Wednesday, January 11, 2006

கலவை மனிதன்

ரே கர்டஸ்வெய்ல் (Ray Kurzweil) இயற்கைக்கு அப்பாற்பட்ட மனித வாழ்க்கை பற்றி எழுதியிருக்கிறார்.

மனித மூளை சிந்திப்பதை படமெடுக்க தொடங்கி விட்டார்களாம். ஒரு கன அங்குல நானோ ட்யூப் மின்சாதனம் 100 மில்லியன் மனித மூளைகளை விட சிறப்பாக செயல்பட தொடங்கி விடுமாம்.நானோபோடிக் வெள்ளை அணுக்கள் உயிரியல் வெள்ளை அணுக்களை விட வேகமாக செயல் பட தொடங்கி , அவற்றை மனித உடம்பிற்கும் கலந்து விடும் சாத்தியக் கூறு வரும் போது , மனிதன் பாதி கணினி பாதி கலந்து செய்த கலவை நான் என்று எல்லாரும் ஆளவந்தான் மாதிரி திரிய வேண்டியது தான்.

மனிதனுக்கு தான் சிரிக்க தெரியும் , பகுத்தறிவு உண்டு என்று கப்ஸா விட்டுக் கொண்டு காலம் தள்ள முடியாது. மனிதனின் பகுத்தறிவு பழுது பட்டது. பாங்குகளை அடையாளம் காணும் (pattern recognition) கலை மட்டும் தான் நம்மை இன்னும் வேறுபடுத்தி வைத்திருக்கிறது போலும்.

கலவை மனிதனால் கவிதை எழுத முடியுமா , நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வீண் வாதிட முடியுமா என்று தெரியவில்லை.

மேலும் படிக்க http://www.computerworld.com/hardwaretopics/hardware/story/0,10801,107494,00.html

Saturday, January 07, 2006

ஈரம் புரிந்த நேரம்

அறைந்து சென்ற காற்றின்
கரைந்து கிடந்த ஈரம்
பட்டுக் கன்னத்தில்
ஒட்டி நின்றது தெரியும் போது
புரிந்தது
கோபத்தின் அன்பு!

Thursday, January 05, 2006

கொ(கு)ட்டிக் கதை

ஒரு குளத்தைக் கடக்க வேண்டிய தேவை ஒரு தவளைக்கும் , ஒரு தேளிற்கும் வந்ததாம். தவளைக்கு , குளத்தில் இருக்கும் கொக்கு/நாரையைக் கண்டு பயம். தேளிற்கு நீந்த தெரியாது. அதனால் , தேள் தவளையிடம் நான் உன் முதுகில் ஏறிக் கொள்கிறேன். நீ என்னை மறு கரை சேர்த்து விடு. பதிலாக , கொக்குவிடம் இருந்து உன்னை நான் காப்பாற்றுகிறேன் என்றாதாம். தவளை தேளைப் பார்த்து , நீ என் முதுகில் இருக்கும் போது என்னை கொட்டி விட்டால் என்ன செய்வது , தரையில் இருந்தாலாவது நான் தப்பித்து செல்வேன் முதுகில் இருக்கும் போது என்ன செய்வது என்று தேளைப் பார்த்து அவநம்பிக்கையோடு கேட்டதாம். அதற்கு தேளானது , உன் முதுகில் இருக்கும் போது நான் உன்னைக் கொட்டினால் நீயும் நானும் நீரில் மூழ்கி சேர்ந்தே இறந்து போவோம். அப்படி இருக்கையில் நான் ஏன் உன்னை கொல்லப் போகிறேன் என்றாதாம்.அதன் கூற்றில் அர்த்தம் இருப்பதை உணர்ந்த தவளை , தேளை முதுகில் ஏற்றிக் கொண்டு குளத்தை கடக்க தொடங்கியதாம்.

இந்த கதையை கேட்டறிந்திராதவர்கள், இதன் முடிவு என்னவாகும் என்று ஊகிக்க முடிகிறாதா (கூகிளை நாடாமல்)?
முடிவு நாளை என்றோ அல்லது முழுப்பக்கத்தையும் வெற்றிடமாக தந்து அடியில் பதில் தந்து உங்களை சோதிக்க விரும்பவில்லை.

இதோ கதையின் தொடர்ச்சி.

பாதி குளத்தை கடந்த பொழுது , தேள் தவளையை கொட்டி விட்டதாம். தவளை விஷம் ஏறி தண்ணீரில் மூழ்க தொடங்கியதாம். அதனோடு சேர்ந்து , தேளும் தண்ணீரில் மூழ்கி இறக்க தொடங்கியதாம்.அப்பொழுது , தவளை முட்டாள் தேளே! உன்னால் நாம் இருவரும் மடிய போகிறோம். கரையில் இருந்த போது அறிவுப்பூர்வமாக பேசிய நீ ஏன் இப்படி முட்டாள் தனமாக நடந்து கொண்டாய் என்றதாம். அதற்கு தேள் , கொட்டுவது என் குணம் , அதை எதனாலும் மாற்ற முடியாது என்று கூறி மடிந்ததாம்.

Monday, January 02, 2006

தொலைந்(த்)த நட்பு

எல்லா திசைகளிலும் நுணுக்கி எழுதி
எச்சில் தொட்டு ஒட்டிய
கடிதம் தந்த
ஆத்ம ஸ்பரிசம்

இல்லாத காரணத்தாலா
இரு வரிகளுக்கு மேல்
எழுத தோன்றவில்லை
இ-மெயிலில்!


ஓசையில்லாமல்
ஒப்பாரி வைக்காமல்
இழந்து விட்ட
அற்புத மனித உறவுகளை
இனம் காண்பது எப்பொழுது?

மௌனித்த வார்த்தைகள்
உயிர்ப்பிக்குமா மறுபடியும்?