மல்லிகை மகள் - 9/16/07 / 4/30/08
--------------------------------------------
ஆம்ஸ்டர்டாமில் ஒரு நாள் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது , வழக்கம் போல ஏதாவது ஒரு சுற்றுலா பேருந்தில் ஏறி முக்கிய தலங்கள் அனைத்தின் முன்பும் புகைப்படம் எடுத்து சுற்றிப் பார்த்த இடங்களின் எண்ணிக்கையில் ஒன்றை சேர்த்த திருப்தி அடையலாம் என்றிருந்த போது , உடன் வந்த ரஷ்ய நண்பர் டிமிட்ரி நேரே வான் கோ ஓவிய அருங்காட்சியகம் செல்லலாம் என்றார். இது ஓவியர்களின் புனித தலம், அறிவு கோயில் என்றும் காணக் கிடைக்காத வான் கோவின் ஓவியங்கள் பல இங்கு உள்ளது என்று அழைத்துச் சென்றார்.
விமான நிலையத்திலிருந்து 20 நிமிட ரயில் பயணத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தோம். மழை லேசாக தூற ஆரம்பிக்கவே, குடை ஒன்றையும்,வரைபடம் ஒன்றையும் வாங்கி கொண்டு, காபியை சிப்பினோம். மோனலிசா வகை ஓவியங்களா ,இல்லை தலையை பிய்க்க வைக்கின்ற நவீன ஓவியங்களா என்று நண்பரின் ஓவிய திறமையே சோதித்தேன். இரண்டும் இல்லை, இது சாமன்யர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கருத்தோவியங்கள் என்றார். காபியை முடித்து, காபியுடன் வந்த சாக்லேட்டை கடித்து ( சாப்பிட்டவுடன் வெற்றிலை மாதிரி , காபியுடன் சாக்கலேட்) ,ட்ராம் ஒன்றை பிடித்து வான் கோவை வந்தடைந்தோம்.
10 யுரோ செலுத்தி உள்ளே சென்றால், உடன் கொண்டு வந்த பொருட்களை ( காமிரா உட்பட) லாக்கரில் போட்டு விட்டுதான் நிரந்தர காட்சிக் கூடத்திற்குள் செல்ல அனுமதித்தார்கள்.நிரந்தர காட்சிக் கூடம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. முதாலவது வான் கோவின் ஓவியங்கள். இரண்டாவது மற்ற கலைஞர்களின் ( அவரது சம காலத்தவர், நண்பர்கள் மற்றும் அவரின் ஓவிய வழி வந்தவர்கள்) ஓவியங்கள். மூன்றாவது வான் கோவின் ஓவிய வரலாற்றை பிரதிபலிக்கும் கடிதங்கள் மற்றும் பொருட்கள்.
"கலைகளிலே அவள் ஓவியம்" என்றார் கண்ணதாசன். "கலைகளிலே அவள் ஓவியம்" என்றார் கண்ணதாசன். அழகியல் மட்டுமின்றி, உணர்வியலகாவும் உள்ளதால்தான் ஓவியம் என அதன் உண்ணதத்தை கவிதையில் படைத்தாரோ நம் கவிஞர். அது போல் , ஓவியத்திலேயே புதுக்கவிதைகள் படைத்து இந்த உலக்த்தை உலுக்கியவர் தான் வின்செண்ட் வான் கோ ( 1853-1890). இந்த டச்சு (நெதர்லாந்த்) நாட்டவரின் கலைவடிவங்களை , டச்சு தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வின்செண்ட் வான் கோ ஓவிய அருங்காட்சியகம் பெருமையுடன் தாங்கி வருகிறது.
ஓவியம் என்பது காட்சியை அச்சு பிசகாமல் நகல் எடுக்கும் கலையாக மட்டும் இருந்த காலத்தில் , ஓவியரின் திறமை என்பது ஓவியத்தின் தத்ரூபத்தில் மட்டும் மதிப்பிடப்பட்ட காலத்தில் ஒவியரை ஒரு படைப்பாளியாக காட்ட வித்திட்ட முதல் முயற்சி இது.காட்சியின் நகலாக ஒரு பரிமாணத்தை மட்டும் ஓவியம் காட்டாமல் , காண்பவரின் கற்பனையில் ஆயிரம் கதைகள் சொல்லும் ஒரு படைப்பாக அதை மாற்ற , காட்சியின் வரைவை சிறிதே திரித்து , கருப் பொருளின் வீர்யத்தை உணர்வாக வெளிப்படுத்தும் அவரின் முயற்சிகள்.
அவரின் ஓவியங்களில் காணப்படும் தூக்கலான வண்ணங்களும், அநாயசமான தூரிகை வீச்சும் ஒரு புதிய ஓவிய உலகிற்கு வழி வகுத்தது எனலாம்.வசீகர புன்னைகையோ, புரியாத புதிரோ இல்லை.அன்றாடம் காணும் காட்சிகள் தான், ஆனால் கார்பன் காப்பியாக இல்லாமல் , வண்ணங்களின் கலவையும் , தூரிகையின் வீச்சும் மனசோடு சொல்லும் கதைகள் ஆயிரம். வாயில்லா ஜீவன்களின் வார்த்தைகள் தான் வண்ணங்களோ?.
இவரின் ஆரம்ப கால ஓவியங்கள் , இயற்கையின் மீதிருந்த இவரின் ஈடுபாட்டை வெளிப்படுத்தும். இவரின் சகோதரர் தியோவின் ஆதரவோடு , பாரீஸ் சென்றபின் அங்கிருந்த திறமை மிகுந்த ஓவியர்களின் நட்பு இவரின் ஓவிய அணுகுமுறையை மாற்றியது. ஜப்பானிய ஓவியங்களும் இவரை மிகவும் கவர்ந்தது.இவை இரண்டும் வேர்ந்து வான் கோவின் தூரிகையில் , ஒரு புதிய ஓவிய உலகிற்கு பாதையிட்டன.வான் கோவின் வண்ணங்கள் அவரின் உணர்வுகளை பிரதிபலித்தன.நிறங்கள் உணர்வுகளின் ஊடகம் என்ற இவரின் அணுகுமுறை, புதுவகையான சாயங்களை உபயோகிக்கும் முறைகளையும், வரைந்தது போல் வர்ணம் தீட்டும் தூரிகை கெட்டியான வீச்சுகளையும்,தூக்கலான நிறங்களை பயன்படுத்தும் முறையையும் அறிமுகப்படுத்தியது.அவரது சகோதரர் தியோவின் ஆதரவும் நட்பும் அவர்களின் கடிதங்களும் கண் கலங்க செய்தது.
காவியம் எழுதும் போது ஏற்படும் பிழைகளுக்காக தனது தலையால் எழுத்தாணியால் குத்திக் கொண்ட சீ(ழ்)த்தலைசாத்தனார் போல , கோபத்தில் தன் காதையே நறுக்கிக் கொண்டவர் தான் வான் கோ.உலகமெங்கும் உன்னத
கலைஞர்களின் வாழ்க்கை ஒரே மாதிரிதான் போலும்.வறுமை,விரக்தி,எதிர்ப்பு , பைத்தியகாரப் பட்டம், உலகத்தை உலுக்கிவிடும் மனோபலம், வாழும் போது கிட்டாப் புகழ்,இளம் வயதில் அகால மரணம்.
200கும் மேற்பட்ட ஓவியங்கள மற்றும் கடிதங்கள் அவரின் வாழ்க்கையின் ஐந்து பகுதிகளாக அவர் வாழ்ந்த இடங்களின் காலகட்டமாக காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது.நெதர்லாந்த்(Netherland),பாரீஸ்(Paris),ஆர்ல் (Arles), சென்ரேமி(Saint-Rémy),ஒவெர்சுர்வஸ்(Auvers-sur-Oise)
ஆரம்ப காலத்தில் தனது உறவினர் ஆண்டனிடம் (Anton Mauve) ஓவியம் வரைய கற்றுக் கொண்டாலும் , பின்னர் ஏகலைவன் போல் தானே படம் வரையக் கற்றுக் கொண்டு வரைந்த பண்ணை காட்சிகளும், விவசாயிகளின் படங்களும் "நெதர்லாந்த்" பகுதியில் நிறைந்திருக்கிறது.இந்த காலகட்ட ஓவியங்கள் , கறுமையான வண்ணங்களை கொண்டிருப்பதை காணலாம்.இதை பூமியின் நிறமெனலாம். 40க்கும் மேற்பட்ட விவசாய காட்சிகள், பண்ணை ஆட்கள் ஒவியம், சிகரெட் பிடிக்கும் எலும்புக் கூடு ஓவியங்கள் அற்புதமானது. ஒரு விவசாய குடும்பம் இரவு உணவு அருந்தும் காட்சியில் அமைந்த்த உருளைக்கிழங்கு உண்பவர்கள் என்ற தலைப்பிலிட்ட ஓவியம் பிரபலமானது.
பின்னர் பாரிஸ் சென்று , அவரது சகோதரர் தியோவுடன் இருந்து ,பிரென்சு ஓவிய கல்லூரியில் சிறிது காலம் ஓவியம் பயின்று வரைந்த படங்கள் "பாரீஸ்" பகுதியில் உள்ளது.இந்த காலகட்டத்தில் தான் அவரது புகழ்பெற்ற ஓவிய பாணி ஆரம்பமானது. பிரகாசமான பிண்ணனிகளையும்,நகர்புற காட்சிகளையும் கொண்ட படங்கள் , வண்ணங்களின் விளையாட்டுகளில் உயிரோட்டமாய் உள்ளன.பாரிஸில் தான் தனி நபர்களின் ஓவியங்களை வரைவதன் மூலம் வருமானம் ஈட்டமுடியும் என்று தோன்றியதால் , தனி நபர் ஓவியங்களை வரைய பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்.மாதிரியாக மற்றவர்களை அமர்த்திக் கொள்ள நிதிநிலைமை இடம் கொடாததால் , கண்ணாடி முன் அமர்ந்து கொண்டு தன்னையே வெவ்வேறு பாணிகளில் வரைந்து பழகிய படங்கள் , வான் கோ என்ற கலைஞனின் கனவை தினம் சொல்கின்றன. காலத்தின் சாட்சியாக, தனது தோற்றத்தின் ஞாபகமாக , சுவரை அலங்கரிக்க தன்னை அசலாக படமாக வரைந்து வைத்து கொள்ள எத்தனிக்கும் மனிதரிடம், தனது மனத்தின் படமாக இவற்றை வரைந்துள்ளார்.
சக ஓவியர்களை ஒன்று சேர்த்து ஓவிய கூடம் அமைப்பது அவரது கனவாக இருந்தது. அதற்காக தென் பிரான்ஸில் உள்ள ஆர்ல் பிரதேசத்தில் , மஞ்சள் இல்லம் எனும் ஓவியக் கூடத்தை வாடகைக்கு எடுத்த அவரின் முயற்சிகளின் நினைவுபடுத்தும் படங்கள் , "ஆர்ல்" பகுதியில் உள்ளது. இங்குதான் உலக் புகழ் பெற்ற சூரிய காந்தி படங்கள் உள்ளது. மஞ்சள் நிறத்தின் மேலிருந்த அவரது காதல் , அவரது அனைத்து படங்களிலும் காண முடியும். நண்பர் கோகெனுடன் (Gauguin) கொண்ட கருத்து வேறுபாட்டில் தனது காதை அறுத்தெரிந்ததும் இங்கு தான்.
ஓவியக் கூடம் அமைக்கும் முயற்சியில் தோல்வி,நண்பருடன் கருத்து வேறுபாடு என் விரக்தியில் வாழ்க்கையின் ஓரத்திற்கு விரட்டப்பட ,வான் கோ சென்ரேமி மனநல மருத்துவமனையில் தன்னை சேர்த்துக் கொண்டார். வெளி உலகில் இருப்பதை விட , இங்கு அமைதியாக இருப்பதாக உணர்ந்ததாக தியோவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கிறார். தனது அறை சன்னலின் வழியாக தெரிந்த மரங்களையும், பூக்களையும்,பரந்தவெளிகளையும் , கோதுமை விளைநிலங்களையும், சைப்ரஸ் மரங்களையும் கண்டு வரைந்த படங்கள் "சென்ரேமி" பகுதியில் உள்ளது. காட்டின் பசுமையில் ஊடுரும் ஒளிக்கதிர்கள் பிரதிபலிக்கும் நிறங்களின் கலவை கண்களின் கனவுலகம்.மற்ற ஓவியர்களின் கருப்பு வெள்ளை வரைபடங்களை மாதிரியாகக் கொண்டு வரைந்த வண்ண ஒவியங்கள் பலவும் உண்டு.
நகர்புர வாழ்க்கையை விரும்பாத , அதே சமயம் சகோதரர் தியோவின் அருகாமையில் இருக்க் விரும்பிய வான் கோ, பாரிஸ்க்கு அருகில் உள்ள ஒவெர்சுர்வஸில் மருத்துவர் பாலின் (Paul Gachet) கண்காணிப்பில் இருந்த போது வரைந்த கிராமப்புற தோற்றங்கள் , "ஒவெர்சுர்வஸ்" பகுதியில் உள்ளது.வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆரோக்கியத்தையும்,ஊக்கத்தையும் இந்த காட்சிகள் அளிப்பதாக வான் கோவின் கடிதங்கள் விவரிக்கின்றன.
1890-ல் விரக்தியின் உச்சத்தில் அவர் ஒரு கோதுமை விளைநிலத்தில் தன்னை சுட்டுக் கொண்டார். இறுதியில் , அவரது சவப்பெட்டியை அலங்கரித்ததும் மஞ்சள் மலர்கள் தான்.
Sunday, March 15, 2009
வலைப்பூ July 25, 2004 - July 31, 2004
வலைப்பூ ஆசிரியராக July 25, 2004 - July 31, 2004
------------------------------------------------
விடுதலை...விடுதலை...விடுதலை
விடை பெறும் நேரம் வந்து விட்டது.உங்களுக்கு என் அபத்தங்களில் இருந்து விடுதலை வந்து விட்டது. சென்ற வியாழன் இனிய கனவாக மதி அவர்களிடமிருந்த மின்னஞ்சலில் இந்த வாய்ப்பு வந்த போது , நமக்கு இப்படி ஒரு வாய்ப்பா என்று ஆச்சரியத்துடன் துவங்கினேன். காலி பெருங்காய டப்பாவான நான் என்ன எழுதுவது என்று ஆரம்பத்தில் விழி பிதுங்கினாலும், எழுத ஆரம்பித்த பின் எண்ணங்கள் வரத் தொடங்கின.
நண்பரது வீட்டில் பார்த்த சாக்பீஸ் கோலத்தினால் "வரவேற்பு கோலம்", சுவாரசியமாக இருக்கும் என்பதால் "செவ்வாய் கிழமை கொழுக்கட்டை", கார சாரமாக காதல் கதைகளை மூடி வைத்திருப்பவர்களை சீண்டி விட "காதல் பொய்யடா",என் சிந்தனையில் எப்பொழுதும் இருந்து வரும் "ஏட்டுச் சுரைக்காய்", கணிதத்தில் கொண்ட காதலின் காரணமாக "வாடகை வாகன எண்",தமிழ் வலைப் பதிவில் அவ்வளவாக வந்திராத/எழுதப்படாத "மாயா ஜாலம்",தாய் மண்ணின் பாசத்தால் "செட்டிநாடு ஸ்பெஷல்" என்று தொடர்ந்தேன்.வலை வலம் சென்றது உண்மையிலேயே புத்துணர்ச்சி தருவதாக இருந்தது.
மழை நகரம், குழந்தை கவிஞர், ப்ளேக் நோய் பரவிய போது மகாத்மாவின் சேவை , ஊனம் , வண்ணங்களின் "பால்" என்று எழுத நினைத்திருந்தேன். தட்டுத் தடுமாறி எழுதி, பித்து பிடித்தவன் போல கடந்த ஒரு வாரமாக இருந்ததனால் இவற்றை எழுத இயலவில்லை. என் வலைத் தளத்தில் இவற்றை தொடர்வேன்.
"எழுத்தென்னும் தவம்" என்பதன் கனம் ஒரு வாரம் தொடர்ந்து எழுதியதில் புரிந்தது. இலக்கண (?) சந்தேகங்களும் , எங்கே காற்புள்ளி வைப்பது, அரைப்புள்ளி வைப்பது என்பது போன்ற குழப்பங்களும், சில ஆங்கில வார்த்தைகளின் தமிழாக்கம் தெரியாமலும் விழி பிதுங்கி போனேன். எண்ணத்தில் ஓடுவதை அப்படியே எழுத்தில் வடிப்பதற்கே , இவ்வளவு கடினமாக இருக்கிறது. கற்பனை செய்து, சுவரசியமாக , மெருகூட்டி எழுதுவது என்பதற்கு தவமிருக்க வேண்டும். தவமிருக்க ஆர்வம் வந்து விட்டது.
தனி மடலிலும் , பின்னூட்டங்கள் மூலமாகவும் ஆதரவு தந்தவர்களுக்கும் , நல்ல கருத்துக்களை சுட்டிக் காட்டியவர்களுக்கும் , மௌனமாக படித்து பொருத்து வந்தவர்களுக்கும் என் கோடானுகோடி நன்றிகள்.
- அநாமிகா மெய்யப்பன்
என் மனைவி , கணினியில் எந்த advanced options ( copy-n-paste, rotate) பயன்படுத்தாமல் சில வருடங்களுக்கு முன் வரைந்த ரங்கோலி.
Posted by Editor at 03:50 AM | Comments (6) | TrackBack
செட்டிநாடு ஸ்பெஷல் - 2
இதை பழம் பெருமை பேச மட்டும் எழுத வில்லை. நண்பர்களே , நீங்கள் அனைவரும் உங்களால் இயன்ற அளவில் ஏதாவது பொது சேவை , நன்கொடைகள் கண்டிப்பாக செய்து கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" என்பது நாம் அறியாதது அல்ல. அடுத்தவர்களுக்கு உதவும் நிலையில் இருத்தல் அதனினும் அரிது என்பதை உணர வேண்டும்.வணிக நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் , சென்ற வருட வருமானத்தை விட அதிகமாக ஈட்ட இலக்கு நிர்ணயித்து செயல்படுவது போல் , உங்களின் ( உங்களோடு என்னையும் சேர்த்து தான்) உயர்ந்த சேவை இலக்குகளும் வருடா வருடம் உயர்ந்து கொண்டே இருக்கட்டும்.
செட்டிநாட்டவற்கு வணிகம் தான் இவர்களின் உயிர்மூச்சு.கந்து வட்டி வாங்காமல் நியாய(?!?) வட்டி வாங்கி தொழில் புரிந்தவர்கள். "பற்று/வரவு" முறையை ஆரம்பித்து வைத்தவர்கள். இன்றைய தலை சிறந்த வங்கிகள் பலவற்றின் தோற்றத்திற்குப் பின்னால் செட்டிநாட்டுக் காரர்களை ( காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள 96 கிராமங்கள் அடங்கியது செட்டிநாடு) காணலாம்.குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் , திரைகடலோடி திரவியம் தேட சென்றவர்கள்.குழந்தை பிறந்தவுடன் , வெளி நாட்டிற்கு திரவியம் தேடச் சென்ற பலர், குழந்தையின் திருமணத்திற்கு தான் திரும்பி வரும் அளவுக்கு "தொழில் பக்தி" அதிகம். இப்படி பாடுபட்டு,குடும்பத்தை விட்டு சென்று கண்ணும் கருத்துமாக சேர்த்த செல்வத்தை , பல அறப்பணிகளுக்கு செலவிட்டது தான் சிறப்பு அம்சம்.
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் சென்று, உலகெங்கும் சென்ற இடங்களிலெல்லாம் முருகனுக்கு கோவில்கள் கட்டியதும் , நகர சிவன் கோவில்கள் கட்டியதும் எண்ணற்றவை.சியாட்டலில் ஒரு கோவில் கட்ட 1000 டாலர் நன்கொடை வழங்கலாமா என்று ஆயிரம் முறை சிந்தித்து , சில நாட்கள் உறக்கம் இழந்து தவித்த என்னைப் போன்றோருக்கு , வாழ்நாள் முழுவதும் சம்பாதித்ததை பொதுப் பணிக்கு ஒரு நொடியில் தூக்கி கொடுத்த பலரை பற்றி கேள்வி படும் போது / பார்க்கும் போது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது.
கோவில் கட்டுவதுடன் நின்று விடவில்லை. கோயிலுக்கு முன் ஒரு குளம் கண்டிப்பாக இருக்கும். இப்படி வறண்ட பகுதியான செட்டிநாட்டில் குளங்களாக நிறைந்திருப்பதனால் தான் தண்ணீர் கஷ்டம் அவ்வளவாக இல்லை.சென்ற இடமெல்லாம் சத்திரங்கள் அமைத்து அதனுடன், வறியவருக்கும், சிவனடியார்களுக்கும் அன்னதானம் தினம் தோறும் செய்யும் படி வருவாய் கொண்ட சொத்துக்களை அமைத்து கொடுத்துள்ளார்கள். காசி முதல் இராமேஸ்வரம் வரை , மலேசியா, சிங்கப்பூர், சிலோன், வியட்நாம் , பர்மா போன்ற நாடுகளிலும் இந்த சத்திரங்கள் உண்டு.இராமேஸ்வரம் , திருவண்ணாமலை, மலேசியாவில் அலோஸ்டார் போன்ற இடங்களுக்கு நான் சென்ற போது இந்த சத்திரங்களில் தான் நான் தங்கியிருக்கிறேன். வாடகை இலவசம்.தலையணை வேண்டுமானால் 1 ரூபாய், அவ்வளவு தான்.அன்னதானம் போன்ற அறப்பணி செய்யவும் , ஊர் விட்டு ஊர் சென்று வணிகம் செய்யும் போது தங்கிக் கொள்ளவும் வசதியாக இந்த பொது சத்திரங்கள் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா முழுவதும். எவரெஸ்டிற்கு சென்றால் கூட டீக்கடை மலையாள நாயரை பார்க்கலாம் என்பது போல , எங்கு போனாலும் ஒரு நகர சத்திரமும் இருக்கும்.கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை முறையாக தெரிந்து கொண்டதனால் தான் , இப்படிப் பட்ட பொது சத்திரங்கள் அமைக்க முடிந்தது.
ஆன்மிகம் , அன்ன தானம் இவை எல்லாவற்றையும் விடவும் காலத்தால் இவர்கள் செய்த மிகப் பெரிய அறப்பணி கல்விகூடங்கள் அமைத்தது தான்.செட்டிநாட்டிலும் , மதுரை, சிதம்பரம் , சென்னை மற்றும் தமிழகம் முழுதும் பல இடங்களிலும் இவர்கள் அமைத்த சிறு பள்ளிக் கூடங்கள் முதல் பரந்து விரிந்த பல்கலைக் கழகங்கள் வரை காணலாம். அதில் பயனுற்றவன் என்ற முறையில் நன்றி பெருக்கோடு எண்ணிப் பார்க்கிறேன். வியாபாரத்தில் நொடித்து கடனில் தத்தளித்த எங்கள் குடும்பத்திலிருந்து வெளியூரில் விடுதியில் தங்கி படிப்பது என்பது இயலாத காரியம். உள்ளூரிலேயே இருந்ததினால் தான் பொறியியல் கல்லூரியில் என்னால் படிக்க முடிந்தது. DOTE-1 விண்ணப்பங்களில் விருப்ப வரிசையில் முதலில் கிண்டி பொறியியல் கல்லூரியையும் , இரண்டாவதாக REC யையும் பொதுவாக மாணவர்கள் எடுக்கும் போது, நான் அழகப்பா பொறியியல் கல்லூரியை தான் எனது முதல் , இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்ப வரிசையில் தெரிவித்திருந்தேன். காரைக்குடியில் கல்லூரி அமைத்துக் கொடுத்த அருமை அழகப்பருக்கு நான் என்றென்றும் கடமை பட்டிருக்கிறேன்.
கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள் இவர்கள்.வீட்டு நிலைப் படியில் இருந்து வாசல்தரை வரை எங்கும் கலைநயம் மிளிரும்.அதானால் தானோ என்னவோ பிற்காலத்தில் பத்திரிக்கை துறை, திரைத் துறை இவற்றில் பலரை காரைக்குடியிலிருந்து காணலாம்.மற்ற துறைகளையும் விட்டு வைக்கவில்லை. விளையாட்டு ஆகட்டும் (சென்னை சேப்பாக்க மைதானம்), தமிழிசை ஆகட்டும் பொதுநலமே பெரிதென கருதும் உன்னதம் எங்கிருந்து வந்திருக்கும் என்று எண்ணி பார்க்கிறேன். செல்வம் ஈட்டும் போது காட்டும் கடின சித்தம் , அறப் பணி செய்யும் போது எப்படி முற்றிலும் மாறி விடுகிறது என்பது அதிசயம் தான். இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் , செல்வம் தீட்டும் காலம் ஒன்று, சேவை செய்யும் காலம் ஒன்று என்று பிரித்து கொண்டதால் தான் இது சாத்தியமாயிற்றோ என்று நினைத்ததுண்டு.
நிறைகளை மட்டும் சொல்லி முடிக்க மனம் ஒப்பவில்லை. குறைகளை பட்டியலிடவும் மனமில்லை. அதனால் மனக்குறை ஒன்றை மட்டும் தெரிவித்து முடித்துக் கொள்கிறேன்.செல்வந்தர்கள் பலர் என்றாலும் , வறுமையின் பிடியில் இருப்பவரும் எண்ணற்றவர்கள். அவர்களுகாகவாவது , அரசனும் ஆண்டியாகும் அளவிற்கு உள்ள பழக்கம் காரணமாக நீடித்து வரும் வரதட்சிணை முறை மாற வேண்டும்.
- அநாமிகா மெய்யப்பன்
Posted by Editor at 03:38 AM | Comments (5) | TrackBack
July 30, 2004
செட்டிநாடு ஸ்பெஷல் - 1
முன்னறிவிப்பு : "குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்பதை நம்புகிறவன் நான். இது நான் பிறப்பால் அடையாளம் காணப்பட்ட ஒரு சாதியின் அருமை பெருமைகளையோ அல்லது சிறுமைகளையோ பற்றியோ அல்ல. காரைக்குடி பக்கம் வந்திடாதவர்கள் , அந்த பக்கம் நடக்கும் சில சுவாரசியமான விஷயங்களை தெரிந்து கொள்ள மட்டுமே இதை எழுதுகிறேன்.எல்லை மீறியிருந்தால் மன்னிக்கவும்.
கோவில்களில் சின்ன ட்யூப்லைட்டில் கூட பெரிதாக உபயம் என்று எழுதப்பட்டிருப்பது இப்பொழுதெல்லாம் சகஜம்.இந்த பழக்கம் காரைக்குடி பக்கமிருந்து தான் ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆற்றில் கொட்டினாலும் , அளந்து கொட்டு என்பதோடு இனிஷியல் எழுதி கொட்டு என்று நினைப்பவர்கள். சட்டி, பானை, ஸ்பூன் முதற்கொண்டு இனிஷியல் இல்லாத இடம் இருக்காது. குடும்ப முன்னோர்களை தெரிந்து கொள்ள வேண்டுமா ? இங்கே வாருங்கள் என்று பல இணைய தளங்கள் இப்பொழுது வரவேற்கின்றன. எங்களுக்கு , அங்கேயெல்லாம் செல்ல தேவையில்லை.வீட்டிலுள்ள சட்டி முட்டிகளை திருப்பி பார்த்தாலே தெரிந்து விடும். ஒவ்வொருவருக்கும் புகைவண்டி நீளத்திற்கு இனிஷியல் இருக்கும்.உதாரணத்திற்கு எனது இனிஷியல் எக்ஸ்பிரஸ் பி.பெரு.சிஅ.ராம.முரு.சுப.கும.மீ.மெய்யப்பன்.
அநேகமாக் திரு.பிச்சான் ( எனது இனிஷியலில் முதலில் உள்ளவர் இவர் தான்) அவர்கள் ஒற்றை ஆளாக வந்து , எங்கள் கிராமத்தை துவக்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.
முல்லைக்கு தேர் தந்த பாரியை பற்றி படித்திருப்பீர்கள். வீட்டு சுவற்றிற்கு முட்டை கொடுத்தவர்களை பற்றி தெரியுமா?. இப்பொழுது "முட்டை புரட்சி" வந்து சல்லிசாக கிடைக்கும் காலத்திலேயே, சத்துணவில் முட்டை போடுவது பெரிதாக இருக்கிறது. அந்த காலத்தில் வண்டி வண்டியாக கோழி முட்டைகளை கொண்டு வந்து , அதன் வெள்ளைத் தாதுவை எடுத்து , வீட்டுச் சுவர்கள் பளபளப்பாக இருக்க பூசியிருக்கிறார்கள் காசுள்ள பார்ட்டிகள்.
நான்கு அறை கொண்ட வீட்டை நான் வாங்கி விட்டு , ஒரு அறையை யாரும் பயன்படுத்தவில்லையே என்ற கவலையில் , மாதம் ஒரு முறை அந்த அறைக்கு சென்று நடைப் பயிற்சி செய்து வருகிறேன். அந்த காலத்தில் சிலர் முன்னோக்கு பார்வையுடன் தெருவிற்கு ஒரு வீடாக குட்டி அரண்மணை போல வளவு முழுவதும் அறைகளை வைத்து கட்டிவிட்டு சென்றதால் தான் , சில தலைமுறைகள் கழித்து இன்று குடும்பத்திற்கு ஒரு அறையாக மிஞ்சியிருக்கிறது.
வாழ்க்கை முழுவதும் சேமித்து ஒரு நாள் திருமண வைபவத்தில் அனைத்தையும் செலவளித்து விடும் வினோதம் இங்கு அதிகம். தலை வாழை இலை போட்டு, எத்தனை வகையான பலகாரங்கள் தருகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது ஒவ்வொருவரின் பெருமையும். அடுத்த அளவுகோல் எத்தனை அடுக்கு சட்டி வைக்கிறார்கள் என்பதில் இருக்கிறது. "சாமான் பரப்புவது" ஒரு பெரிய கலை. என்னைப் போன்ற ஏழைகள் , இப்படி வரும் சாமான்களை , வாடகைக்கு ஒரு அறை எடுத்து போட்டு வைக்க வேண்டும்.ஆட்கள் குடியிருக்க வாடகைக்கு வீடு எடுப்பதை விட , இது மாதிரியான பொருள்களை போட்டு வைக்க வாடகை வீடு ( அறை) எடுப்பவர்கள் அதிகம். வீட்டு சொந்தக் காரர்களுக்கும் , குடியிருப்போர் தொல்லை வராது பாருங்கள்.
திருமணத்திற்கு மொய் எழுத வேண்டுமே என்று யாருமே கவலைப் பட வேண்டாம். எல்லாரும் ஓர் நிறை என்பது போல , fixed rate ஆக , பணக்காரராக இருந்தாலும் , பரம ஏழையாக இருந்தாலும் அனைவரும் 25 பைசா தான் மொய் எழுத வேண்டும். சில இடங்களில் 1 ரூபாய் 25 பைசாவாக இருக்கும். அதை கறாராக வசூல் செய்ய , மொய் நோட்டுடன், தடபுடலாக கல்லாப் பெட்டி,காற்றாடி சூழ மொய் எழுதும் கூட்டம் ஆச்சர்யமாக இருக்கும்.
செட்டி நாட்டு அசைவ சமையல் ரொம்ப பிரபல்யம். ஆ(ட்)ச்சியை பிடிக்க போறோம் என்று காரைக்குடி பக்கம் போய் சொல்லி விடாதே , அடித்து விடுவார்கள் என்ற திரை வசனம் கேள்விபட்டிருப்பீர்கள். அந்த அளவிற்கு "ஆச்சி" யின் புகழ் ஒங்கியிருக்கிறது. அசைவ சமையலுக்கும் , ஆச்சிக்கும் தொடர்புடைய ஒரு கதை இருக்கிறது.சோழ ராஜ்ஜியத்தில் , செட்டி இன பெண்ணை ஒரு அரசன் கவர்ந்து விட்டதாகவும் , அதனால் பெண்கள் எல்லாம் தீக்குளித்து விட்டதாகவும் , அதனால் சைவ பிள்ளை குலத்தில் இருந்து பெண்களை கலப்பு மணந்து கொண்டதாகவும் ஒரு கதை உண்டு. ஆச்சி என்ற அடை மொழி அந்த குலப் பெண்களை குறிப்பதாகும். பின்னர் அதுவே நிரந்தர அடையாள மொழியாகி விட்டது.திருமணம் செய்து வந்த பின் , பெண் வழி குல சொந்தங்கள் தொடராமலிருக்க அசைவம் சமைக்க ஆரம்பித்ததாக செல்கிறது அந்த கதை.அதற்கு முன் சைவமாக தான் இருந்தார்களாம். ஆச்சியால் வந்தது தான் அசைவ சமையலும்.இந்த சம்பவத்திற்கு பின்னர் பாண்டிய நாட்டிற்கு புலம் பெயர்ந்து விட்டனராம்.
Posted by Editor at 04:01 PM | Comments (11) | TrackBack
வலை வலம் - 4
புது மொட்டுக்களின் அணிவகுப்பு புத்துணர்ச்சி அளிக்கிறது.மேலும் பூத்து குலுங்க, உங்களின் ஆதரவு நிழல் வழங்க வாருங்களேன்.
அருள் குமரனின் உள்ளத்து ஓசை பலமாக கேட்கிறது.சிங்கையிலிருந்து சென்னைக்கு சென்ற பயணத்தை மூன்று பகுதிகளாக விவரித்திருக்கிறார். அவர் அருகிலேயே தனித்தீவாக உள்ளத்திற்கு திரை போட்டு , கைதொலைபேசி தர தவிர்த்த சிங்கிற்கு அருகில் அமர்ந்து பயணித்தது போல இருக்கிறது. தனியாளாக சென்றால் பச்சை நரம்பெல்லாம் பார்க்கலாம் என்று தெரிகிறது.நமக்கெங்கே! பிள்ளையாண்டான் எங்கே ஓடுகிறானோ , புத்திரி எதற்கு அழுகிறாளோ , அம்மணி எதற்கு முறைக்கிறார்களோ என்று எப்படா ஊர் போய் சேர்வோம் என்று இருக்கிறது.
முரளி வெளிச்சம் நோக்கி நடக்கச் சொல்கிறார். ஒரு வயசானவருக்கு அவர் செய்த மிகப் பெரிய சமூக சேவை பற்றி எழுதியுள்ளார். காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்... ஞாபகம் வந்தது.bestseller டா வின்ஸி கோட் பற்றி சொல்கிறார். இந்த ஊரில் எல்லாமே bestseller தான் :). இந்த புத்தகத்தை பற்றிய குறிப்பை படிக்கும் போது கிறிஸ்துவின் சகோதரது கல்லறை என்று ஒரு புதுக் கதையை ஹிஸ்டரி சேனலில் பார்த்தது ஞாபகம் வந்தது.
சுபாஷினியின் தெய்வம் பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது.
"உன் புன்னகைக்காக காத்திருக்கும் இதயம்
உன்னருகில் என்றும் இருக்கும் தெய்வம்... "
எங்கள் வீட்டில் உண்மை தான் . அப்பப்ப சாமியாடும் போதே நினைத்தேன்.
ப்ருந்தாவனத்திற்கு வந்திருக்கிறார் கோபி. கனிகாஸ் - நிஜமல்ல கதை என்கிறார். நம்புவோம்.கதாபாத்திரங்களுக்கு சங்கர் போல முன்னுரை கொடுத்து அறிமுகப் படுத்துகிறார்.
யாழ் சுதாகர் எங்கே நிம்மதி என்று தேடுபவர்களுக்கு , இங்கே நிம்மதி என்று காட்டுகிறார். புகழ்பெற்ற தைப்பூச காவடியின் படம் அருமையாக உள்ளது.
-அநாமிகா மெய்யப்பன்
Posted by Editor at 01:43 AM | Comments (3) | TrackBack
மாய ஜாலம்
உங்களுக்கு மந்திரம், மாய ஜாலம் இவற்றின் மேல் நம்பிக்கை இருக்கிறதா?. இல்லையென்றால் இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும்.
நம்பிக்கை இருக்கிறது என்றால் , நான் எழுதுகின்ற எல்லா குப்பைகளையும் நீங்கள் படிக்க நான் ஏற்கனவே மந்திரித்து விட்டதால் , நீங்கள் விரும்பா விட்டாலும் , இதை படிக்கத் தான் போகிறீர்கள்....
மந்திரம்
அம்புலி மாமாவையும், ரத்ன மாலாவையும் படித்து வளர்ந்ததாலோ, விக்ரமாதித்தன் கதைகளில் அதிகம் ஆழ்ந்து விட்டதாலோ மந்திரம் , மாயா ஜாலம் இவற்றைக் காண எனக்கு கொஞ்சம் ஆர்வம் உண்டு. விறகு அடுப்பு வைத்திருந்ததால் , தேள்களுக்கு எங்கள் வீட்டில் பஞ்சம் இல்லை. வாரத்திற்கு ஒரு தேளாவது வீட்டிற்கு விஜயம் செய்து விடுவர். அப்பொழுதெல்லாம் அம்மா 'ஙொப்பராண சத்தியமா சொல்றேன்..." என்று சொல்லி ஏதோ ஒரு சொற்தொடரை சொல்வார் ( எனக்கு இப்பொழுது மறந்து விட்டது). அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டு தேள்கள் அசையாமல் அங்கேயே நிற்கும். சாவகாசமாக விளக்குமாறையும், குப்பைக் கூடையையும் எடுத்து வந்து அதை அடித்து போடும் வரை அப்படியே நின்று கொண்டிருக்கும். இது ஒரு மந்திரம் என்று நான் நினைத்து வந்தேன்.எப்பொழுதாவது தேள் கொட்டி விட்டால், மருத்துவரிடம் நாங்கள் செல்ல மாட்டோம். ஊரில் பெட்டிக்கடை வைத்திருந்த , ஒரு மலையாள தாத்தாவிடம் சென்றால் , அவர் "சூ சூ" என்று ஏதோ சொல்லி மந்திரித்து, தேள் கடித்த இடத்தில் பட்டென்று கைக்குட்டையால் ஒரு அடி கொடுத்து அனுப்பி விடுவார்.எல்லாம் சரியாகிவிடும். காய்ச்சல் வந்து விட்டால்,பயந்து விட்டோம் என்று சொல்லி , மந்திரித்து கறுப்பு கயிறு கட்டி விடுவார்கள். அது தான் மருந்து.
ஹிப்னாடிஸம்
ஆரம்ப கல்வி கற்கும் கால கட்டத்தில் , குடும்ப வறுமை காரணமாக அத்தை வீட்டில் தங்கி படித்து வந்த என் நண்பன் பூதலிங்கம் ஒரு நாள் காணமல் போனான்.யாரோ அவனை மயக்கி,விபூதி பூசி கூட்டி சென்று விட்டதாகவும், போகும் வழியில் பேருந்து நிலையத்தில் ஞாபகம் மீண்டு வந்து தப்பித்து , அவனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக , அவனது அத்தை வீட்டிற்கு தகவல் வந்தது.ஹிப்னாடிஸம் பண்ணி , அவனை கூட்டி சென்றிருப்பார்கள் என்று நண்பர்கள் அனைவரும் நம்பினோம். கொஞ்ச நாட்கள் பள்ளிக்கூடம் செல்லவே பயமாக இருந்தது. யாரும் கண்ணை உற்றுப் பார்க்க சொன்னால் , பார்க்க கூடாது என்று முடிவெடுத்தோம். சற்று காலம் கழித்து , அத்தை வீட்டு வேலை செய்யச் சொல்லி செய்த கொடுமைகள் தாங்காமல், அந்த சிறு வயதிலேயே அவனே அப்படி ஒரு கதை கட்டி விட்டு அப்பா அம்மவிடம் சென்றி விட்டான் என்ற ஊரில் பேசத் தொடங்கினார்கள். எது உண்மை என்பது பூதலிங்கத்திற்கு தான் தெரியும். ஹிப்னாடிஸம் செய்து நான் இது வரையில் யாரையும் நேரில் பார்த்திருக்கா விட்டாலும் , அறிவியலால் ஒத்துக் கொள்ளப்பட ஒரு துறை என்ற வகையில் இது உண்மையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சாமியாட்டம்
இராமநாரயணன் படம் பார்த்து சாமி ஆடும் பெண்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அய்யானர் பெயரை சொல்லிக் கொண்டு , அரிவாளில் நின்று கொண்டு வந்து , அருள் வாக்கு சொல்பவர்கள் எங்கள் பகுதியில் அதிகம். இதையும் மனோதத்துவத்தில் அறிவியல் பூர்வமாக விளக்குகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு , என் நண்பன் ஒருவன் வீட்டில் 10 லட்சம் பரிசு விழும் என்று சொல்லி விட்டு சென்று வாங்கிய பரிசு சீட்டிற்கு 10 லட்சம் பரிசு விழுந்தது. பின் குமுதத்தில் பேட்டி கண்ட போது , அடுத்து 20 லட்சம் பரிசு விழும் என்று பேட்டியில் சொன்னார்கள். அது போலவே அவர்களுக்கு அடுத்து 20 லட்சம் பரிசு கிடைத்தது.அவர்கள் வீட்டில் அனைவருக்கும் சாமி வரும். தெலுங்கு சாமியெல்லாம் வந்து தெலுங்கில் சரளமாக மாட்டலாடிவார்கள்.தொடர்ந்து இரண்டு முறை பரிசு கிடைத்தது , ஏதோ ஒரு மந்திரத்தில் தான் என்று நம்பியவர்கள் பலர்.
சித்து விளையாட்டு
பிரபல சாமியார்கள் விக்கி உள்ளிருந்து லிங்கம் வர வைப்பதையும் , ஆகாயத்தில் கையை வீசி தங்க சங்கிலி கொண்டு வருவதையும் கேள்விப்பட்டு , சித்து வேலைகள் உண்மையாக இருக்குமோ என்று நினைத்ததுண்டு.பின்னாளில் பி.சி.சர்க்கார் பார்வையாளர்கள் முன் புகைவண்டியை மறைய வைத்தது எப்படி , மற்ற மந்திர காட்சிகளை எப்படி தந்திரமாக செய்கிறார்கள் எனறெல்லாம் , பத்திரிக்கைகளிலும் , தொலைக்காட்சியிலும் வந்து விட்டதால் , சித்து விளையாட்டும் இது மாதிரி தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சாவி போன்ற இதழ்களில் வெளி வந்த பகவான் தொடர்களை படித்திருக்கிறேன். பெரிய மனிதர்களெல்லாம் எந்த அடிப்படையில் இது மாதிரியான சித்து வேலைகளை நம்பி பக்த கோடிகளாகிறார்கள் என்று தெரியவில்லை.யாகவா முனிவரும் , ஏதோ ஒரு பாபாவும் சன் டி.வியில் சண்டை போட்டது ரொம்ப பிரபல்யம்.
அறிவியல் கப்ஸா
இந்தியாவில் தான் இப்படி என்றால் , அமெரிக்காவிலும் ,ஊருக்கொரு கைரேகை பார்க்கும் ஜோஸ்யக் கூடங்களும், அவற்றிற்காக தொலைக் காட்சியில் வரும் விளம்பரங்களும் ஆச்சர்யமாக இருந்தன. கலிபோர்னியாவில் , சான் பிரான்சிஸ்கோவிற்கு அருகில் ஒரு மர்மமான இடம் (mystery spot)இருப்பதாக அங்கு அறிவியலுக்கு அப்பாற்பட்ட, புவியீர்ப்பு விசைக்கு எதிரான விஷயங்கள் நடப்பதாகவும் கேள்விப் பட்டு , ஆர்வத்துடன் சென்று பார்த்தேன். கூட வந்த நண்பரும் , அதன் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி வந்தார். அங்கு எடுக்கப் பட்ட புகைப் படங்களில் குள்ளமானவர் , உயரமாவது போல் காண்பித்ததையும் இணையத்தில் பார்த்து , அறிவியலால் விளக்க இயலாத ஒரு நிகழ்வை பார்க்க போவதாக மிகுந்த நம்பிக்கையுடன் சென்றேன்.அங்கு சென்றபின் தான் தெரிந்தது , எல்லாம் ஏமாற்று வேலை என்று. தாறுமாறான சரிவுகளைக் கொண்ட இடத்தில் , புத்திசாலித்தனாமாக சில அமைப்புகளை அமைத்து , நம் கண்களை ஏமாற்றுகிறார்கள்.
பெர்முடா முக்கோணமும் (Bermuda Triangle ) இப்படித்தான் கட்டுக் கதையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெர்முடா முக்கோணத்தை அடிப்படையாக கொண்ட ஆங்கில படத்தை பார்த்த போது , அங்கு சென்று (முடிந்தால் திரும்பி )வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
மிஸ்டரி ஷ்பாட்க்கு அப்புறம் , அந்த ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டேன்.
போனால் திரும்பி வர முடியாத கரும்துளைகளை (black hole) முதலில் படித்த போது , எங்கோ ஆஸ்திரேலியாவிற்கு அப்பால் வானத்தில் இருக்கும். விமானம் அதற்குள் சென்றால் காணாமல் போய்விடும் என்று நினைத்திருந்தேன். பின்னர் தான் தெரிந்தது , இதை கணித சமன்பாடுகள் மூலம் தான் பார்க்க முடியும். நேரில் பார்க்க முடியாது ( பார்த்தால் திரும்பி வர முடியாது) என்றார்கள். பின்னர் ஹப்பிள் தொலைநோக்கியில் பிடித்த தாக சில படங்களை வெளியிட்டு அவை கரும்துளைகளாக இருக்கலாம் என்று அனுமானித்தார்கள். இப்பொழுது ஸ்டீபன் ஹாகிங் (Stephen Hawking ) கரும்துளைக்குள் செல்லும் பொருள் மீண்டு வருமென்கிறாராம். என்ன ! கரும்பாக உள்ளே போனால் , கரும்பு சாறாக திரும்பி வருமாம்.அறிவியலில் சொல்வது எதையும் முழுமையாக நம்ப முடியாது. அண்டத்தை பற்றிய நம் அறிவு வளரும் போது , இன்று சொல்வது நாளைக்கு மாறி விடும் .
செய்வினை ( Black Magic)
மலையாள மாந்திரீகர்கள் இதற்கு புகழ் பெற்றவர்கள். என் மனைவி , அவளது வீட்டில் தங்கியிருந்த நெருங்கிய உறவினர் குடும்பத்திற்கு யாரோ செய்வினை செய்து விட்டதாகவும் , அதனால் அடுப்பறையில் தனித்தனி டப்பாவில் வைத்திருக்கும் பொருள்களெல்லாம் , பிரிக்க முடியாதபடி ஒன்றாக கலந்து விடுமாம் (மிளாகாய் பொடியும் , டீத்தூளும். இப்படி நல்ல பொருத்தம் பார்த்து உபயோக படுத்த முடியாத படி கலக்குமாம் ).பின்னர் இன்னொரு சாமியார் வந்து , அதை பிடித்து அடைத்த பின் தான் சரியானதாம். இதை நேரில் பார்த்ததாக சொல்கிறாள். மனைவி சொல்லே மந்திரம் என்று நம்பித் தானே ஆக வேண்டும்.இதே போல , உடன் வேலை பார்க்கும் நண்பரும் , அவரது தந்தை ஆசிரியராக வேலை பார்த்த போது , அவரால் கண்டிக்கப் பட்ட மாணவனது குடும்பத்தால் செய்வினை செய்யப்பட்டு அவதியுற்றதாக கூறினார். இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பதில் சற்று குழப்பமே!
எதிர்காலம்
தொலைக்காட்சியில் ஒரு பேட்டியில் பேராசிரியர் ஒருவர் கண்ணிற்கு தெரியாத கதிர் வீச்சுக்களை பற்றி நாம் சென்ற நூற்றாண்டில் தான் தெரிந்து கொண்டோம்.இன்றைய அறிவியலின் அடிப்படையே நம் அறிவால் ஜீரணிக்க முடிந்த தத்துவங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இப்பொழுது அது தவறு என்று மெதுவாக புலப்பட துவங்கி விட்டது.நாம் முப்பரிமாணங்களுடன், காலத்தையும் (Back to the future I/II/III படத்தை இரசித்திருக்கிறீர்களா?) ஒரு பரிமாணமாக கருத துவங்கிவிட்டோம். இது போல் இன்றைய நம் அறிவிற்கு புலப்படாத எத்தனையோ பரிமாணங்கள் இன்னும் இருக்கலாம். அவற்றிலெல்லாம் என்னென்ன ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என்று தெரியவில்லை என்றார். தெரிந்தால் கூடு விட்டு கூடு பாய்வது எப்படி என்று தெரிந்து விடும்.
Posted by Editor at 12:28 AM | Comments (0) | TrackBack
July 29, 2004
ஏட்டுச் சுரைக்காய்
இந்தியாவில் கல்வி முறை மாற்றப் பட வேண்டும் என்பது பலரைப் போல என் கருத்து. ஆங்கிலேயர்களுக்கு குமாஸ்தாக்களை உருவாக்க கொண்டுவரப் பட்டது இந்த கல்வி முறை.
குழந்தைகளுக்கு வேப்பங்காயாக கசக்கும் அளவுக்கு, பிழிந்து வாங்கும் இந்த கல்வி முறை , அந்த அளவுக்கு அவர்களை எதிர்கால நிஜ வாழ்க்கைக்கு தயார்படுத்துவதில்லை.அவரவர் அறிவுத் திறனுக்கேற்ப பாடம் கற்பிக்காமல், வயதை மட்டுமே அடிப்படையாக் கொண்டு , பாடம் கற்பிக்கப் படுகிறது.சற்று சுமாராக படிக்கும் குழந்தைகளை , மழைக்கு கூட பள்ளியில்
ஒதுங்க பயப்படும் அளவிற்கு பயமுறுத்திவிடுகிறது இன்றைய பாடத் திட்டம்.பலரின் வாழ்க்கை பொதுத் தேர்வு நடக்கும் சில மணி நேரங்களில் தீர்மானிக்கப் படுகிறது.
பள்ளி கூடத்தின் வாசலில் உள்ள மரம் , செடி, கொடி வகைகள் கூட தெரியாது , உலகத்தின் எந்த மூலையில் எந்த மரம் வளரும் என்று புவியியல் பாடம் எழுத்தில் மட்டும் சொல்லி தரப்பட்டது."அச்சமில்லை அச்சமில்லை" என்ற பாடல் வரிகள் படிக்க மட்டுமே சொல்லி தரப் பட்டதே தவிர , அச்சமில்லாமல் எப்படி வாழ வேண்டும் , குறைந்த பட்சம் அந்த பாடலை அச்சமில்லாமல் எப்படி மேடையேறி பாடுவது என்பது கூட சொல்லித் தரப்படவில்லை.வடிவங்களின் பயன் அறியாது , அவற்றின் செயல் தெரியாது , வகைகள் மட்டுமே சொல்லி தரப் படுகிறது வடிவியலில்.வேதியியலில் குடிவையில் வண்ணம் வண்ணமாக திரவங்களை கலந்து, நிறம் மாறும் அளவுகளை குறிக்க சொல்லி தரப்பட்டதே தவிர, அன்றாட வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கின்றன என்பது தவிர்க்கப் பட்டுவிட்டது.இலைகளையும் , விலங்குகளையும் வரைய சொல்லித்தரும் வரைபட வகுப்பாகவே உயிரியல் இருக்கின்றது."ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பது எப்பொழுதும் பொய்யா மொழியாக இருக்க வேண்டும் என்று,கண்மூடித்தனமாக இன்னமும் விடாமல் கடைப் பிடித்து வருகிறோம் இந்த கல்விமுறையை.இப்பொழுது காணும் பொருளாதார வளர்ச்சி , இதை மாற்ற எந்த வகையிலும் உதவவில்லை.
நான் இது பற்றி முன்பு எனது வலைதளத்தில் பதிந்திருந்தேன். சுவடு சங்கர் "தட்டு"ங்கள் திறக்கப்படும் என்று சாடுகிறார்.
"மூக்கு" சுந்தர் June 03 பதிவு மற்றும் வெங்கட் May 25 , June 02 தேதியிட்ட பதிவுகள் கல்வி முறையைப் பற்றியது தான்.கே.சத்யநாராயணனின் http://prayatna.typepad.com/educationஇதற்காகவே படைக்கப் பட்டிருக்கிறது.
இதைப் பற்றி எழுதுவதனால் என்ன பயன் என்று சிலர் நினைக்கலாம். முதலில் நோய் இருக்கிறது என்று தெரிந்தால் தான் , அதை குணப்படுத்த என்ன மருந்து என்று கண்டுபிடிக்க தோன்றும்.நோயே இல்லை என்று நினைத்திருந்தால் , கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் தான்.
கல்வி முறையை மாற்றினால் எல்லாம் சரியாகி விடுமா என்று கூட சிலர் நினைக்கலாம்.ஒரு காலத்தில் , இந்தியாவில் நல்ல வேகப் பந்து வீச்ச்சாளர்களே இல்லையே என்று வருந்தாதவர்கள் உண்டா?. அதுவும் இடது கை வேக பந்து வீச்சாளர்கள் இந்தியாவிற்கு கிடைக்க மாட்டார்களா
என்று ஏங்காத மனமும் உண்டா?.மதன்லால் , பின்னி போன்று வேகமாக ஓடி வந்து , மித மெதுவாக பந்து வீசுபவர்களே வந்து கொண்டிருந்தார்கள் ( அவர்களின் திறமைய நான் குறைத்து மதிப்பிட வில்லை. பந்தின் வேகத்தை மட்டுமே குறிப்பிடுகிறேன்.) இந்தியர்களால் இவ்வளவு வேகம்தான் முடியும், சுழற் பந்து தான் நம் சொத்து என்று இருந்தோம். ஆனால் இன்று, உலக தரத்தில் வேக பந்து வீச்சாளர்கள் வந்து இந்திய அணியில் குவிகின்றார்களே அது எப்படி? மாயமா, மந்திரமா ? . இல்லை , அதுவாக தானாக மாறியதா? MRF Pace Foundation வந்த பின் தானே இதெல்லாம் சாத்தியமாயிற்று.வேகபந்து வீச்சாளர்கள் இல்லை என்ற குறையை உணர்ந்து , எப்படி அதை சரி செய்து பயிற்று விப்பது என்று அடிப்படையில் இருந்து ஆரம்பித்ததால் தான் இந்த அளவிற்கு வெற்றி பெற்றனர்.
அது போல , இந்தியா வளர்ந்த நாடாக , அறிவியல் வல்லரசாக , வறுமையில்லாத நாடாக உருவெடுக்க , அடிப்படைக் கல்வி முறை மாறத்தான் வேண்டும்.
Posted by Editor at 01:17 AM | Comments (6) | TrackBack
வாடகை வாகன எண்
நீங்கள் ஏறிச் சென்ற வாடகை வாகனத்தின் (TaxiCab) பதிவு எண்னை எப்பொழுதாவது ஞாபகம் வைத்திருந்ததுண்டா?. எங்கே ! வண்டியில் ஏறும் முன் பேரம் பேசுவதிலும் , ஏறியவுடன் ,மீட்டருக்கு மேல் கொடுக்க வேண்டியிருப்பதை நினைத்துக் கொண்டு, சூடு வைத்த மீட்டரா , சூடு வைக்காத மீட்டரா என்று பக் பக் என்று ஒலி வேகத்தில் ஓடும் மீட்டரை நோட்டம் விடுவதிலுமே கவனம் போய்விடுகிறது. இதிலெங்கே வண்டி எண்ணாவது , ஞாபகமாவது என்கிறீர்களா?!
சிலர் பார்க்கும் பொருளிலெல்லாம் அவர்கள் தொழிலுடன் அல்லது விருப்பமான துறையுடன் இணைத்து பார்ப்பார்கள். நம்ம ஊர் ஆள் ஒருவரினால், கணிதத்தில் சில எண்களுக்கு வாடகைவண்டி (TaxiCab) எண் என்று பெயர் வந்ததாக ,ஒரு குட்டிக் கதை படித்தேன்.
கணித மேதை இராமானுஜம் லண்டனில் மருத்துவமனையில் இருந்த போது , அவரைப் பார்க்க வந்த ஹார்டி , தான் வந்த வாடகை வாகனத்தின் எண் 1729 என்றும் , அது ஒரு மந்தமான எண் என்றும் சொன்னாரம்.அந்த எண்ணின் மகத்துவம் அவருக்கு தெரியும். நோய்வாய்பட்டிருந்த இராமானுஜத்தை உற்சாகப்படுத்த வேண்டுமென்ற அவர் அப்படி சொன்னார் என்றும் செல்கிறது கதை.உடனே இராமானுஜம் இல்லை 1729 அது ஒரு அற்புதமான எண். இரண்டு எண்களின் மூன்றாம் வர்க்கத்தின் ( cube-க்கு சரியான தமிழ் பதம் இதுதானா?) கூட்டுத் தொகையின் சிறிய எண் இது என்றாரம்.( தமிழ்ப்படுத்தியதில் உங்களை படுத்தியிருந்தால் கீழே உள்ள ஆங்கில வாக்கியத்தை படித்துக் கொள்ளுங்கள்.) அதனால் , இந்த வரிசை எண்களுக்கு வாடகைவாகன (TaxiCab ) எண் என்று பெயர் வந்ததாம்.
நீஙகள் அடுத்த ஏறுகின்ற வாடகை வாகனத்தின் எண் 87539319 ஆக இருந்தால் , உங்களுக்கும் ஒளிந்திருக்கும் இராமானுஜர் அடுத்தமுறை விழித்துக் கொள்வார் என்று நம்புகிறேன்.
Taxicab(1) = 2
= 1*1*1 + 1*1*1
Taxicab(2) = 1729
= 1*1*1 + 12*12*12
= 9*9*9 + 10*10*10
Taxicab(3) = 87539319
= 167*167*167 + 436*436*436
= 228*228*228 + 423*423*423
= 255*255*255 + 414*414*414
In memory of this incident, the least number which is the sum of two positive cubes in n different ways is called the nth taxicab number.
வெறும் சிலேட்டில் எழுதி தன் கணிதக் காதலை வளர்த்த , சாதி/மத கட்டுப்பாட்டை தவிர்த்து கப்பலேறி எப்பொழுதும் எண்களுடனேயே வாழ்ந்த் இராமானுஜரின் தீரங்களுக்கு விடை காண இன்னும் முயற்சி நடந்து வருகிறது.
Posted by Editor at 12:24 AM | Comments (4) | TrackBack
July 28, 2004
வலை வலம் - 3
எனக்கு தன்னடக்க வியாதி அதிகமாக இருப்பதாக வந்தியதேவரும்,மூக்கரும் குறிப்பிட்டிருந்தனர். இந்த வியாதியின் அறிகுறி என்ன என்று பார்த்ததில் , என் வலைத்தளத்திற்கு நான் சூட்டிய பெயர் (பாமரனின் பிதற்றல்கள் ) முதலில் தெரிந்தது.என்னைப் போல இந்த நோய் பீடிக்கப் பட்டவர்கள் வேறு யாரேனும் தமிழ் வலைத்தளத்தில் உள்ளனரா என்று , வலைத்தளங்களுக்கு இடப்பட்ட பெயரிலிருந்து அறிய எடுத்த முயற்சியில் கிடைத்த வலைத்தளங்களைப் பற்றி.
அன்பு செழியன் - குப்பை : இணையமெங்கும் சென்று மாணிக்கங்களை திரட்டி வந்து இந்த குப்பையில் சேர்க்கிறார். குப்பை வலைத்தளங்களுக்கு நல்ல உரமாக மாறி வருகிறது.
ஹரி - புலம்பல்ஸ்: நாட்டு நடப்பை பற்றிய தனது புலம்பல்களை இங்கு பதிவாக சொல்கிறார். தேர்தல் தோல்வியில் அம்மாவின் புலம்பல்களை இங்கு பார்க்கலாம்.அம்மாவிர்ற்கு கற்பனை கதைகளில் ரொம்ப ஆர்வம் போல. சென்னா ரெட்டி தொட்டு , சதி திட்ட கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கிறார்.
மூனா - கிறுக்கல்: இலங்கை பற்றி பல நல்ல கேலிச் சித்திரங்கள். "யுத்தம் கவனம் கச்சாமி" ,"வெளியேறுவது எப்படி" தலைப்பும் , படமும் நன்றாக உள்ளது.
பரி - வலைக்கிறுக்கல்: மரத்தடி போட்டி வெற்றியாளர்களுக்கு மருத்துவ செலவு பற்றி முக்கிய அறிவிப்பு கொடுத்துள்ளார். போட்டியில் கலந்து கொள்பவர்கள் கவனிக்க.
பெயரிலி - பெயரிலியின் பினாத்தல்
: அரற்றுமணி (தளையுறாததும் தலைப்புறாததும் IX) ஒரு முறைக்கு நான்கு முறையாக படித்து , ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் புரிந்து... வாவ் நன்றாகத் தான் இருக்கிறது இந்த வகை கவிதைகளைப் படிப்பது. அடுத்த கவிதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ரங்கா - புண்ணாக்கு : ப்ரெஸ்டிஜ் பத்மனாபன் , பட்ஜெட் பத்மனாபன் ,பீட்டர் பத்மனாபன் போன்ற பத்மனாபன் வகையறாக்களுக்காக ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது இந்த தளம். மௌனம் பேசலாம் , எண்ணங்கள் பேசக் கூடாதா என்கிறார். பேசலாம். தொடர்ந்து பேச வேண்டும்.
சாமான்யன் - சாமான்யன் : சாமான்யமாய் புதுப்புது அறிவியல் சொற்களை தமிழாக்கம் செய்கிறார்.
சந்தோஷ்குரு - வெட்டிப் பேச்சு : சந்தோஷ்குரு பற்றி சென்ற வலத்திலேயே குறிப்பிட்டு விட்டேன்.ரூட் போட வாரீகளா என்று செலவு மிச்சமாக ரூட் போட சொல்லித் தருகிறார்.
சங்கரய்யா - கிறுக்கனின் கிறுக்கல்கள்: காணாமல் போய்விட்டவர்கள் பட்டியலில் இருந்து மீண்டு வந்து தமிழில் klipfolio தந்துள்ளார்.
-அநாமிகா மெய்யப்பன்
Posted by Editor at 12:28 AM | Comments (4) | TrackBack
பாரதி தாசனின் "ஒரே குறை"
காதலே பொய்யடாவில் நான் சொல்லியிருந்த "காக்க வைத்தல்" படலத்திற்கு இதை விட சிறந்த கவிதை இருக்க முடியுமா?
அழகிருக்கும் அவளிடத்தில் அன்பி ருக்கும்
அறிவிருக்கும்! செயலிலுயர் நெறியி ருக்கும்
விழியிருக்கும் சேலைப்போல்! கவிதை யின்பம்
வீற்றிருக்கும் அவளரிய தோற்றந் தன்னில்
மொழியிருக்கும் செந்தமிழில் தேனைப் போலே
முகமிருக்கும் நிலவுபோல்! என்னைக் காணும்
வழியிருக்கும்; வரமாட்டாள்; வந்தெ னக்கு
வாழ்வளிக்கும் எண்ணந்தான் அவள்பா லில்லை!
திருவிருக்கும் அவளிடத்தில்! திறமி ருக்கும்!
செங்காந்தள் விரல்நுனியின் நகத்தி லெல்லாம்
மெருகிருக்கும்! இதழோரப் புன்சி ரிப்பில்
விளக்கிருக்கும்! நீள்சடையில் மலரி ருக்கும்!
புருவத்தில் ஒளியிருக்கும்; வளைவி ருக்கும்!
போய்ப்போய்நான் காத்திருக்கும் இடமும் மிக்க
அருகிருக்கும்! வரமாட்டாள்; உடையும் நெஞ்சுக்
கணைகோலும் எண்ணந்தான் அவளுக் கில்லை.
பண்பிருக்கும் அவளிடத்தில்! ஆடு கின்ற
பச்சைமயில் போல்நடையில் அசைவி ருக்கும்!
மண்ணிருக்கும் கல்தச்சுச் சுதைநூல், நல்ல
வார்ப்படநூல் ஓவியநூல் வல்லார் எல்லாம்
பெண்ணிருக்கும் அமைப்பறியும் ஒழுங்கி ருக்கும்!
பிறர்துயின்றபின், என்போல் இரவில் மூடாக்
கண்ணிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதற்
கனல்மாற்றும் எண்ணந்தான் அவளுக் கில்லை.
கனிவிருக்கும் அவளிடத்தில்! சங்கைப் போலும்
கழுத்திருக்கும்! உயர்பசுமை மூங்கிலைப் போல்
தனித்துயர்ந்த தோளிருக்கும்! கன்னம், ஈரச்
சந்தனத்துப் பலகைபோல் குளிர்ந் திருக்கும்!
இனித்திருக்கும் பொன்னாடை! அவள் சிலம்பில்
எழும்ஒலியில் செவியனுப்பி நிற்பேன். அந்த
நினைவிருக்கும்; வரமாட்டாள்; சாவி னின்று
நீக்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை.
வளமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் தூய்மை!
மயிலிறகின் அடியைப்போல் பல்லி லெல்லாம்
ஒளியிருக்கும்! உவப்பிருக்கும் காணுந் தோறும்!
உயர்மூக்கோ எள்ளுப்பூப் போலி ருக்கும்!
தெளிவிருக்கும் பேச்சிலெல்லாம் சிரிப்பி ருக்கும்!
செழும்ஊரார் அறியாமல் வரவும் கொல்லை
வெளியிருக்கும்! வரமாட்டாள்; என் விழிக்கு
விருந்தளிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை.
பொறையிருக்கும் அவளிடத்தில்! கொல்லை தன்னில்
பூம்பாகற் கொடிதனது சுருட்கை யூன்றி
உறைகூறை மேற்படர்ந்து சென்றிட் டாலும்
ஒருதொடர்பும் கூறையிடம் கொள்ளாமை போல்
பிறரிருக்கும் உலகத்தில் என்னையே தன்
பெறற்கரிய பேறென்று நெஞ்சிற் கொள்ளும்
முறையிருக்கும்! வாமாட்டாள்; வந்தே இன்ப
முகங்காட்டும் எண்ணந்தான் அவளுக் கில்லை.
அறமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் வாய்மை!
அண்டையிலே பெற்றோர்கள் இருக்கும் போதும்
புறமிருக்கும் என்மீதில் உயிர் இருக்கும்!
'பூத்திருக்கும் நான்காத்த முல்லை' யென்றும்
'நிறம்காண வேண்டும்'என்றும் சாக்குச் சொல்லி
நிழல்போல என்னிடத்தில் வரவும் நல்ல
திறமிருக்கும்! வரமாட்டாள்; வந்தென் நோயைத்
தீர்க்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை.
உயர்விருக்கும் அவளிடத்தில்! இருக்கும் நேர்மை!
உடலாவி பொருளிவற்றில் நானும்,தானும்
அயலில்லை என்னுமோர் உளம் இருக்கும்!
அசைகின்ற இதழிலெல்லாம் அத்தான் என்ற
பெயரிருக்கும்! எவற்றிலுமே எனை யழைக்கும்
பித்திருக்கும்! மாடியினின் றிறங்க எணிக்
கயிறிருக்கும்! வரமாட்டாள்; என்செய்வேன்! நான்
கடைத்தேறும் எண்ணந்தான் அவளுக் கில்லை.
சீரிருக்கும் அவளிடத்தில்! உலகம் போற்றும்
செந்தமிழ்மங் கைக்கிருக்கும் சிறப் பிருக்கும்!
தார்இருக்கும் நெடுந்தோளான் பாண்டி நாட்டான்
தானேநான் எனும்கொள்கை தனக் கிருக்கும்.
ஊரிருக்கும் தூக்கத்தில் கொல்லைப் பக்கத்
துயர்கதவின் தாழ்திறந்து வரவோ பாதை
நேரிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதல்
நெருப்பவிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை.
அருளிருக்கும் அவளிடத்தில்! இசையி ருக்கும்!
ஆடவனும், ஓர்மகளும் ஒப்ப நோக்கி
இருள்கிழித்து வெளிப்படுமோர் நிலவு போல
இரண்டுளத்தும் திரண்டெழுந்த காத லுக்குத்
திரைஎன்ன மறைவென்ன? அவள்என் தோள்மேல்
தேன்சிட்டைப் போற்பறந்து வருவ தற்கும்
கருத்திருக்கும் வரமாட்டாள்;வந்தெ னக்குக்
காட்சிதரும் எண்ணந்தான் அவள் பாலில்லை.
Posted by Editor at 12:14 AM | Comments (7) | TrackBack
காதலே பொய்யடா!!!
தலைப்பை பார்த்தவுடன் உடனே எனக்கு காதல் தோல்வி அல்லது நான் காதலுக்கு விரோதி என்று நினைத்து விடாதீர்கள். காதலுக்கும் , எனக்கும் காத தூரம். திருமணத்திற்கு பின் மனைவியை காதலிக்கிறேன் என்று கதை விடும் கூட்டத்தை சேர்ந்தவன் நான்.
(மனைவியை காதலிப்பதாக கூறுவது ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை போல).
காவிய காதல் , தெய்வீக காதல் , காதல் போயின் சாதல் போன்றவை எல்லாம் காவியங்களுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்குமே தவிர , இந்த காலத்து காதலில் இது போன்ற தகுதிகளுக்கு இடமில்லை என்றே தோன்றுகிறது.காதல் பெரும்பாலும் கண்டதும் காதலாக இருப்பதால் , தோற்றத்தின் அடைப்படையிலேயே ஆரம்பிக்கிறது. உலக அழகியாக இல்லா விட்டாலும் , ஓரளவாவது பார்வைக்குரியவளாக இருக்க வேண்டும் என பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர்.பெண்களோ தங்களின் காதலன் கதாநாயகன் போல ( இப்பொழுதெல்லாம் வில்லனைப் போல) இருக்க விரும்புகின்றனர் அல்லது குறைந்தபட்சம் தன் சொல் கேட்டு நடப்பவனாக , நிலையான சந்தோஷமான வாழ்க்கையை தர வல்லவனாக இருக்க வேண்டும் என்று பார்த்தே காதலனை தேடுகின்றனர்.இப்படி புற விஷயங்களை /தேவைகளை ஒட்டி ஆரம்பிக்கும் காதல் எப்படி காவிய காதலாக அமைய முடியும்?. அதிர்ஷடவசத்தால் இப்படி ஆரம்பிக்கும் காதலில் ஒரு சில சமயங்களில் அலைவரிசை ஒத்த காதலாக அமைந்து விடுவது உண்டு.மற்றபடி கருத்தொருமித்த காதல் கதைகளில் மட்டும் தான். அக அழகை , நல்ல குணத்தை , உயர்ந்த இலட்சியத்தை பார்த்து வந்த காதலை நான் இதுவரை நடைமுறையில் பார்த்ததில்லை.சுஜாதா சொன்னது போல காதல் ஹார்மோன்களின் வேலையாகவே பெரும்பாலும் உள்ளது.இதில் காவியமாவது , கத்தரிக்காயாவது?
சென்னையில் காதலிக்க குறைந்த பட்சம் ஒரு மோட்டார் சைக்கிளாவது வைத்திருக்க வேண்டுமென்று என்று சொல்லி , காதலிப்பதற்காக வாகனம் வாங்கியவர்கள் உண்டு.காதல் நோய் ( காதலை நோய் என்று சரியாக சொன்னார்கள் அந்த காலத்தில்) பிடித்தவர்கள் செய்யும் கூத்துக்கள் சொல்லி மாளாது. அதுவும் சுற்றியுள்ள நண்பர்கள் எல்லாம் காதலிக்க அதை பார்த்து மகிழ்வது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.காக்க வைப்பதிலும் , சுற்ற வைப்பதிலும், போட்டு பார்ப்பதிலுமே பாதி காலம் போய்விடும் இவர்களுக்கு.பக்தர்களை துன்பத்தில் ஆழ்த்தி , அவர்களின் உண்மையான பக்தியை சோதனை செய்து பின் ரட்ஷிக்க சிவபெருமான் போன்று இவர்கள் செய்யும் திருவிளையாடல்கள் எண்ணற்றவை.
காதலை நான் எதிர்க்கா விட்டாலும் , காதலிக்கும் போது தேவையில்லாமல் படு(த்து)ம் பாடு, காதல் தோல்வியடைந்தால் காட்டும் அளவு கடந்த வருத்தம் ஆகியவற்றை நம்ப முடியாமல் எதிர்க்கிறேன். பாய்ஸ் படத்தில் வரும் காட்சிகள் சிலவற்றை நேரில் பார்த்திருக்கிறேன். சீச்சீ நீங்க நினைக்கிற காட்சியெல்லாம் இல்லை. அந்த காட்சிகள் படத்தில் வரும் போதெல்லாம் , காசை கீழே போட்டுக் கொண்டு நானே குனிந்து தேடிக் கொண்டிருந்தேன். நான் சொல்வதெல்லாம் , காதலி எழுதிய கையை கழுவாமல் பல நாட்கள் பாதுகாத்தல் போன்ற காதல் மகத்துவ காட்சிகளை...
சாதி , மதம் , வரதட்சிணை போன்றவற்றை அழிக்க வல்லது என்ற முறையில் ( இப்பொழுதெல்லாம் வசதியாக சாதி/பிரிவு/வசதி பார்த்த பின் தான் காதலிக்கவே ஆரம்பிக்கிறார்கள்), காதலை ஆதரிக்கலாம்.இளவயதில் திருமணத்திற்கு முன்பு மற்றொரு பாலரின் அருகாமையும் , அன்பும் ,அக்கறையும் ரொம்பவும் ரம்மியமாகத் தான் இருக்கும்."மடி மீது தலை வைத்து" என்று மெரீனா பீச்சிலோ, லால் பாக்/கப்பன் பாக்கிலோ காலம் போவது தெரியாமல் சீண்டிக் கொண்டும் , சிணுங்கிக் கொண்டும் அமர்ந்திருப்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கலாம்.ஆனால் அதற்காக , தெய்வீகக் காதல் , காதலிப்பவர் கிடைக்காவிட்டால் வாழ்க்கை அஸ்தமித்து விட்டது போன்ற மூடத்தனமாக காதலை கருதி வாழ்க்கையை தொலைத்து விட்ட தேவதாஸ்கள் , அவர்களின் காதலின் தகுதியை எண்ணிப் பார்க்க வேண்டும்.இன்றைய காதல் திருமணத்திற்கு உரியவரை தேர்ந்தெடுக்கும் ஒரு வழிமுறையாகவே உள்ளது. மெல்ல இனி உண்மையான காதல் சாகும் என நினைக்கிறேன். டேடிங்கிற்கும் , வரும் தலைமுறையின் காதலுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்கப் போவதில்லை.
காதலை , இயல்பாக நட்பு போல , பாசம் போல மற்றுமொரு அன்பின் சாதாரண வகையாக எடுத்துக் கொள்ள தெரியாதவர்கள் , காதல் தவம் கிடந்து உள்ளத்தையும் உடலையும் வருத்தி கோணங்கித் தனங்கள் காட்டாமல் , மனைவியை/கணவனை காதலிக்கும் வகையில் சேர்ந்து விடுவது சாலச் சிறந்தது.
Posted by Editor at 12:04 AM | Comments (11) | TrackBack
July 27, 2004
செவ்வாய்கிழமை கொழுக்கட்டை
செவ்வாய்கிழமை என்றதும் எனக்கு ஞாபகம் வருவது கொழுக்கட்டை தான்.
ஆடி மாதங்களில் (என்று நினைக்கிறேன்) , எங்களூரில் பெண்டு பிள்ளைகளெல்லாம் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு வீட்டில் ஆண்களையும், ஆண் குழந்தைகளையும் சேர்த்து கொள்ளாமல் ஒதுக்கி வைத்து விட்டு கொழுக்கட்டை செய்து ரகசியமாக சாமி கும்பிடுவார்கள்.
பூஜைக்கு பின்னர் , மறு நாள் அந்த கொழுக்கட்டையை சாப்பிடும் போது கூட ஆண்கள் கண்ணில் அந்த கொழுக்கட்டை பட்டு விடக் கூடாதாம். பள்ளி செல்லும் பருவத்தில் , இது ஆண் (குழந்தை) சமூகத்திற்கு இழைக்கப் பட்ட அநீதி என்று , சம உரிமை கேட்டு அம்மாவிடம் போராடியிருக்கிறேன். மாடிப்படி, கொல்லைப் புறம் என்று ஒளிந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அக்கா மற்றும் அவரது தோழிகளை நிம்மதியாக சாப்பிட விடாமல் துப்பறியும் சாம்பு போல விரட்டி எதற்காக அந்த பூஜை , ஏன் ஆண்களை தவிர்க்க வேண்டும் என்று கெஞ்சி,கொஞ்சி,ஆசை காட்டி, மிரட்டி என்று எல்லா வகைகளிலும் கேட்டு பார்த்திருக்கிறேன்.பார்த்தால் கண் கெட்டுவிடும் என்று பயமுறுத்த பதில்கள் தான் கிடைத்திருக்கின்றனவே தவிர உண்மையான காரணம் ஒருபோதும் அவர்கள் சொன்னதில்லை.
ஏதோ அவ்வையார் சம்பந்தப் பட்டது என்று அரசல் புரசலாக காதில் விழுந்தது தான் மிச்சம். என் தொல்லை தாங்காமல் , அம்மா எனக்கு புதன்கிழமை காலை தனியாக கொழுக்கட்டை செய்து தருவார்கள். பாவம் அவர்களுக்கு இரட்டை வேலை.நான் அதில் கார், கட்டிடம்,பாலம்,குடை என்று என் கைவண்ணத்தை காண்பித்து கொழுக்கட்டை பிடித்து கொடுப்பேன். அதை பழிக்குப் பழியாக மற்ற யார் கண்ணிலும் படாமல் ஒளித்து வைத்து நான் சாப்பிடுவதை , அம்மா கதை கதையாக மற்றவர்களிடம் சொல்வதுண்டு.
இந்த பழக்கம் , எங்கள் வட்டாரத்தில் மட்டும் தானா அல்லது பொதுவானதா என்று தெரியவில்லை.ஆனால் ரகசியமாய் இருப்பதனால் ஆண்களுக்கு கொஞ்சம் ஆர்வத்தை ஊண்டும் "செவ்வாய்கிழமை கொழுக்கட்டை" மேல் எனக்கு எப்பவும் கொஞ்சம் ஏக்கம் தான்.
-அநாமிகா மெய்யப்பன்
Posted by Editor at 01:09 AM | Comments (16) | TrackBack
வலை வலம் - 2
tamilblogs பட்டியலில் இருந்து , எந்த அடிப்படையிலும் இல்லாமல் தேர்ந்தெடுத்து படித்த சில வலைத் தளங்களைப் பற்றி...
அண்ணாகண்ணன் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் இந்தியா எத்தனை பதக்கம் வாங்கும் என்று கருத்து கணிப்பு நடத்துகிறார். உயிருள்ள வரை உஷாவை மறக்க முடியாமல் செய்த ஒலிம்பிக்ஸை நினைவில் நிறுத்தி,அஞ்சு ஜார்ஜ்ஜை நம்பி , நான் ஒரு ஓட்டு போட்டுள்ளேன். உங்களின் கருத்தை அங்கு தெரிவியுங்களேன்.
வீர தீர சிறுவர்களைப் பற்றிய வரிசையில் கீதா சோப்ரா விருது வாங்கிய ராம்சீனா பற்றி எழுதியுள்ளார். படித்தவுடன் சம்பந்தமில்லாமல் கும்பகோண கொடூரம் ஞாபகத்திற்கு வந்தது.
வெட்டிப் பேச்சு பேசுவதாக நக்கல் பேசும் சந்தோஷ்குரு ஆயத எழுத்து/யுவாவை கிண்டி , அருமையான புகைப் படங்களுடன் வலைப் பதிந்திருக்கிறார்.சத்யம் திரையரங்கில் மாதம் 500 செலவு செய்வதை , நல்ல திரை விமர்ச்சனங்களாக வலைப்பதிந்து அசத்துகிறார்.மிர்ச்சி சுசித்ரா மூலம் , லல்லுவுக்கு இவர் சொல்ல முயன்ற யோசனைக்கு ஒரு மிர்ச்சி மண்குவளை லல்லு கைப்பட கொடுக்கலாம். இதைக் கேட்டதும், பரிசு வழங்க லல்லு எருது எக்ஸ்பிரஸில் கிளம்பிவிட்டதாக தகவல் வந்துள்ளது.
தும்பை பாலசுப்ரமணி நீரின்று அமையாது உலகு என்பதை உணர்த்தி ,தண்ணீரைப் பற்றி (நீங்க நினைக்கிற தண்ணீ இல்லீங்கோவ்...) விளக்கியுள்ளார்.இன்னும் நிறைய தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்.
பிருந்தாவனத்தில் சின்ன கண்ணனை கொஞ்ச நாட்களாய் காணோம். திங்கள் கவிதை , தேவிகாவின் குறும்பு என்று நன்றாக வந்து கொண்டிருந்தது. முகம் முழுக்க குறும்பு,ஆப்பிளை நன்றாக அரைத்து அதனுடன் இட்லி மாவையும் கலந்து இட்லித் தட்டில் எடுத்துவைத்த பொசு பொசு இட்லி மாதிரி கன்னங்கள் என்று மதுரை மல்லி இட்லியாக விவரித்திருக்கிறார் தேவிகாவை பற்றி.மருதய் பாசத்தில நண்பர் ராசுவோட பின்னூட்டத்தையும் இந்த தளத்தில் பார்த்தேன்.
சந்தர வதனாவின் மாவீரர்கள் தமிழீழ மாவீரர்களைப் பற்றி குறிப்பு வழங்குகிறது. இத்தனை ஆயிரம் உயிர்களை குடித்த பின்னும் , நீண்டு கொண்டே செல்லும் இந்த போர் முடிவிற்கு வரும் நாள் , எந்நாளோ?. குட்டி மணி,கிட்டு, திலீபன் போன்று தமிழ்நாட்டிற்கு பரீட்சயமானவர்களை தவிர ,மற்ற மாவீரர்களை பற்றியும் தெரிந்து கொள்ள உதவுகிறது இந்த தளம்.
எழிலின் எழிலுலாவில் இதயம் பேசுகிறது மணியன் போல இனிய பயணக் கட்டுரைகள் தருகின்றார். பசு விழா சுவையான தகவல். வல்லவனுக்கு வண்ணமும் ஆயுதம் என்பதை விளக்குகிறது பசு விழா பற்றிய கதை.
-அநாமிகா மெய்யப்பன்
Posted by Editor at 01:00 AM | Comments (9) | TrackBack
பாரதியின் வசன கவிதை
பாரதியின் வசன கவிதைகள் அவ்வளவாக வெளியில் தெரியாத அவரின் மற்றொரு பரிமாணம்.
படித்ததில் எனக்கு பிடித்த சில வரிகள்.
உயிரே, நினது பெருமை யாருக்குத் தெரியும்?
நீ கண்கண்ட தெய்வம்.
எல்லா விதிகளும் நின்னால் அமைவன.
எல்லா விதிகளும் நின்னால் அழிவன.
உயிரே,
நீ காற்று. நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம்.
தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ.
மாறுவனவற்றை மாற்றுவிப்பது நீ.
-----
உணர்வே நீ வாழ்க.
நீ ஒன்று. நீ ஒளி.
நீ ஒன்று. நீ பல.
நீ நட்பு. நீ பகை.
உள்ளதும் , இல்லாததும் நீ.
அறிவதும், அறியாததும் நீ.
நன்றும்,தீதும் நீ.
நீ அமுதம் , நீ சுவை.
நீ நன்று, நீ இன்பம்.
-----
-அநாமிகா மெய்யப்பன்
Posted by Editor at 12:21 AM | Comments (2) | TrackBack
July 26, 2004
வலை வலம் - 1
லாடு லபக் தாஸ் பாலா- Young Sports பத்திரிக்கையின் நிறுவன ஆசிரியர். இவர் வலைப் பதிய ஆரம்பித்தது ரொம்ப நல்ல விஷயம்.
விகடன், டைம்ஸ், இந்தியா டுடே போன்ற பெரிய பத்திரிக்கைகளின் விலைக் குறைப்பு போரினால் , Young Sports என்ற அருமையான பத்திரிக்கை அழிந்து விட்டது வருந்த தக்கது. பெரிய பாளையத்து அம்மன் நன்கொடையுடன் போட்டி போட விரும்பாத இந்த நல்ல உள்ளத்திற்கு, தொடர்ந்து வலை பதிய அந்த அம்மன் அருள் புரியட்டும். பிர்லா கணக்கு போட்டிருக்கிறார், கொஞ்சமே கொஞ்சம் எனக்கு புரிந்தது போல் இருக்கிறது , இந்த புதிர் கணக்கு.
காணும் கண்ணாடி மூலம் பார்பதை பதியும் சஞ்சித் "என்ன எனக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாது என்கிறார்". தெரிந்தவர்கள் அவரை தொடர்பு கொள்க. மணல் கயிறு எஸ்.வி.சேகர் போல அவரது நண்பர் சில நிபந்தனைகள் வைத்துள்ளாரம். ஊரெல்லாம் விசுவைப் போல பல மடங்கு உண்மை விளம்பி தரகர்கள் இருப்பது அவருக்கு தெரியாது போலிருக்கிறது.
நவன் பகவதி என்னைப் போன்ற பச்சை பேய் பிடித்தவர்களுக்காக, அவரது தளத்தில் பச்சை பேய் ஆடை வசதி செய்து கொடுத்துள்ளார். விண்டோஸ் அப்டேட், வானிலை (இலண்டன் வாசிகளுக்கு) என்று பயனுள்ள தகவல்களை தந்திருக்கிறார். அடுத்து சிநேகா வால்பேப்பர் வைப்பது எப்படி என்று வருமென எதிர்பார்க்கிறேன். கொடிக்குள் ஒளிந்திருந்த கேடியை கண்டுபிடித்து தமிழ் மானம் காத்த வீரர் இவர்.
மது காண்பதுவே என்று "பூ பூக்கும் வாசம்" என்று மஞ்சள் பூக்கூட்டத்தின் படங்களைப் பதிந்துள்ளார். "வா வா மஞ்சள் மலரே" என்று பாடித் திரிந்த கல்லூரி காலம் சற்றே நினைவில் வந்து சென்றது. "போர்" படத்திற்கு தந்திருப்பது போல புகைப்படம் எங்கு , எப்பொழுது எடுக்கப் பட்டது போன்ற குறிப்புகளைக் எல்லா படங்களுக்கும் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
Posted by Editor at 02:41 AM | Comments (12) | TrackBack
வரவேற்பு கோலம்
வணக்கம் நண்பர்களே!!!
எதிர்பாரத இந்த வாய்ப்பு கொடுத்த மதி அவர்களுக்கு நன்றி. அடுத்த ஏழு நாட்கள் ஆதரவு தரப் போகும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
வலைப்பூவில் முதல் பதிவை கோலமிட்டு ஆரம்பிக்கிறேன்.
கோலம் தமிழ் காலச்சாரத்தின் முக்கிய வெளிப்பாடு.
அதிகாலையிலும், அந்தி சாயும் வேளையிலும் வாசல் பெருக்கி, சாணம் தெளித்து, புள்ளி வைத்து நெளி நெளியாய் சமச்சீராய் பளிச்சென்று போடப்படும் கோலம் வாசல் வழி செல்வோரை வரவேற்கும்.விழாக் காலங்களில் கோவிலில் கூட்டுறவாய் அனைவரும் சேர்ந்து போட்டிடும் கோலம் ஒற்றுமையின் வெளிப்பாடாய் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பெண்கள் திருமணம் முடிந்து செல்லும் போது மறக்காமல் எடுத்துச் சென்ற சீதனம் கோல நோட்டாக இருக்கும்.பழைய வரவு செலவு புத்தகமோ, சென்ற வருட நாட்குறிப்போ புது கோல நோட்டாக மாறிவிடும். பக்கத்து வீட்டு பெண்களெல்லாம் , இரவல் வாங்கி சென்று ,புதுப் புது வகை கோலங்களை கண்டு பிடிப்பதில் குறியாக இருப்பர்.
சில சமயங்களில் ஆரம்பித்த கோலத்தை முடிக்க முடியாமல் , மற்ற பெண்களை அழைத்து , ஆன் த ஸ்பாட் டிஸைன் மாற்றி முடிப்பது சுவாரசியமாக இருக்கும். இதெல்லாம் , கிராமங்களிலும் , கிராம வாடை மாறாத சிறு நகரங்களிலும் தான்.பட்டிணங்களில் ???
மார்கழி மாதத்தில் வண்ண கோலப்பொடி தயாரிப்பது குழந்தை பருவத்தில் என் பொறுப்பு.வண்ணம் காய்ச்சி , வெள்ளை பொடியை வண்ண மாக்கி , காய வைத்து கொடுப்பதால் , கோலத்தில் வண்ணமிட எனக்கு முன்னுரிமை வழங்கப் படும்.பக்கத்து வீட்டு பெண் குழந்தைகளுக்கு நான்கு புள்ளி கோலம் ,ஒன்பது புள்ளி கோலம் என்று வரைந்து என் கோல அறிவை காண்பித்ததுண்டு. பின்னாலில் சென்னை வந்த போது , குழந்தையாய் நான் போட்ட நான்கு புள்ளி கோலமே வேண்டா வெறுப்பாக பெரும்பாலான வீடுகளின் வாசலில் இருந்தது , மாறி வரும் காலத்தையும், நேரமின்மையையும் காண்பித்தது.கோவில்களில் கூட இப்பொழுதெலாம் , பெயிண்ட்டிலேயே அழியாத கோலம் போட்டுவிடுகிறார்கள்.
கோலங்கள் இப்பொழுது மெல்ல மறைந்து வந்தாலும் , மீண்டும் அதன் அருமை புரிந்து மெல்ல வளரும் என்றே நம்புகிறேன்.
http://www.i-kolam.com/p-kolam.html இந்த தளத்திற்கு சென்று , கீழே இருக்கும் பொத்தானை அழுத்தி கணினி கோலமிடும் அழகை பாருங்கள் ,பிரம்மிப்பூட்டும்.
புள்ளி வைத்து , அதைச் சுற்றி நெளி நெளியாய் சென்று , ஆரம்ப இடத்திலேயே முடியும் கோலங்கள் , கூட்டுக் குடும்பத்தின் தத்துவத்தை விளக்குவதாக எனக்கு பட்டது. தனி மனிதர்களை அரவணைத்து , அவர்களின் உணர்வுகளை புண்படுத்தி விடாமல் , பாசத்தால் பின்னிப் பிணைந்து , ஒன்றாய் காட்டும் இந்த கோலங்கள் , இப்பொழுது ஆராய்ட்சியாளர்களை கவர்ந்துள்ளது. கோலங்களின் பின்னால் ஒளிந்துள்ள கணிதத்தை கண்டுபிடிப்பது,"சோனா ஜியாமெட்ரி".
கணினியில் பெயிண்ட்டில் நான் முதலில் வரைந்தது நான்கு புள்ளி கோலம் தான். என் மனைவியும் , முதலில் வரைய முயற்சித்தது ஒரு கோலம் தான்.பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் , எஸ்.வி.சேகரின் வண்ண கோலங்கள் பிரபல்யமானவை. சன் டி.வியில் கோலங்கள் என்று ஒரு சீரியல் வந்தது ( இன்னும் வருகிறது என்று நினைக்கிறேன். சன் டி.வி எங்கள் வீட்டில் நிறுத்தி 5 மாதங்கள் ஆகி விட்டது :). இவையெல்லாம் கோலங்களின் மனோதத்துவத்தையும் , மகத்துவத்தையும் பறை சாற்றுகின்றன.
கொஞ்சம் கோலம் போட்டு பழகுங்கள். நான் வலைவலம் சென்று புதிதாய் பூத்த மலர்களை பார்த்து வருகிறேன்.
- அநாமிகா மெய்யப்பன்
Posted by Editor at 02:02 AM | Comments (10) | TrackBack
July 25, 2004
மழை நகரிலிருந்து அநாமிகா
இவ்வாரம் ஆசிரியராக வர இருப்பவருக்கு அழகான புனைபெயர். எனக்கு மிகவும் பிடித்த பெயர் கூட. 'அநாமிகா'.
இவருக்கு இங்கே நிறையத் தோழர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரே பட்டறையில் தீட்டப்பட்டு வெளி வந்தவர்கள். அந்தப் பட்டறைமேல் இவர்கள் எல்லோருக்கும் இருக்கும் பற்றுக் கொஞ்ச நஞ்சமல்ல.
உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன் என்ற போது இவர் சொன்னது:
பாரதி,பாரதிதாசன்,மேத்தா, வைரமுத்து,பாலகுமாரன் இவர்களெல்லாம் என் படிக்கும் ஆர்வத்தை தூண்டியவர்கள். கல்லூரி பத்திரிக்கையில் எழுதி கலக்கிய "காரைக்குடி கவிஞன்" ராஜ்குமார்,"மூக்கு" சுந்தர், "வந்திய தேவன்" ஞானம், "படக் களஞ்சியம்" பாலா போன்றவர்களால் எழுத தூண்டப்பட்டேன். (பூவோடு சேர்ந்த நார் போல).
கற்பனையில் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்று, ஒலிம்பிக்ஸில் தங்க பதக்கம் வாங்கி, அறிவியலில் நோபல் பரிசு வாங்கி இன்ன பிற சாகஸங்கள் புரிந்து , இந்தியாவை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் கனவு வாழ்க்கை வாழும்,நிஜத்தில் வெந்ததை தின்று , விதி வந்தால் சாவோம் என்ற வெட்டி வாழ்க்கை வாழ்ந்தி விட்டோமோ என்ற வருத்தத்துடன், ஏதாவது சாதிக்க துடிக்கும் சராசரி மனிதன்.
இவ்வாரம் உங்களுடன் 'அநாமிகா' மெய்யப்பன்

Subscribe to:
Posts (Atom)