறமைசாலிகள் என்று எண்ணும்படி நடந்து கொள்பவனிற்கே வெற்றி அதிகம் என்று கருத்து வரும்படி தனது நூலில் எழுதியுள்ளார்.

Sunday, March 13, 2005

மொழி காக்கும்...

கடந்த வாரம் வெளி வந்த Forbes உலக பணக்காரர்களின் தர வரிசை பட்டியல் அனைவரும் அறிந்ததே!.நானும் உங்களைப் போல முதலில் Most Eligible வரிசையை தான் ஆவலுடன் பார்த்தேன்.இந்த வருடம் ,பெண்களில் ஓப்ரா மட்டும் தான் இந்த தகுதியுள்ளவராம். :(

இந்தியர்கள் வரிசையில் நம் பெயர் வரும் நாள் எந்நாளோ என்று அடுத்து அசாதாரண ( Quirky) உதவி செய்வர்கள் வரிசையை பார்த்தேன். குமாரமங்கலம் பிர்லா ஏழை விதவைகளின் மறுமணத்திற்கும், ஜெர்மனிய ஹெய்ன்ஸ் இந்தியாவில் தொழுநோய் ஒழிக்கவும் உதவுகிறார்களாம்.

அழியும் மொழிகளை ஆவணப் படுத்த முயலும் ஹான்ஸ்(Hans Rausing) பற்றி படித்தது என்னை கவர்ந்தது.அலாஸ்காவில் 70 முதல் 100 பேர் வரை பேசப்படும் அலுட்,கிழக்கு நேபாளத்தின் கோய் ராய்,பேசத் தெரிந்தவர்களில் ஓரே ஒருவர் மட்டுமே மிஞ்சியுள்ள வனவ்சு மொழி என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே சொல்கிறது.

மேலும் விவரங்களுக்கு
http://www.forbes.com/billionaires/2005/03/07/cz_bill05_quirkyslide_4.html

நம்முடைய மொழிக் காவலர்களும் , கட்டளைகள் மற்றும் அடுத்தவர்களுக்கு செய்யும் அறிவுரைகளுடன் புரவலர்களாக மாறினால் நலம்.

பில்லியனர்களுக்கு தமிழில் என்ன?
மஹா கோடீஸ்வரர்கள் என்பது பொருத்தமா?( பண முதலைகள் , பண டைனோசர்கள்...?)

Thursday, March 03, 2005

கொடுத்து சிவந்த கரங்கள்

சிலேட் பத்திரிக்கை சென்ற வருட சிறந்த அமெரிக்க வள்ளல்களைப் பற்றி பட்டியலிட்டுள்ளது.
http://www.slate.com/id/2112691
முதலிடத்தில் இருப்பது... வேறு யாராக இருக்க முடியும்?. அடுத்த இடத்திலிருப்பதும் அவரின் தோழர் தான்.நான் எதிர்பார்த்த பல பெரும் தலைகள் இதில் இல்லை ( நான் உள்பட :) ).

இந்தியாவில் இப்படி வெளிப்படையாக பட்டியல் அறிவித்தால் நன்றாக இருக்கும்.
தமிழகத்தில் நம்ம தலைவர் தான் முதலிடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன்.


உபரி தகவல்( டெய்ல் பீஸ் ?)
உலகம் சுற்றிய வாலிபன் http://msnbc.msn.com/ID/7075972

Wednesday, February 23, 2005

சருகு

சருகு

காலம் மாறியதும்
கடந்தவை மறந்து
கண நேரத்தில்
உதிர்த்த உன்னை விடுத்து
காரணம் காற்றே என நினைத்து
உயிர் விட்டாலும்
உரமாகியாவது உனை
நலமாக்கலாம் என
மக்கி மடிய தவமிருக்கையில்...

காலனாய் வந்த காற்று
கர்ணனாய் தோள் கொடுத்து
எனை உயரத் தூக்கி
உன் அருகில் கொணர்ந்த போது
பாராதது போல்
பாசங்கு காட்டி
பறந்த எனை
கீழே தள்ளியது
ஏன் கிளையே?
புதிதாய் பூத்த
உறவுகளா!

Thursday, February 17, 2005

சாகாவரம்

ரே கர்டஸ்வெய்ல் (Ray Kurzweil) இன்னும் 20 வருடத்தில் சாகாவரம் சுலபமாக கிடைக்கும் என்கிறார்.
நம்ம ஊர் தினத்தந்தியில் வரும் சித்த வைத்தியர் இல்லை இவர். இது நாள் வரை புகழ்பெற்ற ஆராய்சியாளர்.நான் வேலை புரியும் நிறுவனத்திற்கு , 2 வருடங்கள் முன்பு ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு பேச்சாளராக தலைமையுரை ஆற்ற வந்திருந்தார்.மிகச் சிறப்பாக பேசி அனைவரையும் மெய்மறக்க செய்தார். திடீரென்று இப்படி 10 குவளை தேநீர் , அது இது என்று சாகாமல் இருக்க மருந்து கண்டுபிடிக்க இறங்கி விட்டார்.
பணம் பத்தும் செய்யும் என்பது போல பயம் பத்தும் செய்யும் போலும்.

இது வரை கட்டிய Life Insurance premium எல்லாம் வீணாக போய் விடுமோ?

Sunday, February 06, 2005

மற்றும் ஒரு ...

வரப் போகும்
வாரயிறுதியின்
கொண்டாட்ட நிகழ்ச்சி
வரவேற்ற அழைப்பிதழ்
வந்து நினைவில் ஆட

மறைத்து நின்ற
அலுவலக குப்பையை
அவசரமாக கொட்டி விட்டு
ஆனந்தமாக கிளம்பினேன்
வீடு நோக்கி.

அவசரம் புரியாமல்
ஆமையாய் நகர்ந்தது
அன்றைய போக்குவரத்து

அலை அலையாய்
மருத்துவ ஊர்திகள்
பறந்தன
அபாய மணியுடன்

வழிவிட்டு
விழிபார்த்து
ஒதுங்கி நின்றன
ஆமைக் கூட்டம்

வாரயிறுதி குதூகலம்
வடிந்து விட்ட
வருத்தத்தில்
சபித்தது மனம்
மோதிக் கொண்ட
வாகனங்களை


மிஞ்சியிருந்த
சந்தோஷத்தையும்
கிஞ்சித்தும்
விட்டு விட மனமில்லாமல்
சம்பவ இடத்தை
கடந்த போது
முகம் திருப்பி
முடுக்கினேன்

நாளைய நாளிதழில்
மற்றும் ஒரு செய்தி!
புள்ளி விவரத்தில்
மற்றும் ஒரு கூட்டல்!
அபாய வளைவு என்று
மற்றும் ஒரு அறிவிப்பு!
அவ்வளவு தான்
இது என்று
விரைந்தது வாகனம்
வீடு நோக்கி


வாசலில்
என் மற்றும் ஒரு வாகனத்தை
கண நேரம்
காணாத போதுதான்
பதறியது மனது
ஒரு கணம்.

சற்று தள்ளி
நிறுத்தி இருந்த
வாகனம்
தந்ததொரு பாடம்
இனி
ஒவ்வொரு முறையும்
சபிக்காது
சாந்தியடைய
பிரார்த்திக்கும்.

Friday, January 21, 2005

அரைத் தூக்கம்

கனவிற்கும்
நினைவிற்கும்
இடையில் ஆடும்
ஊஞ்சல் ஆட்டம்!

கனவுலகில்
கனவு மாடு
செல்லும் வழி இல்லாமல்
கற்பனை குதிரை பூட்டிய
மனோரதத்தில்
விரும்பும் வழி ஊர்வலம்!!

விழிக்கும் முன்
அளிக்கும் உற்சாகம்..
விழித்தபின் தான்
விடாது சோர்வு!

இயந்திர வாழ்க்கையிலும்
என்றும் விடாது தொடரும்
ஆனந்த தவம்!


அலாரம் அடிப்பதற்கும்
அன்றாட கவலைகள்
எழுப்புவதற்கும்
இடைப்பட்ட
அரைமணி நேர
சொர்க்கம்!!

Tuesday, January 18, 2005

ஜகத் காரணம்

அரூபமே
ஆண்டவனென
தொழுகினோம்

ஆயுதம் பல
கொண்ட
ஆபத்பாண்டவனாய்
தரிசித்தோம்

ஆசைகள் நீக்கிய
ஆண்டியாய்
அருள் பாவினோம்

வரம் பல தந்திடும்
மாயாமாய்
மருகினோம்

ஆயிரம் கரம் கொண்டவனாய்
அச்சம் நீக்கிட
வேண்டினோம்

நீ பெரிது நான் பெரிதன
போட்டியிடும்
மானிட வடிவத்தில்
உனை வடித்து வணங்கினோம்

உயிரினம் பலவற்றின்
வடிவத்தில் உனை
போற்றினோம்

பஞ்ச பூதமாய் உன்
பதம் நாடினோம்

பாவம் நீக்கிட
வந்த பரிசுத்தனாய் உனை
பாவித்தோம்

நீ யாரோ எனினும்
அழிவு வந்த வேளையில்
அடைக்கும் தாழின்றி
வந்திட்ட அன்பிற்கு
காரணம் நீயே தானா?

ஜகத் காரணமே
நீ யாரென அறிய
ஏழாவது அறிவு
வேண்டுமோ?

Monday, January 17, 2005

கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!!!

ஞாயிறன்று ஹாலிவுட் தங்க கோளம் பரிசளிப்பு விழாவின் சிகப்பு கம்பள நேர்காணலில் அறிந்த தகவல் இது.சிறந்த துணை நடிகை பரிசு பெற்ற நடாலி போர்ட்மேன் , ஹார்வ(ர்)டில் படித்தவராம். ஹாலிவுட்டில் ஆடை ஆபரணங்களையும், அலங்காரத்தையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கல்வியைப் பற்றி குறிப்பிடும்படி செய்து விட்டார் வருங்கால ஜூலியா...


வீட்டில் சத்தம் குறைவாக டிவியில் வெறும் "படம்" மட்டுமாக இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்காக இந்த செய்தி...