Thursday, November 29, 2007
காதலின் அகரம்
கால்நனைய சென்ற
மனைவி வருமுன்
அலைவந்து அழித்துவிடும்
என நம்பி
காலணிகளை காத்திருந்த
நான் எழுதினேன்
காதல் அகரம் தொடங்கிய
"அவள்" பெயரை...
அலைக்கு பயந்து
அதி வேகமாய்
ஓடி வந்த குழந்தை
படிக்க முயற்சித்தது
அழிய மறுத்த
புரியாத மொழியை..
Saturday, November 24, 2007
ஆயிரம் ஜன்னல்
இரவு அது!
பழைய நினைவுகளை
அசைபோட ஆயாசம்!
எதிர்கால பேராசை
கனவுகளோ எதுக்களித்தன!
கற்பனையின்
துச்சாதன கைகள் களைத்திருக்க
தற்காலிக மரணம் போல்
மரத்துப் போனது மனம்
வேறு செய்வதறியாது!!!
இமைகளின் வேலை
நிறுத்த போராட்டத்தில்
சமாதானம் பேச விரும்பாமல்
தூக்க தொழிற்சாலையை
காலவரையற்று இழுத்து மூடி
வீம்பாய் எழுந்தேன்!
இருளையும் நிலவையும்
இணைத்து உருக்கிய
இரவின் சுகந்தம்
மூடிய ஜன்னலின் சல்லடையில்
சிக்காமல் வழிந்து உள் வந்தது!
எழுந்து அந்த
வெளிச்ச பெட்டகத்தை திறந்து
முகம் துளைத்து
உயிர்ப்பிக்க
இதழ் தேடினேன்
வீசிய காற்றில்
வேப்பங்கொழுந்து
ஒன்று முகத்தில் அடித்து
மனப்பேயை
விரட்டிச் சென்றது
முதிர்கன்னிகளின்
உருவக புகைப்படச் சட்டம்
அன்றோ அணிந்திருந்தது
புது ஓவியம்
அது
கீறிச்சிட்ட அணிலின்
வாலொன்று வரைந்து சென்ற
வான்வெளியின்
நட்சத்திர ஓவியம்
தூங்காத கண்களின்
கவலை போய்
இது வரை
காண்காத கண்களின்
கவலை வந்தது
தட்டினாலும் திறக்க
தயங்கும்
தாழ்ப்பாள் அணிந்த
வாயிற் கதவுகளில்
முட்டி மோதாமல்
இனி
எட்டாத உயரத்தில்
என்றென்றும் திறந்திருக்கும்
ஆயிரம் ஜன்னல் வழி காண
ஆயத்தமானேன்!!!
Sunday, November 04, 2007
சமீபத்தில் என்னைக் கவர்ந்த ( பாதித்த) சில வார்த்தை பிரயோகங்கள்
சமூக வர்த்தகம் (Social Business)
ஜனநாயக தொழிலகம் (Industrial Democracy)
ஏழு நாள் வாரயிறுதி (Seven Dat Weekend)
"சமூக வர்த்தகம்" - இது கிராமின் வங்கி மூலம் சிறு கடன் திட்டத்தை தொடங்கிய முக்மத் யூனஸ் அவர்களின் மேடைப் பேச்சை கேட்ட போது, சட்டென கவர்ந்த கருத்து. இலாபத்தை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், சமூக நலனை குறிக்கோளாக கொண்டு , அதே சமயம் நஷ்டமடையாமல் வெற்றிகரமாக நடத்தப் படும் வர்த்தகம் தான் சமூக வர்த்தகம் (Social Business). இது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என சந்தேகம் கொள்பவர்களுக்கு அவரின் பதில் , இலாபத்தை மட்டும் குறி வைத்து பணம் குவிக்கும் பலர் அதே பணத்தை தனி வாழ்க்கையில் வாரி வழங்கும் வள்ளல்களாக இருக்கும் போது, இது ஏன் சாத்தியமாகாது என்பது தான்.ஏழ்மையை அருங்காட்சியகத்திற்கு அனுப்ப கண்டிப்பாக சமூக வர்த்தகம் பயன்படும்.
பொதுவாக ஜனநாயகத்தை விரும்பும் மக்கள், வாழ்வில் பெரும்பகுதியை கழிக்கும் அலுவலகத்திலும் அதே ஜனநாயகம் இருக்குமானல் ,அலுவலில் அவர்களின் சந்தோஷமான முழு ஈடுபாடு இருக்கும்.அது தொழின் தொடர்ந்த வெற்றியை , அபரிமிதமான வளர்ச்சியை அளிக்கும் என்ற சித்தாந்தம் தான் ஜனநாயக தொழிலகம் (Industrial Democracy) . பின் வார நாட்கள் ஏழும் வார இறுதி போல் சந்தோஷம் தான். இதன் நல்ல கருத்துக்களை , நவீன தொழில்முறையோடு கலந்து பல வெற்றியடைந்த நிறுவனங்கள இன்றும் பின்பற்றி வருகின்றன.இந்த கருத்துக்களை வலியுருத்தி வரும் ரிக்கார்டோ செம்லரின் (Ricardo Semler) MIT உரையை இங்கு கேட்கலாம். சில சமயம் நரசிம்மராவ் போல இருப்பதும், மாற்றங்களை வேகமாக திணிக்க தவிர்ப்பது நல்லது என்பது போன்ற நல்ல கருத்துக்கள் பல இவரின் இந்த MIT பேச்சில் நிறைந்திருக்கின்றன.கடந்து பத்து வருடங்களாக எந்த முடிவும் எடுக்காத இவரின் சேவையை பாரட்டி , சமீபத்தில் பாராட்டு விழா எடுக்கப் பட்டதாம். ( எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவுகள் கீழ்மட்டத்திலேயே கிடைப்பது நல்ல விஷயம் தானே?)
Friday, October 12, 2007
முடிவும் தொடக்கமும்
முடிவு அறிந்த கனவின் கம்பீரம்
http://wms.andrew.cmu.edu/001/pausch.wmv
http://online.wsj.com/public/article_print/SB119024238402033039.html
கனவு தொடங்கும் கலை
http://blog.guykawasaki.com/2006/06/the_art_of_the_.html
Saturday, September 29, 2007
பால பாடம்
எழுதாத சிலேட்டை
எடுத்து வந்தேன்னு
கோவத்தில் குட்ட வந்த
வாத்தியாரு
முன் ஜாக்கிரதயாய்
மோதிரத்தை கழட்டிக்கிட்டு கத்தினாரு
"பழைய சிலேட்டுனாலும்
பாழும் அடுப்புக்கரி பூசியிருக்கலாம்" என்று
பாவம் தெரியவில்லை
அவருக்கு
மதியம் வரை காத்திருக்க
கடித்து தின்ன சிலேட்டுக் குச்சி
வயிற்றுக்குள் எழுதிய பாடம் !
Thursday, September 06, 2007
வெள்ளை யானை
வீதி வழி வந்தது
வெள்ளை யானை!
வெல்லத்திற்கும் பழத்திற்கும்
வளைந்து குனியாமல்
அம்பாரி சுமப்பது போல்
அமைதியாய் அடி வைத்தது!
தர்மத்திற்கும் செழிப்பிற்கும்
அடையாளமான காலம் போய்
வீண்செலவாய் அறிந்திட
விருப்பமில்லாமல் விடை பெற்றது!
காவிய பாத்திரம்
என மட்டுமே அறிய போகும்
காலத்தை நோக்கி
மெல்ல அடி வைத்தது!
மதம் கொண்ட
பிளிரல் இல்லை அதனிடம்
மௌனத்துடன்
அபூர்வம் அருவமாகியது!
நிறங்களின் பேதம்
நிழல்களை தான் பிரிக்கவில்லை
என்ற நிஜம்
நிழல் வரா நேர பகலவனாய்
உச்சந் தலையில்
ஓங்கி அறைந்தது!
Monday, August 20, 2007
அசோக மரம்
ஞானம் பெற
போதி மரம்
தேவையில்லை
போதும் எனக்கு
அசோக மரம்!
சாலையெங்கும்
காத்திருக்கும்
அதுவே எனக்கு
அரச மரம்!!
Tuesday, July 31, 2007
கடற்கரை
வற்றிய கடல்
வரைந்த கோலங்கள்
கரையெங்கும் வரவேற்கும்!
கடல்வனம் காட்டும்
நீலவண்ணம்
வெண்ணிறமாய் கரை வந்து
கண்களை வருடும்!
உவர்ப்புக்குள்
உயிர்களை அடக்கி
உலாவரும் அலைகள்
உணர்வுகளுடன் ஒத்ததிரும்!
கரை சேர்ந்த சிப்பிகளின்
உடைந்த கூடும்
கைதேர்ந்த சிற்பியின்
செதுக்கலாய் கலை வண்ணம் சேர்க்கும்!
பால் வனமாய் வெண்மணல்
பூத்திடும் சந்தோஷப் பூக்கள்
பாலைவன சோலைகளாய்
பார்க்கும் இடமெங்கும்
பரவசம்!!!
Monday, May 14, 2007
மனக்காக்கை
கொல்லையில் கரையும் காக்கை
முற்றத்தில் சொல்லும் பல்லி
என பலன் பார்க்க கேட்டும் உனக்கு
என் குரல் மட்டும் கேட்க மறுப்பதேன்?
பழைய அனுபங்களின்
பிரதிபலிப்பு மட்டுமா நான்?
உண்மையில் உன்னில் இல்லையா?
இல்லை
உண்மையின் உளறல்களின் தொகுப்பா நான்?
மழைக்கால வானவில்லாய்
மௌனத்தில் மட்டும் தெரியாமல்
மனமே நான்
என ஒன்றாய் தெரிவது எப்பொழுது?
கானல் நீரின் ஆழம் அதிகமென
கருங்கற்களை போட்டுத் தவித்தது
தாகத்தில் மனக் காக்கை...
Wednesday, April 25, 2007
துணி துவைக்கும் கல்
கனவில் வந்தது
ஒரு துணி துவைக்கும் கல்
ஆற்றங்கரையோரம் அநாதரவாய்...
காதலையும் காமத்தையும்
காயங்களையும் காணாத பயங்களையும்
மட்டுமே வடித்து இதுவரை வந்திருந்த கனவுகளில்
இது மட்டும் என்ன புதுமையாய் ...
மஞ்சள் அரைத்து மணக்காமல்
மண்ணில் மிதிபடும் ஏக்கமா?
உழைக்கும் வர்க்கத்தின்
உடைகளை துவைக்கும் கர்வமா?
சலவைக்கு உதவுவது
'தான்' எனினும்
சலவைக்கல் என் பெயர் பெறுவது
பளபளக்கும் பளிங்கு என புழுக்கமா?
சலசலக்கும் ஆறும்
சுட்டெரிக்கும் சூரியனும்
துணை கொண்ட இடத்தில்
வந்த அமர்ந்தன் பயனேயன்றி
வேறொன்றுமில்லை என பயமா?..
கறைகளை ரகசியமாய்
காக்காமலும் கழிக்காமலும்
பொதுவில் அடித்து துவைக்க
ஒரு அறைகூவலா?
அடிபட்டாலும்
அடுத்தவருக்கு உதவ
ஒரு உந்துகோலா?
எதற்காக வந்தாய்
என் இனிய சலவைக்கல்லே?
Wednesday, March 14, 2007
வளையட்டும் வரையறை
கரை சேர்க்கும் தருணம்
கண நேரம் கவனம் தவறியதால்
கவிழ்ந்தது நண்டு..
நீரில் நீந்தவும்
நிலத்தில் ஊரவும்
அறிந்து என்ன பயன்
நிமிர்ந்து எழ முடியாமல்?
பற்றி எழ ஏதுமில்லை
எனினும் பரிதவிக்காமல்
காற்றையேனும் கைப்பற்றி
கவிழ்ந்த நிலை மாற
தொடர்ந்தது கடும் பிரயத்தனம் ...
வீசும் கால்கள் விசிறிய காற்று
தூக்கி நிறுத்த தூது போகாதா
துள்ளி வரும் அலைகளிடம் !
நீந்தியவை நிலத்தின்
வனம் கண்டு ஊர்ந்ததும்
ஊர்ந்தவை வானத்தின்
விரிவை கண்டு பறந்ததும்
பறந்தவை கடலின்
ஆழம் கண்டு நீந்தவும்
சாத்தியமானது
வரையறைகளை
வளைக்க முடிந்ததால் தானே !
Sunday, March 04, 2007
வின்செண்ட் வான் கோ
உடன் பயணம் செய்த ரஷ்ய நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க , வின்செண்ட் வான் கோ(Vincent van Gogh)வின் ஓவிய அருங்காட்சியத்திற்கு செல்ல நேரிட்டது. www.vangoghmuseum.nl.
ஓவியத்திற்கும் எனக்கும் ஏக தூரம். அதிலும் நவீன ஓவியம் என்றால் சொல்லவே வேண்டாம். என்றாலும் வழக்கம் போல் ஏதாவது ஒரு நகர சுற்றுலா ஊர்தியில் ஒரு நாளை செலவிட்டு ,சில புகைப்படங்களை எடுத்து அற்ப சந்தோஷம் அடையாமல் , ஏதாவது புதிதாய் முயன்று பார்ப்போம் என்று சென்றேன்.
19ஆம் நூற்றாண்டுகளின் இறுதியில் , நவீன ஓவியங்களிக்கு வித்திட்டவர் வான் கோ(வ்).அருங்காட்சியத்தில் வார நாளில் கூட ஏக கூட்டம் அவரின் படைப்புகளுக்கு இருந்த மதிப்பை உடன் புரிய வைத்தது.
ஓவியம் என்பது காட்சியை நகல் எடுக்கும் கலையாக மட்டும் இருந்த காலத்தில் , ஓவியரின் திறமை என்பது ஓவியத்தின் தத்ரூபத்தில் மட்டும் மதிப்பிடப்பட்ட காலத்தில் ஒவியரை ஒரு படைப்பாளியாக காட்ட வித்திட்ட முதல் முயற்சி இது.காட்சியின் நகலாக ஒரு பரிமாணத்தை மட்டும் ஓவியம் காட்டாமல் , காண்பவரின் கற்பனையில் ஆயிரம் கதைகள் சொல்லும் ஒரு படைப்பாக அதை மாற்ற , காட்சியின் வரைவை சிறிதே திரித்து , கருப் பொருளின் வீர்யத்தை உணர்வாக வெளிப்படுத்தும் அவரின் முயற்சிகள் ஓவியத்தை பற்றி சிறிதும் அறியாத என்னைப் போன்றோரை கூட பாதித்தது.
அறுவடை செய்யப்பட்ட வயல் வெளிகள், நகர காட்சிகள், சூரிய காந்தி பூக்கள், காட்டின் பசுமையில் ஊடுரும் ஒளிக்கதிர்கள், படுக்கை அறை, இரவு உணவருந்தும் காட்சி போன்றவை மிகச்சிறப்பாக இருந்தது.
சில படங்கள் விக்கிபீடியாவில் காண கிடைக்கிறது. http://en.wikipedia.org/wiki/Vincent_van_Gogh
அவரது சகோதரரின் ஆதவரவும் , நட்பும் அவர்களின் கடிதங்களும் கண் கலங்க செய்தது. இதன் பின் சில நாட்கள் , அலுவலகத்தில் மாட்டியிருந்த தற்கால நவீன ஓவியங்களை சற்றே முறைத்து பார்த்து , தலையை முட்டிக் கொண்டதுதான் மிச்சம்.
Saturday, February 17, 2007
ஒரு சங்கடமான உண்மை (An Inconvenient Truth)
இணையத்தை கண்டுபிடித்ததாக பீற்றிக் கொண்டவர் அல் கோர் என்று பின்னிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிம் கிண்டலடிக்கப் பட்டவர் என்ற வகையிலும், தேர்தல் நேரத்தில் தன் ஆளுமையை காண்பிக்க தன் மனைவியை மேடையில் ஆழ முத்தமிட்டவர் என்ற வகையில் தான் எனக்கு , அல் கோர் அறிமுகம்.
ஒரு இரண்டு மணி நேர படத்தை , ஒருவரை பேச வைத்து மட்டும் சுவாரஸ்யமாக எடுக்க முடியும் என்பது ஆச்சர்யமாக இருந்தது. சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தின் விதிகளுக்கு அடங்காத படம்.
ஒரு விவாதத்திற்கு உரிய கருத்தைப் பற்றிய ஒருவரின் மேடை பேச்சை, அவரின் சொந்த வாழ்க்கையை கொஞ்சம் இடை சொருகி, இது கட்சியின் பிரசார படமோ அல்லது ஒரு தனிநபரின் அரசியல் பயன் பாட்டிற்கு அப்பாற் பட்டது என்ற நம்பகத் தன்மையை நாசுக்காக நிலை நிறுத்தியது.அல் கோரின் பேச்சுத் திறமையும், கடினமான விஷயங்களை கூட எளிதாக விளக்கிய முறையும் , நகைச்சுவை கலந்த பேச்சும் அருமை.
சில சமயங்களில் , பூதாகரமாக உலகின் எல்லா நிகழ்விற்கும் முடிச்சு போட பார்ப்பது போல இருந்தாலும், இந்த விஞ்ஞானிகளுக்கு வேறு வேலை இல்லை , இன்றைக்கு ஒன்று சொல்லுவார்கள் , நாளைக்கு அதற்கு மாற்று கருத்து தான் சரி என்பார்கள். எல்லாம் இயற்கை பார்த்துக் கொள்ளும்என்று அலட்சியமாக விடக் கூடிய விஷயம் அல்ல. நாம் இயற்கையின் மீது காட்டும் அலட்சியமான வன்முறை மாற வேண்டும் என்பது மட்டும் உண்மை.
படத்தை என் மனைவி இரண்டு முறை பார்த்து விட்டாள். ஒரு நல்ல தலைவரின் தலைமையை அரசியல் இழந்து விட்டது என்ற கருத்து அவளது கணிப்பு. படத்தை பார்த்த என் பத்து வயது மகள் , அடப் பாவிகளா நீங்கள் நல்லா என்ஜாய் பண்ணி விட்டு , எங்களுக்கு பூமியை விட்டு வைப்பீர்களா இல்லை மாட்டீர்களா என்று ஒரு பார்வை பார்த்தாள்.
Thursday, February 15, 2007
மரணம்
உன் உயிரணை உடைந்ததால்
உருவானது இந்த கண்ணீர் நதி
உலராது உறைந்து விடும்
உன் புகழ் தாங்கி
ஓர் நாள்
உப்பளமாய் உய்வு பெறும்
உனக்கு நன்றி நவிலச் சொல்லி
வார நட்சத்திரமாய்
வந்தது போதுமென
துருவ நட்சத்திரமாய்
சுடரச் சென்றாய்
மீண்டும்
துடிக்காதா உன்இதயம் என
துடிக்கிறது பார்
ஓராயிரம் உள்ளம்
வார்த்தையால்
வடிக்க முடியாத
வருத்தத்திற்கு
காரணப் பெயர் தான்
இந்த மரணமோ
நீ தந்த
இந்த அபாய அறிவிப்பொலி
நினைவுபடுத்துகிறது
வாழ்வாங்கு வாழச் சொல்லி
ஐம்புலன் அடங்கினாலும்
ஐம்பூதத்திலும் கலந்து
ஆட்கொள் இனி
நல்வழி நடக்க