Monday, July 26, 2004

வலைப்பூ

ஈழநாதனின் நீல நிலவு பரிசு கேள்விக்கு சிரத்தையாக கூகிளில் தேடி பதில் சொன்னதற்கு பரிசாக ( வேறென்ன காரணம் இருக்க முடியும்?) , வலைப்பூ ஆசிரியராக இந்த வாரம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.


இந்த வார பதிவுகள் வலைப்பூவில்.




Tuesday, July 20, 2004

பணம் படுத்தும் பாடு

5000 கோடி லாட்டரி அடித்திருக்கிறது திரு.லோதாவிற்கு ஒரு நான்கு வரி உயிலால். அதை எதிர்த்து 17 பிர்லாக்களும் ஒரே அணியில்.காந்தியின் நண்பரான GD பிர்லாவின் உறவு வழியில் இப்படி ஒரு குழப்பமா?.

5000 கோடி உயில் எழுத சொன்னால் இவர்கள் என்ன செய்வார்கள்...

ரஜினி : நதி நீர் இணைப்புக்கு 1 கோடி. இமயமலை to சென்னை சாலை போட 4999 கோடி.அடி வாங்கிய ரசிகர்களுக்கு பட்டை நாமம்.
ஜெயலலிதா:குருவாயூருக்கு 5000 யானை.திருவரங்கத்திற்கு பசு மாடு. மற்றதெல்லாம் உயிர் தோழிக்கு.
கருணாநிதி : உடன் பிறப்பிற்கு 1 கடிதம். தமிழுக்கு 1 கவிதை. மற்றதெல்லாம் கட்சியின் செயற்குழு, பொது குழு முடிவுப்படி இளைஞர் அணி தலைவர் , புது மந்திரிக்கு ......
அப்துல் கலாம்: கனவு காணும் பள்ளி குழந்தைகளுக்கு எல்லாம்.
விஜய்காந்த்: இலவச சைக்கிள் , சேலைக்கு ஒரு கோடி. புகைப்படம், விளம்பரம் , ரசிகர் மன்ற கூட்டங்களுக்கு மற்றதெல்லாம்.
டெண்டுல்கர்: அவுட்சுவிங் பந்து போட்டு அவுட் ஆக்காமல் , அடிக்கிற மாதிரி பவுலிங் போட்ட பவுலர்களுக்கு , ஒரு பந்திற்கு 1000 ரூபாய் வீதம்.
கமல்: (தோழியர்களுக்கு பிரித்து கொடுக்க 5000 கோடி பத்தாது என்பதால் ..)மார்லின் பிராண்டோ என் அப்பா , சிவாஜி என் அப்பா , எம்ஜியார் பெரியப்பா என்று எல்லாரையும் சொந்தம் கொண்டாடுவது போல , எந்த நடிகர் "கமல் என் அப்பா ( மாதிரி....)" என்று சொல்கிறாரோ அவருக்கு. யாருக்கும்
புரியாத மாதிரி ஆங்கில படங்களை காப்பி அடித்த படம் எடுக்க மட்டுமே இந்த பணத்தை பயன் படுத்த முடியும்

அடிப்படை கல்வி , சுகாதாரம், ஆராய்ட்சி என்று எத்தனையோ துறைகளுக்கு 50000000000.00 ( கோடிக்கு எத்தனை சுழி என்று மறந்து விட்டது)  ரூபாய் எவ்வளவோ உதவும். அத்தனையையும் விட்டு விட்டு லட்டு மாதிரி ஒருவருக்கு ( அந்த ஒருவர் நானாக இல்லாத பட்சத்தில்) 5000 கோடி அதிர்ஷ்டம் நியாயமா?
 
சொக்கா... ஒன்றா இரண்டா 5000 கோடியாச்சே?

ஆமாம் , பிர்லாக்களில் ஒரு பிர்லாவிற்கு ஏன் குமாரமங்கலம் என்று பெயர் வைத்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா? 
 

Wednesday, July 14, 2004

வெடிக்காத வெடி

பட்டாசு வெடிக்கும்
என் ஆசை
பட்டுச் சேலை கட்டிய அம்மாவிற்கு
ஏன் புரிவதில்லை?

பட்டுக் கரங்கள்
நெருப்பு பட்டு விடுமென்று
வேடிக்கை பார்க்கச் சொல்லி
வெடிக்க சொல்வது
வேலைக் காரர்களை...

வெடிப்பதை விட
விழும் குப்பையிலும்
வேடிக்கை பார்க்கும் கூட்டத்திலும் தான்
இவர்களின் பெருமிதம்!

வெடிப்ப்து நானில்லை என்று
தெரிந்து வெடிக்காமல்
நீ குப்பையில் ஒதுங்குவது
குப்பையை கிளறும்
சிறுவர்கள் பின்னாளில்
வெடித்து மகிழவோ?

சிவகாசி சிறார்களின்
கைபட்டதாலா உனக்கு
சிறுவர்களின் மனம் புரிந்தது?

Monday, July 12, 2004

கோதண்டராம பிரசாத்

சென்ற வாரம் மறைந்து விட்ட எங்கள் கல்லூரி நண்பர் கோதண்டராம பிரசாத்தை பற்றி சுந்தர்ராஜனின் பதிவு வந்து விட்டது.இந்த பதிவு என்னுடைய நினைவஞ்சலி.

ராகிங்கிற்கு பயந்தும் , கடாமுடா ஆங்கிலத்திற்கு பயந்தும் , தமிழ் மீடியத்தில் 12 வருடம் பயின்று விட்டு , தலையில் தண்ணீர் தெளிக்கப் பட்டு வெடவெடவென்று ஆடும் பலிகிடா போல,
மஞ்சள் பை புத்தக/சாப்பாட்டு மூட்டையை தூக்கிக் கொண்டு , 5 நிமிடம் தாமதமாக முதல் நாள் பொறியியல் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன். இந்த உலகையே (கல்லூரியையே) கட்டிக் காக்க அவதாரம் எடுத்ததாக நினைத்து,நேரம் கிடைக்கும் போதெல்லாம் விடாது அறிவுரை செய்யும் , கடமையுடன் கணிதம் கற்றுத் தரும் , தமிழில் கையொப்பம் இடும் , தி.வீ யின்
வகுப்பு அது. ஏளனப் பார்வையுடன், மேலும் 5 நிமிடம் வெளியே நிற்க வைத்து , நேரம் தவறாமை பற்றி நீண்ட விளக்கம் கொடுத்து மற்ற மாணவர்களெல்லாம் சாமர்த்தியமாக தவிர்த்த முதல் பெஞ்சில் வந்து அமரச் சொன்னார்.அங்கே அருகாமையில் தோழமையுடன் KRP என்று அழைக்கப் படும் , அன்பே உருவான கோதண்டராம பிரசாத்.ஆரத்திற்கும், விட்டத்திற்கும் ஆங்கில வார்த்தைகள் தேடும் போது ஆபத்பாந்தவனாய் உதவியவன். பயம் நீங்கி , மெல்ல நாமும் முதல் நிலையெடுக்கலாம் என்ற நம்பிக்கையை வளர்த்தவன்.

முதல் தேர்வில் , இயற்பியலில் அதிக மதிப்பெண் பெற்ற வரிசையில் அவனையும் , என்னையும் ஒரு முறை வகுப்பெடுக்க சொன்னார் திரு.ஹரிஹரன். நானோ பின்னாளில் படிக்கப் போகிற , பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு எளிய தலைப்பை தேர்ந்தெடுத்து , மேடை பயம் காரணமாக , பேந்த பேந்த முழித்துக் கொண்டு , குரல் நடுங்கி , பிரசவ வேதனையுடன் கடமையென அதை செய்து முடித்தேன். முற்றிலும் மாறாக, பாட சம்பந்தமில்லாத வானியலைப் பற்றி , கொடுக்கப்பட்ட நேரத்தை விடவும் அதிகமாக அதி அற்புதமாக பேசி வகுப்பிலுள்ளோர் அத்தனை பேரயும் அசர வைத்தவன்.பாடப் புத்தகம் தவிர மற்ற பொருளிலும் விருப்பத்துடன் படிக்கலாம் என்று என் அறிவுக் கண்ணை திறந்த நிகழ்ச்சி இது.

பொறியியல் கல்லூரியிம் அத்தியாவசிய தேவை காரணமாக எனக்கு கிடைத்த விலை உயர்ந்த சொத்து கால்குலேட்டர் தான். இயற்பியல் வகுப்பில் ,கால்குலேட்டரில் பெருமையுடன் கணக்கு
போடும் போது , அதை விட வேகமாக கால்குலேட்டர் இல்லாமல் கணக்கு போட்டு , என்னை எத்தனையோ முறை அசர வைத்திருக்கிறான் KRP.

அவன் ஒரு வளர்ந்து விட்ட குழந்தை போல கள்ளம் கபடமில்லாமல் , அதி வேகமாக பேசக் கூடியவன்.அவன் பேசிய மொழி தமிழா , ஆங்கிலமா என்று பல முறை குழம்பியது கூட உண்டு.
ராகிங்கில் , நாங்களெல்லாம் பதில் சொல்ல கூச்சப்படும் பல கேள்விகளிக்கு , யாருமே எதிர்பார்த்திடாத , குபீர் சிரிப்பை வரவழைக்கும் குழந்தைதனமான அவனது நீதி நெறி பதில்கள் பிரசித்தம்.

இரண்டாமாண்டில் , நான் மின்னியலும் , KRP மின்னணுவியலும் எடுக்க , எங்கள் நட்பு மெல்ல தேய்ந்து , வெறும் ஹலோ சொல்லும் அளவிற்கு சென்றது

கடைசியாக பார்த்தது , பெங்களூர் இரயில்வே நிலையத்தில்.சூரத்தில் பிளேக் நோய் பரவிக் கொண்டிருந்த போது, அதை பொருட்படுத்தாமல் வேலைக்கு சூரத் சென்ற நண்பன் முத்தையாவை
வழியனுப்ப சென்ற போது,அங்கே அப்பொழுது MBA முடித்து விட்டு , அனைவரின் கனவிடமான Infosys-ல் வேலைக்கு சேர்ந்திருந்த KRP அதே உற்சாகத்துடன் வந்திருந்தான்.

பல வருடங்களுக்குப் பிறகு , ஏதோ ஒரு உந்துதலில் , நான்கு வருட சிங்கப்பூர் வாழ்க்கையை உதறி தள்ளி விட்டு, மனைவியையும் குழந்தையையும் இந்தியா அனுப்பி விட்டு ,
அமெரிக்க வந்த போதும், காரில்லாமல் , Driving license/Credit Card இல்லாமல் , நிரந்தர வேலையில்லாமல் , ஏனடா அமெரிக்கா வந்தோம் என்று அனைவரும் நொந்து கொள்ளும் ஆரம்ப கால கட்டத்தில் , நம்பிக்கையை ஊட்டியவர்களில் ஒருவன் "மீண்டும்" KRP. Yahoo groupsல் நண்பர்களைப் பற்றி சுவை பட அவ்வப் பொழது எழுதி வந்த KRP யின் முடிவும் , அதே Yahoo groups-ல் வந்த போது ( இப்பொழுதும் ) சற்றே பிரமை போன்றே உள்ளது.

"தொடர்ந்த உற்சாகம் அறிவின் மிகத் தெளிவான அடையாளம்" என்ற பொன்மொழி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதற்கு KRP தான் சிறந்த உதாரணம்.

Wednesday, July 07, 2004

லு டாப்ஸ்

லு டாப்ஸ் (Lou Dobbs) சிஎன்என்னில் நேற்றைய "Moneyline" / இன்றைய "Lou Dobbs
Tonight" நிகழ்ச்சியை திறம்பட நடத்துபவர். 2001-ல் சிஎன்எனின் "Moneyline" நிகழ்ச்சிக்கு திரும்ப பொறுப்பெடுத்த போது வணிகத்தை பற்றி அதிகம் பேசாமல் , அரசியல்/ பொது நிகழ்ச்சிகளை பற்றி , அதிகம் பேசுகிறாரே என்று நினைத்த போது , அதன் பெயரையே "Lou Dobbs Tonight" என்று மாற்றி விட்டார்கள்.

சமீப காலமாக "Exporting America" அவரது நிகழ்ச்சியில் நீக்கமற நிறைந்து விட்ட ஒரு அங்கமாகி விட்டது.சம நிலைப்பாடை எடுக்காமல் , சரியோ/தவறோ அவரது ஒரு நிலைப்பாடான கருத்தை திணிக்கிறாரே (மைக்கேல் மூர் போல) என்று நினைத்து கோபமடைந்ததுண்டு. ஆனால் அவர் சொல்வதிலும் சற்று நியாயம் இருப்பது புரிந்தது.

பொதுவாக நிகழ்ச்சியை வழங்குபவர்கள் , வாதம்/எதிர்வாதம் செய்ய ஒரு கருத்தின் இரு புறம் உள்ளவர்களை அழைத்து , விவாத்தை நடுநிலை தவறாமல் நடத்தி செல்வார்கள். இல்லாவிட்டால் "Meet the Press" Tim Russert மாதிரி ஒருவரை அழைத்து , அவரது நிலைப்பாட்டிற்கு எதிர் நிலையில் இருந்து கேள்விகள் கேட்டு உண்மையான பதிலை வரவேற்பார்கள். ரபி பெர்னார்ட் கூட இது மாதிரி சிறப்பாக செய்து வந்தார் ( அம்மாவிடம் பேட்டி காணும் போது காட்டிய பவ்யம் தவிர).

மைக்கேல் மூர் கருத்தை ஆதரிக்க முடிந்த நம்மால் , ஏன் லு டாப்ஸ் சொல்வதை ஆதரிக்க முடியவில்லை?.(ஜீன்களின் வேலையாக இருக்குமோ?)

குப்பனும் , சுப்பனும் செய்கிறான் என்று , வேலையை கண்மூடித்தனமாக ஏற்றுமதி செய்யாமல் , அவரவர் தொழிலின் தேவைக்கேற்ப செய்ய வேண்டும். தொழிலாளர் , சுற்றுச் சூழல் சட்ட திட்டங்களும் ஏறத்தாழ சமமாக இருக்க வேண்டும். அதற்கேற்ப "Most Favored Nation" / Tax System இருக்க வேண்டும்.அப்பொழுது தான் "Global Work Force" என்ற பதத்திற்கு உண்மையான அர்த்தம் இருக்கும்.

Sunday, July 04, 2004

மரண தண்டனை ?

மரண தண்டனை சரியா , தவறா என்ற விவாதம் பற்றியது அல்ல இந்த பதிவு.கல்கத்தா சிறுமியின் கொலை வழக்கு குற்றவாளியின் கருணை மனு பற்றியும், அதைத் தொடர்ந்து விருமாண்டி மாதிரி மரண தண்டனை தேவையா இல்லையா என்று விவாதித்தும் பல பதிவுகள் வந்து விட்டது.அதனால் அதைப் பற்றி இங்கே விவாதிக்கவில்லை.

கருணை மனுவை பரிசீலிக்கும் ஜனாதிபதியின் மன நிலை எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். ஒரு உயிர் குறித்து முடிவு எடுப்பது எவ்வளவு கடினமான விஷயம். இது போல் எண்ணற்ற வழக்குகளில் தண்டனை வழங்கும் நீதிபதிகள் ஒவ்வொரு முடிவு எடுக்கும் போதும் எவ்வளவு கஷ்டப் பட வேண்டியிருக்கும்.

சிறு விஷயங்களில் கூட முடிவெடுக்க திணறும் ,"எண்ணித் துணிக கருமம்" என்ற வள்ளுவரின் வாக்கை என்றென்றும் எண்ணி முடிவெடுத்தாலும், பின்னாளில் தவறான முடிவென்று வருந்தும் என்னைப் போன்ற எண்ணற்றவர்களைக் கொண்ட சமுதாயத்தில் இருந்து தான் இத்தகைய நீதிமான்கள் தோன்ற வேண்டியுள்ளது.

குற்றம் புரிந்தவர் யார் என்று சரியாக கண்டு பிடிப்பதும், குற்றத்தின் அளவிற்கேற்ப தண்டனை வழங்குவதும் மிகக் கடிய பணி. அதை தொண்டென புரியும் , நீதி தவறாத , தண்டனை கொடுக்க அஞ்சாத, சரியான முடிவெடுக்கும் ,கடின சித்தம் படைத்த நீதிமான்கள் , மானிட சமுதாயம் சரியான வழியில் என்றும் சென்றிட மிக மிக தேவை.