Saturday, November 27, 2004

(ஏ)மாற்றம்

கதிரொளியை மறைத்து
கருமேக கூட்டம் பரப்பிய
காரிருளைக் கண்டு
கவலை கொள்ளாமல்
கன மழை தருமென
களித்திருந்த மனம்...

காற்றில் கலைந்து போன
கார்மேகத்தை கண்டு
காத்திருந்ததில் ஏமாற்றம் தான்!

எனினும்
வெறும் வானமாய் இல்லாமல்
வெண்மேகமாய் விண் வீதியில் உலா வராமல்
கலைந்து போனாலும்
கார்மேகமாய் வந்ததில்
கொஞ்சம் மகிழ்ச்சிதான்!!!

இல்லாத வாய்ப்பைவிட
இழந்த வாய்ப்பில்
ஏமாற்றம் தான்
எனினும்
விதைத்து விட்டு சென்ற
நம்பிக்கையில்
நாளைய கார்மேகம்
நன்றே வருமென
கொஞ்சம் மகிழ்ச்சிதான்!!!

3 comments:

Mookku Sundar said...

சியாட்டில் நகரில் மழை வேண்டிக் கவிதையா..?? :-)

என்ன கவிஞரே ...வானம் பார்த்த பூமியில் வசித்தபோது எழுதப்பட்டதா..??

rajkumar said...

கடைசிப் பத்தி தேவையே இல்லை.

நீக்கைவிட்டு பார்க்கவும்.

கவிதை இன்னும் அருமையாக இருக்கும்.

நிறைய எழுத வாழ்த்துக்கள்.

அன்புடன்

ராஜ்குமார்

Mey said...

மழை வேண்டி அல்ல இது.
மழை போன்ற வாய்ப்பை பற்றியது.