Monday, October 17, 2011

சிணுக்கம்

உன் குரல் கேட்டு
ஓடோடி வந்த தருணங்கள்
எத்தனை!

ஏனிந்த கோபம்
எத்தனை முறை அழைத்தும்
ஏகாந்த மௌனம் !!

உன்னை தாண்டி
கண நேரம் கண் மேய்ந்ததில்
பொறாமையா !

கோபத்தில் கொட்டிவிடாதே
மையலில் பகிர்ந்த
ரகசியங்களை !!

மீண்டும் அழைப்பாய்
என காத்திருக்கிறேன்
காணாமல் போன
என் கைபேசியே !

Wednesday, July 21, 2010

தட்டாம் பூச்சி

புழுக்கத்திற்காக

திறந்த ஜன்னலில்

புகுந்தது தட்டாம் பூச்சி!



பயத்தில் பதுங்கியது

பட்டிணத்து குழந்தை..

பாவத்தில் குறுகிய

அப்பாவின் பின்!!

Monday, July 19, 2010

கல்யாண சமையல்

பரிட்சை முடிவிற்காக
காத்திருக்கும் மாணவனாய்
தவித்திருக்கும் தந்தை
மணமகனை விட
அதிக நேரம் செலவிட்டது
சமையல் தேர்விற்கு தான்...

முதல் பந்தி
முக்கிய விருந்தினர்கள்
பத்தியமாய் கொறித்து
அற்புதமென அறிவிக்க
நிறைவடைந்த தந்தை
சந்தோஷ போதையில்
பசி துறந்தார்...

சமைத்த நெடி தாளாமல்
போதையில் பசி துறந்தது
சமையல் குழுவும்.

புகைப்படத்திற்காக
ஊட்டிய இனிப்பு
கசக்கத் தொடங்க
புரியாமல் விழித்த
மணமக்களை பார்த்து
கல்யாண சமையல்
போதுமென
ஒலிபெருக்கியில்
பாடிக் கொண்டிருந்தார்
திருச்சி லோகநாதன்
வரும் காலத்தை
அறிந்து !!!

Sunday, June 06, 2010

பூமி

இயற்கையை ரசிக்க
ஓசோன் படலத்தை
ஒட்டையாக்கியபடி
நீண்ட தூர பயணம்!

கடலில் கலக்கும்
கசிவை கடிந்தபடி
நிரம்பிய காரின் எரிப்பை
மெல்ல கசிந்தது புகையாய்.

பொருந்தாத பழுதுபார்ப்புகள்
பொருளாதாரத்தை சரிசெய்ய
பொறுமையாய் சாலையெங்கும்

சூரிய குடும்பத்தில்
சுற்றித் திரியும் கோள்களெல்லாம்
கடவுளாய் சந்நிதானம்
பெற்றிட்ட பெருமையில்
வானில் உயர மின்னிட ...

பூமி மட்டும்
காலடியில் எங்கெங்கும் !!!

உயர்ந்த மலையும்
விரிந்த கடலும்
பரந்த வானமும்
தராத வியப்பும் மகிழ்வும்
தந்தது
தரையில் இட்ட முத்தம் !

Sunday, April 11, 2010

முதல் வார்த்தை

நாள் முழுதும்
வெயிலில் காய்ந்த
வானம்
கருக்க தொடங்கியது...

விழித்திருந்த பொழுது
தெரியாத நட்சத்திரங்கள்
மெல்ல
கேட்க மறந்த குரலை
ஞாபக ஒளி பெயற்க தொடங்கின...

முதல் வார்த்தையின்
முகவரி
இனிமுதல் வீடு தாண்டி
விசாலமானது!

ஊரின் வெளியே
புதிதாய் விரித்த
அக்னி படுக்கை
அதன் அர்த்தத்தை
சுட்டு உணர்த்தியது!

நிழற் படத்தின் முன்
தவமிருக்க தொடங்கியது
அக(ல்) விளக்கு...

Thursday, February 04, 2010

அஞ்ஞான பட்டகம்

குப்பையை கூட்ட சோம்பி
வெளிச்சத்தை மறைத்து
சுத்தமானதாய்
வாழ்ந்த கூட்டம் ...
ஒளியின் குற்றமென
அழுக்கை
அடையாளம் காட்டின!

நுழைய மறுத்த இடங்களின்
பிம்பங்களை பிரதிபலித்த
திருப்தியில் திரும்பி சென்றது
புற ஒளி!

அமைதியில் உதித்தது
அஞ்ஞானத்தை
அடையாளம் காட்டிடும்
அரிய பட்டகம்
அடைத்திட வழியில்லாமல் !!

Sunday, January 03, 2010

புதுவருட வாழ்த்துக்கள்

புதிய சுப்ரபாதமாய்
குத்துப் பாட்டு ஒன்று
டீக்கடையில்
எழுப்பிக் கொண்டிருந்தது!

இலையாய் , இருக்கையாய்
துண்டாய் , தோரணமாய்
அவதரிக்கும் நாளிதழ் பிரம்மம்
உலக ஜீவன்கள் அனைத்திற்கும்
பிரசுரித்திற்கும் ஒரே ராசி பலனை
சத்தமாய் படித்து பரவசமானது
அதிகாலை துயில் எழும் ௬ட்டம்!

நிறைமாதமாய்
நிரம்பி வழியும் பேருந்து
குழிகளில் சாலையை தேடி ஓடும்
விரக்தியில்
அபய ஒலியை எழுப்பி
தன் வருகையை
சப்தமாய் வெளிப்படுத்தி சென்றது!

வராத வேலைக்காரியை
வாசலில் சபித்துக் கொண்டிருந்த
அம்மாவிற்காக
சிணுங்கி கொண்டிருந்த தொலைபேசி
கேட்க வழியின்றி அடங்கியது!

வாழ்த்துக்களை பரிமாறிப்
பழக்கமில்லாத கிராமத்தில்
புதுவருட வாழ்த்துக்கள்
வாழ்க்கையின்
ஒவ்வொரு ஒலியிலும் தான் !