Wednesday, August 11, 2004

என்னை திட்டியவர்கள்

ஒரு வாரமாய் ஊரில் இல்லை.காலை 4 மணிக்கு வீடு வந்து சேர்ந்தவுடன், வந்திருந்த 362 அலுவலக மின்னஞ்சல்களை மேலோட்டமாக மேய்ந்து விட்டு , பின்னால் அசை போட்டுக் கொள்ளலாம் என்று ஆவலுடன் வலைப்பதிவுகளை பார்க்க ஆரம்பித்தேன். சி(ப)ல பதிவுகளுக்கு 30 , 60 என்று பின்னூட்ட எண்ணிக்கைகளை பார்த்தவுடன், கோடை மழை மாதிரி , எல்லா
வலைபதிஞர்களும் பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்களா என்று படிக்க ஆரம்பித்ததில் , கார சாரமாக ஆரம்பித்த விவாதம் நார சாரமாக சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

இதிலிருப்பது போலில்லாமல் திட்டு வாங்குவதும் சில நல்ல அனுபவங்களாக அமைவது உண்டு. என்னை திட்டியவர்களை எண்ணிப் பார்க்க , இதை விட சிறந்த சந்தர்பம் வேறு ஏது?

திட்டு வாங்குவது என்றவுடன் , பலருக்கு அப்பாதான் ஞாபகம் வரும்.அப்பாவிடம் விவாதம் செய்து , அவரை கோபத்தின் உச்சிக்கு கொண்டு செல்வது எனக்கு கை வந்த கலை. எல்லாரும் அவரைப் பார்த்து நடுங்கும் போது , கொண்ட கொள்கையை (?) விடாமல் , நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அவரிடம் விவாதம் செய்து கொண்டிருப்பேன். அவர் அப்பொழுதெல்லாம் , "பெரிய லார்ட் வேவல் இவரு. இவர் சொல்றதுதான் சரி..." என்று என்னை திட்டுவார். திட்டுவதில் கூட என்னை லார்ட்-ஆக பார்த்தவர்.

மானாமதுரையில் சிறுவர்களெல்லாம் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த கால கட்டம். ஒரு முறை பெரியம்மா மகனின் உடைந்த மட்டையயும், கிரிக்கெட் பந்தும் எனக்கு பரிசாக கிடைத்தது. ( விடாத கெஞ்சலுக்கு பின்).கிரிக்கெட் மட்டை வைத்திருந்ததால் , நான் வைத்தது தான் சட்டம். தேவிலால் போல நான் கேப்டன் பதவி வேண்டாம் என்று, துணை கேப்டன் பதவி வைத்து கொண்டேன். முதலில் மட்டையடிக்க நான் செல்வது வழக்கம். பந்து எப்படி வந்தாலும் , ஸ்டம்பில் பட்டு விடாமல் , மட்டையை சரியாக பந்து வரும் வழியில் வைத்து , அங்கேயே செத்து விழுந்து விடும் படி கட்டை வைப்பது என் வழக்கம். அடித்து விளையாட தெரியாது. அதனால் ஆட்டம் இழக்காமல் , கடைசி வரை விளையாடி ரன் அதிகம் எடுக்காமல் இருப்பது என் வழக்கம்.நண்பர்களெல்லாம் பொறுமை இழந்து , என்னை அடித்து விளையாட சொல்வார்கள். என்னை நேரிடையாக திட்ட முடியாமல் , "டெஸ்மண்ட் ஹெயின்ஸ்" என்று என்னை அழைப்பார்கள். (பின்னாளில் ஒரு நாள் ஆட்டங்களில் ஹெயின்ஸ் அபாரமாக அடித்து ஆடி , என் பெயரை காப்பாற்றியது வேறு விஷயம்.)

பனிரெண்டாம் வகுப்பு படித்த போது , இயற்பியல் ஆசிரியருக்கு என் மேல் கொஞ்சம் கோபம். வகுப்பு முடிய சற்று நேரம் இருக்கும் முன்னரே , அவர் பாடம் நடத்துவதை கவனிக்காமல் , எல்லா புத்தகங்களையும் பையில் எடுத்து வைத்து , தோள் பட்டையில் பையை மாட்டிக் கொண்டு , மணியடித்தவுடன் வகுப்பிலிருந்து ஓடிவிட ஆயத்தமாக உட்கார்ந்திருப்பேன். ஒவ்வொரு நாளும் , நான் செய்யும் ஆயத்தங்களை பார்த்து , அவர் என்னை "கிளர்வுற்ற எலக்ட்ரான்" மாதிரி , ஏண்டா இப்படி வெளியே ஓட ரெடியா இருக்கே என்று திட்டுவார்.

மற்ற திட்டல்கள் மற்றொரு நாளில்....

7 comments:

ஜெ. ராம்கி said...

திட்டோட சரியா.. அடியெல்லாம் வாங்குனது கிடையாதா?

ஜெ. ராம்கி said...

திட்டோட சரியா.. அடியெல்லாம் வாங்குனது கிடையாதா?

Vanthiyathevan said...

அருமையான பதிவிற்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

Cettinaatu pakkam “arasu aalvaai makkal” endru thivathu vazhakam. Andha kaalathil, thittum podhu kooda nalla vaarthaikalal archanai seivathundu polum !. Ippothellam saniyane, peye ! romba sagajam... Kaalam Kali kaalam.

Boston Bala said...

எலக்ட்ரான் எல்லாம் ஞாபகப்படுத்துகிறீர்கள்... எலக்ட்ரான் +வா, -வா ;-)

Mey said...

ரமணிசந்திரன் கதைகளில் நாயகியும் அவளது தம்பியும் , கழுதையே நாயே என்றெல்லாம் திட்டிக்கொள்ளாமல், 16 , 32 என்று அந்த விலங்குகளின் பற்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு திட்டிக் கொள்வது ஞாபகம் வருகிறது.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//அவர் என்னை "கிளர்வுற்ற எலக்ட்ரான்" மாதிரி , ஏண்டா இப்படி வெளியே ஓட ரெடியா இருக்கே என்று திட்டுவார்.// :))))

ellaarum avangavanga appaangakitta thaan thiRamaiya koor theetikkittOm pOla irukku. :)