Tuesday, August 30, 2005

கவர்ந்த காலை பேச்சு

காலையில் எப்பொழுதும் போல் இல்லாமல் , அலாரம் வைத்து எழுந்து , வாகன வெள்ளத்தில் மெதுவாக நீந்தி , வாகன நிறுத்தும் இடத்தில் ஒவ்வொரு தளமாக தேடி , கலப்பின வாகனத்தை நிறுத்தி , அலுவலகத்தின் காலை சிறப்பு பேச்சு நடைபெறும் சந்திப்பறையில் நுழைந்த போது , கடைசி வரிசையில் ஒரு சில இடங்கள் மட்டுமே காலியாக இருந்தது.நூற்றுக் கணக்கானவர்கள் நுழைவாயிலில் வந்து கொண்டிருக்க நடை ஓட்டமாக விரைந்து , இருக்கையில் அமர்ந்து மடிக் கணினியை தட்டி , மின் அஞ்சலை அலச தொடங்கு முன் , கிரெய்க் (Craig Mundie) அறிமுக உரையை ஆரம்பித்தார்.

ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த கூட்ட அறைக்கு , அன்றைய பேச்சை கேட்க இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்களாம். மிகுதி அறைகள் மேலும் இரண்டு அமைத்தும் ,கூட்டம் நிரம்பி வழிந்தது இதற்கு முன்பு XBox 360க்கு மட்டும் தான் என்று நகைச்சுவையாக அறிமுகப் படுத்தி , சிறப்புரையாற்ற வந்த தாமஸ் ப்ரைட்மேனை(Thomas L. Friedman) பேச அழைத்தார். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு , மடிக்கணினியை மறந்திருந்து அவரின் பேச்சாற்றலில் மயங்கியிருந்தேன்.

உலகம் சம தளம் என்ற அவரின் நூலைப் பற்றி , உண்மையில் பாதி உலகம் தான் சம தளமாகி இருக்கிறது என்று பில்ஜி கூறியதாக சொன்னது மிகவும் சரி என்பது எனது கருத்து. என்றாலும் , தாமஸின் புதிய சிந்தனையும்,படைப்பாற்றலும், கருத்துகளை தொகுக்கும் திறனும் , அவற்றை தொடர்பு படுத்தி சிறந்த கதை போல ஆர்வமுடன் படிக்கும் வகையில் எழுதும் திறனும், தனது கருத்தில் தீவிர நம்பிக்கையுடன் கேட்பவர்களை கவரும் வகையில் பேசும் திறனும் நேரில் பார்த்து கேட்க கிடைத்து ஒரு சிறந்த அனுபவம்.

No comments: