Friday, November 21, 2008

கல்லடி பட்ட மரம்

யாரோ எறிந்த கல்
மரத்தின் குறி தவறி
என் தலையை
நோக்கி வந்து கொண்டிருக்கிறது...

செம்புலம் கலக்க
வர மறுத்த மழையின்
பரிட்சயம் மறந்த மரம்
செந்நீர் பட்டாவது
சிறிது சிலிர்க்கட்டும்
என் வீரமாய் நோக்கினேன்...

கனி நோக்கி கல்லெரிந்த
சிறுவன் சிதறியோட
தழும்புகளின் நினைவுகள்
ஓடும் சிறுவனும்
நானே என உணர்த்தியது...

காயத்தின் அடையாளம்
தழும்பென
நினைத்திருந்த என்னை
காலத்தின் தொடர் பயணம்
ஆற்றிய அனுபவ வித்தை என..

கல்லெரிந்த கைகளுக்கு
கனி கொடுக்கும் மரம்
சன்னமாய் அசைந்தே
கல்லுடன் சில பூக்களையும்
என் மேல் உதிர்த்து காண்பித்தது!

Saturday, November 01, 2008

கடவுள்

கல்லை
கடவுளாக்கி காட்டியது
சில மனித கைகள் தானெனினும்
என் வாழ்வில்
வெளிச்சமிட்டு காட்டியது
கண் தான ஒப்பமிட்ட
உன் கைகள் தான் !

வார்த்தைகளை
மந்திரமாக்கி
வாழ்த்து பாடியது
சில மனித குரல்கள் தானெனினும்
என் பார்வைக்கு
வாழ்த்து அழைத்தது
மரணத்திலும்
மறவாத
உன் வாக்கு தான் !!