Sunday, January 03, 2010

புதுவருட வாழ்த்துக்கள்

புதிய சுப்ரபாதமாய்
குத்துப் பாட்டு ஒன்று
டீக்கடையில்
எழுப்பிக் கொண்டிருந்தது!

இலையாய் , இருக்கையாய்
துண்டாய் , தோரணமாய்
அவதரிக்கும் நாளிதழ் பிரம்மம்
உலக ஜீவன்கள் அனைத்திற்கும்
பிரசுரித்திற்கும் ஒரே ராசி பலனை
சத்தமாய் படித்து பரவசமானது
அதிகாலை துயில் எழும் ௬ட்டம்!

நிறைமாதமாய்
நிரம்பி வழியும் பேருந்து
குழிகளில் சாலையை தேடி ஓடும்
விரக்தியில்
அபய ஒலியை எழுப்பி
தன் வருகையை
சப்தமாய் வெளிப்படுத்தி சென்றது!

வராத வேலைக்காரியை
வாசலில் சபித்துக் கொண்டிருந்த
அம்மாவிற்காக
சிணுங்கி கொண்டிருந்த தொலைபேசி
கேட்க வழியின்றி அடங்கியது!

வாழ்த்துக்களை பரிமாறிப்
பழக்கமில்லாத கிராமத்தில்
புதுவருட வாழ்த்துக்கள்
வாழ்க்கையின்
ஒவ்வொரு ஒலியிலும் தான் !

Saturday, January 02, 2010

பெயர் தெரியாத

பெயர் தெரியாத மரத்தின் கீழ்
சாய்வு நாற்காலியில் சரிந்து
மோட்டாவை உந்தி தாங்கி
ஓய்வு யோகத்தில் திளைத்திருந்தேன் !

இயற்கையின் இனிமையில்
மன இரைச்சல்கள் மறைந்திருக்க...
இலைகளின் இடுக்குகளில்
தேடி வந்த ஒளி கீற்றுக்கள்..
மூடிய விழிகளை திறக்க முயல
தேநீர் கோப்பையின் வெம்மை
நாசியை துளைத்தது!

இயற்கையின் காதலை
இன்றைக்காவது தெரிவிக்க
பொங்கிய தைரியத்தில்
மூடியிருந்த முட்டாள் தனங்கள்
கவிதை வடிவமெடுத்தன .

புன்னகை புரிந்த
புதுக்கவிதையை
புகைப்படமாய் புரிந்து விட
போக்கினேன் பொன்னான
தருணங்களை!

நாளைய ஞாபகங்களுக்காக
இன்றைய அனுபவங்களை
விட்டு விடாதேயென்று
புது ஞானம் பிறக்க...
சாய்வு நாற்காலியில்
மீண்டும் சராணகதியடைந்து
சாந்தமானேன்.

பத்து தலையும்
பவித்திரம் அடைந்து
உடைந்த வில்லாய்
உயர்ந்தது !