சென்ற வாரம் மறைந்து விட்ட எங்கள் கல்லூரி நண்பர் கோதண்டராம பிரசாத்தை பற்றி சுந்தர்ராஜனின் பதிவு வந்து விட்டது.இந்த பதிவு என்னுடைய நினைவஞ்சலி.
ராகிங்கிற்கு பயந்தும் , கடாமுடா ஆங்கிலத்திற்கு பயந்தும் , தமிழ் மீடியத்தில் 12 வருடம் பயின்று விட்டு , தலையில் தண்ணீர் தெளிக்கப் பட்டு வெடவெடவென்று ஆடும் பலிகிடா போல,
மஞ்சள் பை புத்தக/சாப்பாட்டு மூட்டையை தூக்கிக் கொண்டு , 5 நிமிடம் தாமதமாக முதல் நாள் பொறியியல் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன். இந்த உலகையே (கல்லூரியையே) கட்டிக் காக்க அவதாரம் எடுத்ததாக நினைத்து,நேரம் கிடைக்கும் போதெல்லாம் விடாது அறிவுரை செய்யும் , கடமையுடன் கணிதம் கற்றுத் தரும் , தமிழில் கையொப்பம் இடும் , தி.வீ யின்
வகுப்பு அது. ஏளனப் பார்வையுடன், மேலும் 5 நிமிடம் வெளியே நிற்க வைத்து , நேரம் தவறாமை பற்றி நீண்ட விளக்கம் கொடுத்து மற்ற மாணவர்களெல்லாம் சாமர்த்தியமாக தவிர்த்த முதல் பெஞ்சில் வந்து அமரச் சொன்னார்.அங்கே அருகாமையில் தோழமையுடன் KRP என்று அழைக்கப் படும் , அன்பே உருவான கோதண்டராம பிரசாத்.ஆரத்திற்கும், விட்டத்திற்கும் ஆங்கில வார்த்தைகள் தேடும் போது ஆபத்பாந்தவனாய் உதவியவன். பயம் நீங்கி , மெல்ல நாமும் முதல் நிலையெடுக்கலாம் என்ற நம்பிக்கையை வளர்த்தவன்.
முதல் தேர்வில் , இயற்பியலில் அதிக மதிப்பெண் பெற்ற வரிசையில் அவனையும் , என்னையும் ஒரு முறை வகுப்பெடுக்க சொன்னார் திரு.ஹரிஹரன். நானோ பின்னாளில் படிக்கப் போகிற , பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு எளிய தலைப்பை தேர்ந்தெடுத்து , மேடை பயம் காரணமாக , பேந்த பேந்த முழித்துக் கொண்டு , குரல் நடுங்கி , பிரசவ வேதனையுடன் கடமையென அதை செய்து முடித்தேன். முற்றிலும் மாறாக, பாட சம்பந்தமில்லாத வானியலைப் பற்றி , கொடுக்கப்பட்ட நேரத்தை விடவும் அதிகமாக அதி அற்புதமாக பேசி வகுப்பிலுள்ளோர் அத்தனை பேரயும் அசர வைத்தவன்.பாடப் புத்தகம் தவிர மற்ற பொருளிலும் விருப்பத்துடன் படிக்கலாம் என்று என் அறிவுக் கண்ணை திறந்த நிகழ்ச்சி இது.
பொறியியல் கல்லூரியிம் அத்தியாவசிய தேவை காரணமாக எனக்கு கிடைத்த விலை உயர்ந்த சொத்து கால்குலேட்டர் தான். இயற்பியல் வகுப்பில் ,கால்குலேட்டரில் பெருமையுடன் கணக்கு
போடும் போது , அதை விட வேகமாக கால்குலேட்டர் இல்லாமல் கணக்கு போட்டு , என்னை எத்தனையோ முறை அசர வைத்திருக்கிறான் KRP.
அவன் ஒரு வளர்ந்து விட்ட குழந்தை போல கள்ளம் கபடமில்லாமல் , அதி வேகமாக பேசக் கூடியவன்.அவன் பேசிய மொழி தமிழா , ஆங்கிலமா என்று பல முறை குழம்பியது கூட உண்டு.
ராகிங்கில் , நாங்களெல்லாம் பதில் சொல்ல கூச்சப்படும் பல கேள்விகளிக்கு , யாருமே எதிர்பார்த்திடாத , குபீர் சிரிப்பை வரவழைக்கும் குழந்தைதனமான அவனது நீதி நெறி பதில்கள் பிரசித்தம்.
இரண்டாமாண்டில் , நான் மின்னியலும் , KRP மின்னணுவியலும் எடுக்க , எங்கள் நட்பு மெல்ல தேய்ந்து , வெறும் ஹலோ சொல்லும் அளவிற்கு சென்றது
கடைசியாக பார்த்தது , பெங்களூர் இரயில்வே நிலையத்தில்.சூரத்தில் பிளேக் நோய் பரவிக் கொண்டிருந்த போது, அதை பொருட்படுத்தாமல் வேலைக்கு சூரத் சென்ற நண்பன் முத்தையாவை
வழியனுப்ப சென்ற போது,அங்கே அப்பொழுது MBA முடித்து விட்டு , அனைவரின் கனவிடமான Infosys-ல் வேலைக்கு சேர்ந்திருந்த KRP அதே உற்சாகத்துடன் வந்திருந்தான்.
பல வருடங்களுக்குப் பிறகு , ஏதோ ஒரு உந்துதலில் , நான்கு வருட சிங்கப்பூர் வாழ்க்கையை உதறி தள்ளி விட்டு, மனைவியையும் குழந்தையையும் இந்தியா அனுப்பி விட்டு ,
அமெரிக்க வந்த போதும், காரில்லாமல் , Driving license/Credit Card இல்லாமல் , நிரந்தர வேலையில்லாமல் , ஏனடா அமெரிக்கா வந்தோம் என்று அனைவரும் நொந்து கொள்ளும் ஆரம்ப கால கட்டத்தில் , நம்பிக்கையை ஊட்டியவர்களில் ஒருவன் "மீண்டும்" KRP. Yahoo groupsல் நண்பர்களைப் பற்றி சுவை பட அவ்வப் பொழது எழுதி வந்த KRP யின் முடிவும் , அதே Yahoo groups-ல் வந்த போது ( இப்பொழுதும் ) சற்றே பிரமை போன்றே உள்ளது.
"தொடர்ந்த உற்சாகம் அறிவின் மிகத் தெளிவான அடையாளம்" என்ற பொன்மொழி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதற்கு KRP தான் சிறந்த உதாரணம்.
Monday, July 12, 2004
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
எனக்கு இன்னமும் முழுதாக நம்பிக்கையே வரவில்லை.என் வீட்டுக்குள்ளெயே அவனை , அதே கள்ளமில்லா சிரிப்புடன் பார்ப்பது போன்ற பிரமை. கடவுள் அவன் குழந்தைக்கும், மனைவிக்கும் நல்ல வாழ்க்கையை வழங்கவேண்டி பிரார்திப்போம்.
வேறு என்ன ஏலும் நம்மால்..??
"தொடர்ந்த உற்சாகம் அறிவின் மிகத் தெளிவான அடையாளம்" மெய்யான விஷயம்தானப்பா!
Very sad :(
Post a Comment