இன்று மேடை பேச்சு பற்றிய ஒரு பயிற்சிக்கு சென்ற இடத்தில் கேட்ட தகவல்.உலகில் அதிக மக்கள் பயப்படும் முதல் விஷயம் மேடை பேச்சு. அதற்கு அடுத்த இடம் தான் மரணத்திற்கு. செயின்ஃபெல்ட்(Seinfeld) ஒரு முறை நகைச்சுவையாக மரண அஞ்சலி செலுத்தி பேசுபவர்களில் , இப்படி மேடை ஏறி அஞ்சலி சொல்வதை விட மரண படுக்கையில் தானே இருந்திருக்கலாம் என்று எண்ணுபவர்கள் அதிகம் என்று கூறினாராம்.
கல்லூரி வரை மேடை பேச்சு என்றால் , கட்டை குரலில் எதுகை மோனையோடு பேசும் திராவிட சிகாமணிகள் , சுந்தர தமிழில் அடுக்கு மொழியில் மற்றவர்கள் படித்திடாத சங்க கவிதைகளை சுட்டிக் காட்டி பேசும் தமிழ் ஆர்வலர்கள் , இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசும் அரசியல் வாதிகள் , துணுக்கு தோரணம் கட்டும் பட்டிமன்ற சொற்பொழிவார்கள் , குட்டிக் கதைகள் சொல்லி அருள் மொழி வழங்கும் ஆன்மீகவாதிகள் , தத்து பித்தென்று பேசும் திரை நடிகர்கள் என்று தான் பார்த்திருந்தேனே தவிர , சொல்ல வந்த கருத்தை தெளிவாக , எளிமையாக புரியும்படி , மனதில் என்றும் இருக்கும் படி பேசியவர்களை பார்த்தது அரிது.
வேலை பார்க்க ஆரம்பித்த பின் தான் , நிறுவனங்களின் உயர் பதவியில் இருப்பவர்கள் (சிலர்) தான் , நான் பார்த்ததில் மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருந்திருக்கிறார்கள். மற்றவர்களைப் போல தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இதை பயன் படுத்தாமல் , கேட்பவர்கள் தான் பேசும் கருத்தில் உடன் பட்டு , நம்பிக்கையோடு உழைப்பதில் தான் , நிறுவனத்தின் வெற்றி இருக்கிறது என்று எண்ணுவதால் இப்படி அமைகிறது போலும். மைக்கேல் பெய்னர் (Michael Feiner) கூட தான் திறமைசாலி என்று மற்றவர்கள் எண்ணும்படி பேசுபவனை விட , கேட்பவர்கள் திறமைசாலிகள் என்று எண்ணும்படி நடந்து கொள்பவனிற்கே வெற்றி அதிகம் என்று கருத்து வரும்படி தனது நூலில் எழுதியுள்ளார்.
1 comment:
நல்ல பதிவு.
காமராஜர் இன்றும் பேசப்படுகிறார் என்றால் அதற்கு அவரது uncomplicated communication skillஸீம் ஒரு காரணம் என்று தோன்றும். உங்கள் பதிவு அதை உறுதி செய்வது போல் தோணுகிறது
Post a Comment