Friday, May 22, 2009

நூலகம்

கலைத் தாயை
அரசாளும் கட்சிகளின்
அனுதாப பத்திரிக்கைகள்
அலங்கரிக்க
முழுக் கதையின்
முடிவைக் கிழித்து
கலைப் பூசாரிகள்
ஆராதிக்க
கற்பனை பிரசாதம்
பெற்ற இடம்!!


பத்திரிக்கைகளை
பகிர்ந்து படிக்க
அமைதிப் பிரகாரம்
அனு தினமும்
சுற்றிய இடம்!!

அறிவுப் பக்திக்கு
அடிபணிந்து
ஒரு சிறு கையெழுத்து
வேண்டுதலில்
விலகிடும் நந்தி
விரிந்திடும் விசுவரூபம்!!!


அங்கே
தினம் திறந்திடும்
சொர்க்க வாசல் !
அது
காட்டிடும் தினம்
புது வழி !!

Friday, May 15, 2009

ஓய்வு

அதீத மகிழ்ச்சி
சற்று அயர்ச்சியை தந்தது!
கவலை தான் உற்ற
நண்பன் என தோன்றியது!

எங்கோ தோன்றி
எது நோக்கியோ
சென்று கொண்டிருந்த காற்று
சற்றே இறங்கி
வருடிச் சென்ற பின்
மேய்ப்பனாய் மேகங்களை
விரட்டிச் செல்ல ஆரம்பித்தது!

கலைந்த மேகங்கள்
நினைவுச் சுனாமியை
கிளப்பி
அமிழ்ந்திருந்த எண்ணங்களை
தூக்கி சுழற்றியடிக்க..

இறுக்கிப்பிடித்த ஆடை
நெகிழ்ந்தது போல்
இலேசான விடுதலையும்
முற்றிலும் விழுமோ என
வெட்கமான பயமும்
மாற்றி ஊஞ்சலாடியது!

திசைகளை மறந்து
வழிகளை தொலைக்க
தடம் அழித்து
முட்களை மறந்து
நினைவுப் புதர்களை மிதித்து
ஆனந்த தாண்டவம்
ஆடியமைந்தது எண்ண ஓட்டம்!

காலப் பெருவெளியில்
ஓய்வெடுப்பது ஒரு
பெரிய வேலை!
உள்ளார்ந்த வேலை
தரும் உத்வேகம்
ஒரு பெரிய ஓய்வு!