Saturday, November 27, 2004

(ஏ)மாற்றம்

கதிரொளியை மறைத்து
கருமேக கூட்டம் பரப்பிய
காரிருளைக் கண்டு
கவலை கொள்ளாமல்
கன மழை தருமென
களித்திருந்த மனம்...

காற்றில் கலைந்து போன
கார்மேகத்தை கண்டு
காத்திருந்ததில் ஏமாற்றம் தான்!

எனினும்
வெறும் வானமாய் இல்லாமல்
வெண்மேகமாய் விண் வீதியில் உலா வராமல்
கலைந்து போனாலும்
கார்மேகமாய் வந்ததில்
கொஞ்சம் மகிழ்ச்சிதான்!!!

இல்லாத வாய்ப்பைவிட
இழந்த வாய்ப்பில்
ஏமாற்றம் தான்
எனினும்
விதைத்து விட்டு சென்ற
நம்பிக்கையில்
நாளைய கார்மேகம்
நன்றே வருமென
கொஞ்சம் மகிழ்ச்சிதான்!!!

Tuesday, November 16, 2004

'ஹாட்மெயில்' சபீர் பாட்டியா

நீண்ட நாட்களுக்கு பிறகு 'ஹாட்மெயில்' சபீர் பாட்டியாவின் (Sabeer Bhatia ) பெயர் செய்திகளில் அடிபட்டது. அர்சூ (Arzoo.com ) அடிபட்டபின், அடுத்த என்ன செய்யப் போகிறார் என்று தெரியாமல் இருந்தது. இப்பொழுது ஆஸ்திரேலியாவில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட போது TeliXO.Com மற்றும் மின்னஞ்சல் குப்பைகளை தடுக்க உதவும் உபகரணம் என்று தன் புது முயற்சிகளைப் பற்றி தெரிவித்திருக்கிறார். முதல் வெற்றியை விட , தொடர்ந்த வெற்றி மிக கடினமான விஷயம் தான். பல தமிழ் திரை இயக்குனர்கள் கூட முதல் படத்தை வெற்றிகரமாக கொடுத்து விட்டு , பின் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள திண்டாடுவது போல் தான் இதுவும்.
ஆனால் முயன்றால் முடியாதது இல்லை தானே!!!