Friday, November 21, 2008

கல்லடி பட்ட மரம்

யாரோ எறிந்த கல்
மரத்தின் குறி தவறி
என் தலையை
நோக்கி வந்து கொண்டிருக்கிறது...

செம்புலம் கலக்க
வர மறுத்த மழையின்
பரிட்சயம் மறந்த மரம்
செந்நீர் பட்டாவது
சிறிது சிலிர்க்கட்டும்
என் வீரமாய் நோக்கினேன்...

கனி நோக்கி கல்லெரிந்த
சிறுவன் சிதறியோட
தழும்புகளின் நினைவுகள்
ஓடும் சிறுவனும்
நானே என உணர்த்தியது...

காயத்தின் அடையாளம்
தழும்பென
நினைத்திருந்த என்னை
காலத்தின் தொடர் பயணம்
ஆற்றிய அனுபவ வித்தை என..

கல்லெரிந்த கைகளுக்கு
கனி கொடுக்கும் மரம்
சன்னமாய் அசைந்தே
கல்லுடன் சில பூக்களையும்
என் மேல் உதிர்த்து காண்பித்தது!

Saturday, November 01, 2008

கடவுள்

கல்லை
கடவுளாக்கி காட்டியது
சில மனித கைகள் தானெனினும்
என் வாழ்வில்
வெளிச்சமிட்டு காட்டியது
கண் தான ஒப்பமிட்ட
உன் கைகள் தான் !

வார்த்தைகளை
மந்திரமாக்கி
வாழ்த்து பாடியது
சில மனித குரல்கள் தானெனினும்
என் பார்வைக்கு
வாழ்த்து அழைத்தது
மரணத்திலும்
மறவாத
உன் வாக்கு தான் !!

Saturday, September 27, 2008

ஏமாற்றம்

ஏமாறுவதில் தான்
எத்தனை சௌகர்யம்!

அதிலும்
தன்னை தானே
ஏமாற்றிக் கொள்பவர்களை
விஞ்சியவர்கள் எவருமில்லை!!


மாற்றம் எனும்
அசுரன் மாயக் குரல்
கேட்டு காவியம் படைத்திட
விருப்பமில்லாமல்
இல்லாத இலக்குமண கோடுகளை
தானே வரைந்து கொள்வது
எளிது தானே!!!

நிஜங்களை
காண விரும்பாமல்
விழித்திரையை மூடி
தூங்குவதாய்
பிறரை ஏமாற்றிய பிம்பம்
தந்தாலும்
ஏமாற்றிக் கொண்டிருப்பது
தன்னையே என்பதை உணர்!!

மூடனாக்குவது
நீயே எனினும்
அதை முறித்திட
உன்
வசதி வட்டத்தை
விட்டு வெளியே வந்து
உன்னையே நீ வெல்!!!

Sunday, June 22, 2008

ஜீரோ வாட் பல்ப்

இருளுக்கும்
பொலிவு தந்திடும்
வெளிச்ச பூவாய்
வீட்டு வாசலில்
நித்தம் பூத்திடும்
வாடா மல்லியின்
வாசம் மறைந்தது இன்று...

ஏழு குதிரை பூட்டி
எட்டாத தூரம்
சென்றிட்ட தலைவன்
வருகைக்கு காத்திருக்கும்
விசுவாச வேலை
விடைபெற்றது இன்று...

அன்னிச்சை செயலாய்
அந்தி மாலைப் பொழுதில்
நித்தம் வணங்க வைத்த
வெளிச்ச அபிஷகம்
நிறையச் செய்தது
நினைவலைகளை...

இரவை பகலாக்கும்
வித்தை கற்ற
வெளிச்ச கர்வம் காட்டாத
கரிய யோகியின்
கடமையை வணங்கி
இருள் துக்கம்
அனுஷ்டிப்பேன்
சில நாட்கள்...

Saturday, June 07, 2008

முள்ளும் மலையும்

முள்காடு குத்திடுமென
தரை இறங்காமல்
முன் நகர்ந்த
முகிலனமே!

நான் மலராகாமல்
மோக முள்ளானது
உன்னால் தான் என அறிவாயா?

நீ
முச்சி உகர்ந்திடும்
உயர் மலையின்
பனி விரல் ஸ்பரிசம்
மறைத்திடும்
வெடித்து சிதறும்
அதன் எரிமலை இறுக்கம்
என அறியாயோ?

Saturday, March 22, 2008

இடற் கல்

காலில் இடறிய
கல்லை உதைத்தேன்
வேகமோ , கோபமோ..

எதிரே விழுந்து விளித்தது
மீண்டும் உதை பட

விடாமல் வீடு வரை
விரட்ட விளைந்தேன்
அதனால்
வழி நெளிந்தது!

வீண் வேலையென
விட்டு தொடர்ந்தேன்
எதையோ இழந்த
தவிப்பு தொடர்ந்தது!


கண்ணில் பட்டது
மற்றொரு கல்.
சற்றே விலகிய
தொலைவில்...

Sunday, February 24, 2008

கர்வம்

முதுகெலும்பை நிமிர்த்தி
நேர்கொண்ட பார்வை
தரும் எனில்
தவறில்லை சற்றே
கர்வம் கொள்வாய் நீ!
அது முதுகெலும்பை முறிக்கும்
சுமையாகும் முன்..

திறமையின் சிகரமாய்
அழகூட்டும் அணியாய்
இருக்கும் எனில்
தவறில்லை சற்றே
கர்வம் கொள்வாய் நீ!
அது கண் மறைக்கும்
கடிவாளமாகும் முன்...

இயலுமென எதையும்
தொடங்கும் தைரியம்
தரும் எனில்
தவறில்லை சற்றே
கர்வம் கொள்வாய் நீ!
அது தெரியும் என்ற
அறியாமையை அடையும் முன்..

பொருந்தாத சட்டையில்
பொதிந்திருக்கும் குழந்தை அல்ல
என உன் உருவம் நீ அறிய
கர்வத்தையும் கற்று மற
அது நம்பிக்கையின் திரிபு எனில்

புலித்தோல் போர்த்த விரும்பிய
பசுவாய்...

Saturday, January 05, 2008

நாள்காட்டி

அந்திம நாள் அறிந்தே
அவதரித்த நாள்காட்டியின்
கடைசி இதழ் கிழியும் நேரம்..

எழுதப்படாத டைரியும்
நிறைவேற்றப் படாத வாக்குறுதிகளும்
நிறைந்திருக்க
நித்தம் தேய்ந்த நாள்காட்டி
நினைவுபடுத்தியது நிதர்சணத்தை...

வரப் போகும் வருடத்தின்
வாழ்த்துக் குவியல்
வலி தந்தது
வாழ்க்கையில் தொலைத்து வந்ந
நட்புக் கூட்டத்தை

விரதமிருந்து விழித்திருக்க
விளையாடிய பரமபதம்
வாழ்க்கை என
விழித்திருக்க தொடங்கினேன்

வரும் வருடத்தை வரவேற்க
மட்டுமல்ல
நினைவு சுமைகளில் சேரப் போகும்
இந்த வருடத்தை
வழியனுப்பவும் தான்

கோளப் பாதையின்
கற்பனைப் புள்ளியை
கடக்கும் இந்த தருணம்
தரட்டும்
தவறுகளை சரிசெய்ய
மீண்டும் ஒர் வாய்ப்பை..