Sunday, March 15, 2009

வின்செண்ட் வான் கோ

மல்லிகை மகள் - 9/16/07 / 4/30/08
--------------------------------------------
ஆம்ஸ்டர்டாமில் ஒரு நாள் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது , வழக்கம் போல ஏதாவது ஒரு சுற்றுலா பேருந்தில் ஏறி முக்கிய தலங்கள் அனைத்தின் முன்பும் புகைப்படம் எடுத்து சுற்றிப் பார்த்த இடங்களின் எண்ணிக்கையில் ஒன்றை சேர்த்த திருப்தி அடையலாம் என்றிருந்த போது , உடன் வந்த ரஷ்ய நண்பர் டிமிட்ரி நேரே வான் கோ ஓவிய அருங்காட்சியகம் செல்லலாம் என்றார். இது ஓவியர்களின் புனித தலம், அறிவு கோயில் என்றும் காணக் கிடைக்காத வான் கோவின் ஓவியங்கள் பல இங்கு உள்ளது என்று அழைத்துச் சென்றார்.

விமான நிலையத்திலிருந்து 20 நிமிட ரயில் பயணத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தோம். மழை லேசாக தூற ஆரம்பிக்கவே, குடை ஒன்றையும்,வரைபடம் ஒன்றையும் வாங்கி கொண்டு, காபியை சிப்பினோம். மோனலிசா வகை ஓவியங்களா ,இல்லை தலையை பிய்க்க வைக்கின்ற நவீன ஓவியங்களா என்று நண்பரின் ஓவிய திறமையே சோதித்தேன். இரண்டும் இல்லை, இது சாமன்யர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கருத்தோவியங்கள் என்றார். காபியை முடித்து, காபியுடன் வந்த சாக்லேட்டை கடித்து ( சாப்பிட்டவுடன் வெற்றிலை மாதிரி , காபியுடன் சாக்கலேட்) ,ட்ராம் ஒன்றை பிடித்து வான் கோவை வந்தடைந்தோம்.

10 யுரோ செலுத்தி உள்ளே சென்றால், உடன் கொண்டு வந்த பொருட்களை ( காமிரா உட்பட) லாக்கரில் போட்டு விட்டுதான் நிரந்தர காட்சிக் கூடத்திற்குள் செல்ல அனுமதித்தார்கள்.நிரந்தர காட்சிக் கூடம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. முதாலவது வான் கோவின் ஓவியங்கள். இரண்டாவது மற்ற கலைஞர்களின் ( அவரது சம காலத்தவர், நண்பர்கள் மற்றும் அவரின் ஓவிய வழி வந்தவர்கள்) ஓவியங்கள். மூன்றாவது வான் கோவின் ஓவிய வரலாற்றை பிரதிபலிக்கும் கடிதங்கள் மற்றும் பொருட்கள்.

"கலைகளிலே அவள் ஓவியம்" என்றார் கண்ணதாசன். "கலைகளிலே அவள் ஓவியம்" என்றார் கண்ணதாசன். அழகியல் மட்டுமின்றி, உணர்வியலகாவும் உள்ளதால்தான் ஓவியம் என அதன் உண்ணதத்தை கவிதையில் படைத்தாரோ நம் கவிஞர். அது போல் , ஓவியத்திலேயே புதுக்கவிதைகள் படைத்து இந்த உலக்த்தை உலுக்கியவர் தான் வின்செண்ட் வான் கோ ( 1853-1890). இந்த டச்சு (நெதர்லாந்த்) நாட்டவரின் கலைவடிவங்களை , டச்சு தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வின்செண்ட் வான் கோ ஓவிய அருங்காட்சியகம் பெருமையுடன் தாங்கி வருகிறது.

ஓவியம் என்பது காட்சியை அச்சு பிசகாமல் நகல் எடுக்கும் கலையாக மட்டும் இருந்த காலத்தில் , ஓவியரின் திறமை என்பது ஓவியத்தின் தத்ரூபத்தில் மட்டும் மதிப்பிடப்பட்ட காலத்தில் ஒவியரை ஒரு படைப்பாளியாக காட்ட வித்திட்ட முதல் முயற்சி இது.காட்சியின் நகலாக ஒரு பரிமாணத்தை மட்டும் ஓவியம் காட்டாமல் , காண்பவரின் கற்பனையில் ஆயிரம் கதைகள் சொல்லும் ஒரு படைப்பாக அதை மாற்ற , காட்சியின் வரைவை சிறிதே திரித்து , கருப் பொருளின் வீர்யத்தை உணர்வாக வெளிப்படுத்தும் அவரின் முயற்சிகள்.

அவரின் ஓவியங்களில் காணப்படும் தூக்கலான வண்ணங்களும், அநாயசமான தூரிகை வீச்சும் ஒரு புதிய ஓவிய உலகிற்கு வழி வகுத்தது எனலாம்.வசீகர புன்னைகையோ, புரியாத புதிரோ இல்லை.அன்றாடம் காணும் காட்சிகள் தான், ஆனால் கார்பன் காப்பியாக இல்லாமல் , வண்ணங்களின் கலவையும் , தூரிகையின் வீச்சும் மனசோடு சொல்லும் கதைகள் ஆயிரம். வாயில்லா ஜீவன்களின் வார்த்தைகள் தான் வண்ணங்களோ?.

இவரின் ஆரம்ப கால ஓவியங்கள் , இயற்கையின் மீதிருந்த இவரின் ஈடுபாட்டை வெளிப்படுத்தும். இவரின் சகோதரர் தியோவின் ஆதரவோடு , பாரீஸ் சென்றபின் அங்கிருந்த திறமை மிகுந்த ஓவியர்களின் நட்பு இவரின் ஓவிய அணுகுமுறையை மாற்றியது. ஜப்பானிய ஓவியங்களும் இவரை மிகவும் கவர்ந்தது.இவை இரண்டும் வேர்ந்து வான் கோவின் தூரிகையில் , ஒரு புதிய ஓவிய உலகிற்கு பாதையிட்டன.வான் கோவின் வண்ணங்கள் அவரின் உணர்வுகளை பிரதிபலித்தன.நிறங்கள் உணர்வுகளின் ஊடகம் என்ற இவரின் அணுகுமுறை, புதுவகையான சாயங்களை உபயோகிக்கும் முறைகளையும், வரைந்தது போல் வர்ணம் தீட்டும் தூரிகை கெட்டியான வீச்சுகளையும்,தூக்கலான நிறங்களை பயன்படுத்தும் முறையையும் அறிமுகப்படுத்தியது.அவரது சகோதரர் தியோவின் ஆதரவும் நட்பும் அவர்களின் கடிதங்களும் கண் கலங்க செய்தது.

காவியம் எழுதும் போது ஏற்படும் பிழைகளுக்காக தனது தலையால் எழுத்தாணியால் குத்திக் கொண்ட சீ(ழ்)த்தலைசாத்தனார் போல , கோபத்தில் தன் காதையே நறுக்கிக் கொண்டவர் தான் வான் கோ.உலகமெங்கும் உன்னத
கலைஞர்களின் வாழ்க்கை ஒரே மாதிரிதான் போலும்.வறுமை,விரக்தி,எதிர்ப்பு , பைத்தியகாரப் பட்டம், உலகத்தை உலுக்கிவிடும் மனோபலம், வாழும் போது கிட்டாப் புகழ்,இளம் வயதில் அகால மரணம்.

200கும் மேற்பட்ட ஓவியங்கள மற்றும் கடிதங்கள் அவரின் வாழ்க்கையின் ஐந்து பகுதிகளாக அவர் வாழ்ந்த இடங்களின் காலகட்டமாக காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது.நெதர்லாந்த்(Netherland),பாரீஸ்(Paris),ஆர்ல் (Arles), சென்ரேமி(Saint-Rémy),ஒவெர்சுர்வஸ்(Auvers-sur-Oise)

ஆரம்ப காலத்தில் தனது உறவினர் ஆண்டனிடம் (Anton Mauve) ஓவியம் வரைய கற்றுக் கொண்டாலும் , பின்னர் ஏகலைவன் போல் தானே படம் வரையக் கற்றுக் கொண்டு வரைந்த பண்ணை காட்சிகளும், விவசாயிகளின் படங்களும் "நெதர்லாந்த்" பகுதியில் நிறைந்திருக்கிறது.இந்த காலகட்ட ஓவியங்கள் , கறுமையான வண்ணங்களை கொண்டிருப்பதை காணலாம்.இதை பூமியின் நிறமெனலாம். 40க்கும் மேற்பட்ட விவசாய காட்சிகள், பண்ணை ஆட்கள் ஒவியம், சிகரெட் பிடிக்கும் எலும்புக் கூடு ஓவியங்கள் அற்புதமானது. ஒரு விவசாய குடும்பம் இரவு உணவு அருந்தும் காட்சியில் அமைந்த்த உருளைக்கிழங்கு உண்பவர்கள் என்ற தலைப்பிலிட்ட ஓவியம் பிரபலமானது.

பின்னர் பாரிஸ் சென்று , அவரது சகோதரர் தியோவுடன் இருந்து ,பிரென்சு ஓவிய கல்லூரியில் சிறிது காலம் ஓவியம் பயின்று வரைந்த படங்கள் "பாரீஸ்" பகுதியில் உள்ளது.இந்த காலகட்டத்தில் தான் அவரது புகழ்பெற்ற ஓவிய பாணி ஆரம்பமானது. பிரகாசமான பிண்ணனிகளையும்,நகர்புற காட்சிகளையும் கொண்ட படங்கள் , வண்ணங்களின் விளையாட்டுகளில் உயிரோட்டமாய் உள்ளன.பாரிஸில் தான் தனி நபர்களின் ஓவியங்களை வரைவதன் மூலம் வருமானம் ஈட்டமுடியும் என்று தோன்றியதால் , தனி நபர் ஓவியங்களை வரைய பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்.மாதிரியாக மற்றவர்களை அமர்த்திக் கொள்ள நிதிநிலைமை இடம் கொடாததால் , கண்ணாடி முன் அமர்ந்து கொண்டு தன்னையே வெவ்வேறு பாணிகளில் வரைந்து பழகிய படங்கள் , வான் கோ என்ற கலைஞனின் கனவை தினம் சொல்கின்றன. காலத்தின் சாட்சியாக, தனது தோற்றத்தின் ஞாபகமாக , சுவரை அலங்கரிக்க தன்னை அசலாக படமாக வரைந்து வைத்து கொள்ள எத்தனிக்கும் மனிதரிடம், தனது மனத்தின் படமாக இவற்றை வரைந்துள்ளார்.

சக ஓவியர்களை ஒன்று சேர்த்து ஓவிய கூடம் அமைப்பது அவரது கனவாக இருந்தது. அதற்காக தென் பிரான்ஸில் உள்ள ஆர்ல் பிரதேசத்தில் , மஞ்சள் இல்லம் எனும் ஓவியக் கூடத்தை வாடகைக்கு எடுத்த அவரின் முயற்சிகளின் நினைவுபடுத்தும் படங்கள் , "ஆர்ல்" பகுதியில் உள்ளது. இங்குதான் உலக் புகழ் பெற்ற சூரிய காந்தி படங்கள் உள்ளது. மஞ்சள் நிறத்தின் மேலிருந்த அவரது காதல் , அவரது அனைத்து படங்களிலும் காண முடியும். நண்பர் கோகெனுடன் (Gauguin) கொண்ட கருத்து வேறுபாட்டில் தனது காதை அறுத்தெரிந்ததும் இங்கு தான்.

ஓவியக் கூடம் அமைக்கும் முயற்சியில் தோல்வி,நண்பருடன் கருத்து வேறுபாடு என் விரக்தியில் வாழ்க்கையின் ஓரத்திற்கு விரட்டப்பட ,வான் கோ சென்ரேமி மனநல மருத்துவமனையில் தன்னை சேர்த்துக் கொண்டார். வெளி உலகில் இருப்பதை விட , இங்கு அமைதியாக இருப்பதாக உணர்ந்ததாக தியோவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கிறார். தனது அறை சன்னலின் வழியாக தெரிந்த மரங்களையும், பூக்களையும்,பரந்தவெளிகளையும் , கோதுமை விளைநிலங்களையும், சைப்ரஸ் மரங்களையும் கண்டு வரைந்த படங்கள் "சென்ரேமி" பகுதியில் உள்ளது. காட்டின் பசுமையில் ஊடுரும் ஒளிக்கதிர்கள் பிரதிபலிக்கும் நிறங்களின் கலவை கண்களின் கனவுலகம்.மற்ற ஓவியர்களின் கருப்பு வெள்ளை வரைபடங்களை மாதிரியாகக் கொண்டு வரைந்த வண்ண ஒவியங்கள் பலவும் உண்டு.

நகர்புர வாழ்க்கையை விரும்பாத , அதே சமயம் சகோதரர் தியோவின் அருகாமையில் இருக்க் விரும்பிய வான் கோ, பாரிஸ்க்கு அருகில் உள்ள ஒவெர்சுர்வஸில் மருத்துவர் பாலின் (Paul Gachet) கண்காணிப்பில் இருந்த போது வரைந்த கிராமப்புற தோற்றங்கள் , "ஒவெர்சுர்வஸ்" பகுதியில் உள்ளது.வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆரோக்கியத்தையும்,ஊக்கத்தையும் இந்த காட்சிகள் அளிப்பதாக வான் கோவின் கடிதங்கள் விவரிக்கின்றன.

1890-ல் விரக்தியின் உச்சத்தில் அவர் ஒரு கோதுமை விளைநிலத்தில் தன்னை சுட்டுக் கொண்டார். இறுதியில் , அவரது சவப்பெட்டியை அலங்கரித்ததும் மஞ்சள் மலர்கள் தான்.

No comments: