Wednesday, June 30, 2004

பாரத் ரத்னா

இந்த முறையும் பாரத் ரத்னா விருது அறிவிக்க(வழங்க) படவில்லை. கொஞ்ச காலம் "லேட்டா லேட்டானவர்களுக்கே" வழங்கப் பட்டு வந்தது. அதற்கு பின் கொஞ்சம் காலா காலத்தில் வந்தது.இப்ப மறுபடியும் மக்கர் பண்ண ஆரம்பித்து விட்டது.மற்ற எல்லா "பத்ம" விருதுகளுக்கும் எளிதாக தேர்வு செய்ய முடியும் போது (சுலுவா ஆள் கிடைக்கும் போது ), இதற்கு மட்டும் என்ன கஷ்டம்?.எல்லா விருதுகளுடன் இதனையும் அறிவித்தால் ,இதற்கான மதிப்பு குறைந்து விடுமோ?.நோபல் பரிசு மாதிரி வருடா வருடம் , கண்டிப்பாக "பாரத ரத்னா" விருது வழங்க எப்ப வழி பிறக்குமோ?.இணையத்தில் ஒரு பெட்டிஷன் போட்டு , ஓட்டு வேட்டை ஆரம்பிக்கலாமா? ( தேசபக்தி மிக்கவர்கள் , கடமையாக எப்பொழுதோ ஹலோ சொன்னவர்களுக்கு கூட forward பண்ண ஆரம்பித்து விடுவார்கள்). அடுத்த பாரத் ரத்னா யாருக்கு கிடைக்கும் என்பது எனக்கு நல்லா தெரியுது.உங்களுக்கு?

Tuesday, June 29, 2004

மாட்டி ஸ்டெபனெக் ( MATTIE STEPANEK )

Muscular Dystrophy Association-ன் நல்லெண்ண தூதுவராக திகழ்ந்த, அற்புதமான கவிதைகள் எழுதிய 13 வயது மாட்டி ஸ்டெபனெக் ( MATTIE STEPANEK ) சென்ற வாரம் மரணமடைந்த செய்தி என்னை கலங்க வைத்ததுடன் , மனித வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை உணர்த்தியது.மனித சமுதாயத்தின் மூட நம்பிக்கையின் மீதான கோபத்தையும் எனக்கு இந்த சம்பவம் ஏற்படுத்தியது.

சிஎன்எனின் லேரி கிங் நிகழ்ச்சியில் பார்த்ததினால் எனக்கு MATTIE-யின் கதை தெரியும். பிறந்தவுடன் இறந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு உடல் நலக் குறைவுடன் பிறந்த இந்த குழந்தை , மரணத்தை எதிர்பார்த்தே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தது. 13 வயதிற்குள் எழுதிய கவிதைகளின் ஆழமும், வாழ்க்கையை எதிர் கொண்ட முறையும் உலகம் முழுவதும் பிரபல மடைய வைத்தன.Muscular Dystrophy பற்றி இணையத்தில் நான் படித்திருக்கிறேன்.

Muscular Dystrophy மற்றும் அது மாதிரியான தசைகளை பாதிக்கும் , நரம்பு மண்டலத்தை பாதிக்கும் குறைகள் பரம்பரையாக வரக் கூடியவை என்பதும் , ஆண் குழந்தைகளை அதிகம்
பாதிக்கும் என்பதும் , இவற்றை குணப்படுத்த மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை என்பதும் கொடுமையான விஷயங்கள். நம்ம ஊரில் ஊழ்வினை என்றும், செய்வினை என்றும் இத்தகைய
நோய்கள் கண்டு கொள்ளப் படுவதில்லை. stem cells research இது போன்ற நோயில் வாடும் எண்ணற்ற குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும். ஆனால் , stem cell ஆராய்dசியின் சில வகைகள் தடை செய்யப் பட்டிருப்பதும் , மேற்கத்திய நாடுகளில் இதற்கு காணப்படும் எதிர்ப்பும் , மருத்துவ முன்னேற்றத்தை தாமதிக்க செய்கிறது. அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சி , மனித சமுதாயத்திற்கு எதிராக அமைந்து விடும் என்பது இவர்களின் மூட நம்பிக்கை. ஆயிரம் கை கொண்டு மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது.

மேலும் தகவலுக்கு http://www.mdausa.org/mattie/remember.cfm

Monday, June 28, 2004

களைப்பு

குறுக்கே போகும் பூனையையும்
காணவில்லை.

சகுனம் பார்த்து வழியனுப்பும் அம்மாவும்
வரவில்லை.

வேலை தேடி களைத்தது
நான் மட்டும் இல்லை...


கவிதை குறிப்பு : 21-30 வயதில் ctrl+c, ctrl+v வேலை பார்ப்பவர்களுக்கு இந்த களைப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Thursday, June 24, 2004

வட்டி

கூட்டலில் ஆரம்பித்து
பெருக்கலில் முடிந்து
மகிழ்ச்சியை கழித்து
கஷ்டத்தை வகுத்த
விசித்திர கணக்கு
கடனுக்கு கட்டிய
வட்டி

Monday, June 21, 2004

விண்கப்பல்ஒன்று

மைக்ரோசாப்ட் நிறுவனர் பால் அலெனின் பண உதவியுடன் செய்யப்பட்ட விண்கப்பல்ஒன்று (SpaceShipOne) வெற்றிகரமாக பறந்து சசாதனை புரிந்துள்ளது. 10 வருட கடின் உழைப்பு தந்த சாதனை இது.
3 நபர்களை பத்திரமாக பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் அனுப்பி உயிருடன் மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து சேர்க்கும் ( 2 வாரத்திற்குள் , அதே விண்கலத்தில் அந்த சாதனையை திரும்ப செய்ய வேண்டும்) விண்கலத்தை தாயரிக்கும் நிறுவனத்திற்கு

காத்திருக்கிறது 10 மில்லியன் பரிசுத் தொகை. இந்த முயற்சி அந்த பரிசுத் தொகையை குறி வைத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுப் போட்டி , ஆராய்ச்சிகளை ஊக்குவித்து, எல்லாருக்கும் வாண்சுற்றுலா கட்டுபிடியாகும்படி செய்வதே அதன் நோக்கம்.
2020 வருடத்தில் 100,000$க்கு டிக்கெட் கிடைக்கும் என்கிறார்கள். Priceline-ல் முயற்சி செய்தால் கொஞ்சம் cheap-பாக கிடைக்கலாம்.

நம்ம இதிகாசங்களில் வருகின்ற விமான வகைகளையும் , அஸ்திரங்களையும் (missile) பார்க்கும் போது ,எனக்கென்னவோ இந்தியாவில் அந்த காலத்திலேயே இத்தகைய சாதனையுல்லாம் செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.
கொஞ்சம் தொல்பொருள் ஆராய்ச்சி செய்தால் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கலாம் என்று நம்புகிறேன்.கிடைத்தால் 10மில்லியன் நாமும் claim- பண்ணலாம்.
"உலகை முதலில் சுற்றி வந்தது யார் என்று அறிவியல் பரீட்சையில் கேட்டால் , ஏதாவது வாய்க்குள் நுளையாத பெயரை எழுதாமல் , முருகன் என்று எழுதுணும்டா " என்று எங்கள் தமிழாசிரியர் கம்பீரமாக முழங்குவார்.
அந்த காலத்திலேயே நாம எல்லாம் கண்டு பிடுச்சிட்டோம். எதையும் முறையாய் எழுதி வைக்காமல், மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் நம்ம சமுதாயத்தின் அரிய கண்டுபிடுப்புள் எல்லாம் அழிந்து விட்டது என்று வருத்தப்படுவார்.
"அர்த்தமில்லாமல் நாம செய்கிற பல விஷயங்களுக்கு ரொம்ம மெனக்கெட்டு அர்த்தம் கண்டிபிடித்து அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன் மாதிரி , அறிவியல்பூர்வமான இந்திய வரலாறு என்று நீங்கள் யாரவது எழுதணும்டா" என்று வேண்டுவார்.
கம்பராமாயணத்தில் , இராவணன் சீதையை தூக்கிச் செல்லும் போது, விமானம் ஓடிச்சென்று மேல் எழும்பியது என்று takeoff பற்றி விவரித்திருக்கிறார் என்று ஒருமுறை நண்பர் ஒருவர் கூட சொன்னார் .
அதை படிக்காமல், சென்ற நூற்றாண்டில் விமானம் கண்டு பிடிக்க முயற்சி செய்தவர்களெல்லாம் , மலையிலிருந்து குதித்து விமானத்தை பறக்க விட முயற்சித்தார்கள். பல முயற்திகளிக்கு பின் தான் runway/takeoff மகத்துவம் புரிந்தது அவர்களுக்கு என்று

சொன்னார். எனக்கு கம்பராமாயணம் படிக்கும் அளவுக்கு புலமையில்லாததால் அவர் சொன்னதை சரி பார்க்கவில்லை.ஆனால் அவர் சொன்ன விஷயம் என் பழைய நம்பிக்கையை வளர்த்தது. அந்த நம்பிக்கையில் நானும் , என்னை போல் நம்பும் நண்பர் ஒருவரும்

செய்த தேடலில் ( வேறெங்கே , இணையத்தில் தான் அந்த தேடல்) கிடைத்த தகவல்களை பின்னொரு நாளில் பதிகிறேன்.


இப்படி பழங்கதை பேசி , தொல்பொருள் ஆராய்ட்சி செய்து தான் இத்தகைய பரிசுகளை வாங்க எண்ண முடியும் என்ற காலமெல்லாம் கரையேறி , உலக அளவிலான போட்டிகளில் நம்மவர்கள் கலந்து கொள்வதை படிக்குக் காலம் விரைவில் வரும் ( வந்து விட்டது என்று சிலர் சொல்வது கேட்கிறது).

Friday, June 18, 2004

அசைவம் பாதி , சைவம் பாதி (?!!)

சில நாட்களுக்கு முன்பு ஒரு குழுமத்தில் ஒருவர்
mms://a805.v9135e.c9135.g.vm.akamaistream.net/7/805/9135/0009/peta.download.akamai.com/9135/skin-trade-ili_med.wmv என்ற link அனுப்பி , மிருகங்களை தின்பவர்கள் கொடியவர்கள் , நாகரீகமற்றவர்கள் என்ற சர்ச்சையை ஆரம்பித்து வைத்தார் .

"தாவரங்களுக்கும் உயிர் உண்டு , அதை கொல்வது மிருகங்களை கொல்வதை விட மிகப் பெரிய பாவம். விலங்குகளாவது சில சமயம் தப்பித்து சென்றுவிடும். பாவம் , இந்த தாவரங்கள். உங்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்க கூட முடியாது.
சைவமாக இருப்பது, உயிர்களின் மேலுள்ள் அன்பினால் என்பதெல்லாம் சும்மா பம்மாத்து.உங்களின் உணவு பழக்கம் வேறு, அசைவர்களின் உணவு பழக்கம் வேறு அவ்வளவு தான். ஒன்றை விட மற்றொன்று சிறந்தது அல்ல"
என்று காலங் காலமாய் சொல்லப் பட்டு வரும் மாற்றுக் கருத்தை அனுப்பினார் மற்றொருவர். அவ்வளவு தான், அதன்பின் வந்த நூற்றுக்கணக்கான ஆதரவு/எதிர்ப்பு மெயில்களை கொல்வது எனக்கு அன்றைய வேலையாகி விட்டது.

விவசாயம் செய்து சாப்பிட , 10000 ஆண்டுகளாகத் தான் மனிதர்களுக்கு தெரியும். அதற்கு முன் மாமிசம் தான். இடையில் வந்த இந்த விவசாயம் செய்து சாப்பிடுவதால் தான் இவ்வளவு உடல் நலக் குறைபுகளுக்கும் காரணம். நம் உடல் கூற்றிற்கு மாமிசம் தான் உகந்தது என்று முன்பு வேலை செய்த நிறுவனத்தின் அதிபர் சொன்னது ஞாபகம் வந்தது. அட்கின் டயட்-டும் இதை ஒத்து வருகிறது.

To become vegetarian is to step into the stream which leads to nirvana.
--Buddha

One is dearest to God who has no enemies among the living beings, who is nonviolent to all creatures.
--Bhagavad Gita

"Behind every beautiful fur, there is a story. It is a bloody, barbaric story. "
--Mary Tyler Moore

Animals are my friends-and I don't eat my friends.
--George Bernard

A human can be healthy without killing animals for food. Therefore if he eats meat he participates in taking animal life merely for the sake of his appetite.
--Leo Tolstoy

Nothing will benefit human health and increase chances for survival of life on Earth as much as the evolution to a vegetarian diet.
--Albert Einstein

என்று பெரிய மனிதர்களை சாட்சிக்கு இழுத்தார் ஒருவர். ஏனோ தெரியவில்லை , காந்தியை அவர் மறந்து விட்டார்.



How can you eat anything with eyes!
--Will Kellogg

என்ற வாசகத்தை படித்த போது, ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.சில வருடங்களுக்கு முன்பு , அலுவலகத்தில் புதிய (சைவ) நண்பரிடம் நான் சாப்பிட்ட ஊரும்,நடக்கும் , மிதக்கும் , நீந்தும்,பறக்கும் வகையறாக்களைப் பற்றி பீற்றிக் கொண்ட போது, என் அம்மா செய்யும் ஆட்டின் தலைக் கறியின் சுவையப் பற்றியும் சொன்னேன். தலையின் பல பாகங்களை பற்றி கேட்டு , இதைக் கூடவா சாப்பிடுவீர்கள் என்று வேதனை கலந்த ஆச்சரியத்துடன் கேட்டார். நான் எல்லாவற்றிற்கும் ஆமாம் போட , .அதைக் கேட்டு வாந்தி எடுக்காத குறையாம் ஓடிய அவர், தன் மனைவியிடமும் அதை சொல்லி வைத்திருக்கிறார். அதிலிருந்து , அவர்கள் இருவரும் என்னை பார்க்கும் பொழுதெல்லாம் , அசுரனைப் பார்பது போல்தான் பார்ப்பார்கள். (எனக்கே இதை எழுதும் போது/அவர்கள் நிலையில் இருந்து கற்பனை செய்து பார்க்கும் போது, சங்கடமாகத் தான் இருக்கிறது. ஆனால் உண்மையை எழுத வேண்டியிருப்பதால் , இதை எழுதுகிறேன்.)

ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு முறை , சைவமாக மாறி விடுவது என்று முடிவெடுத்து அதை என் அம்மாவிடம் சொன்னேன். மறு நாள் காலையில் , கடவுள் கனவில் வந்து , படையல் ( முன்னோர்களுக்கும் / தெய்வங்களுக்கும் அசைவ படையல் படைப்பது கிராமத்தில் எங்கள் குடும்ப வழக்கம்) சாமி பிரசாதம் , அதை சாப்பிட மாட்டேன் என்று சொல்லக் கூடாது என்று சொன்னதாகவும் , அதனால் அசைவம் சாப்பிட்டுத் தானாக வேண்டும் என்று சொன்னார்.தாய் சொல்லை தட்டாமல் ( அந்த ஒரு விஷயத்திலாவது) என் அசைவ துறவறத்தை அன்றே கை விட்டு விட்டேன்.அதன்பின் அசைவ பிரியனாகி விட்டேன்.நான் வருகிறேன் என்றால் , உறவினர் இல்லங்களில் சிறப்பு அசைவ விருந்து உறுதி.எந்த ஊருக்கு சென்றாலும், நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் உணவகம் சென்று ஒரு வெட்டு வெட்டி விடுவேன்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் காந்தியின் சத்திய சோதனையை மீண்டும் ஓரு முறை படித்தேன். வாழ்க்கையில் அவர் எடுத்த பல்வேறு சோதனை முயற்சிகளை படித்த போது , மீண்டும் ஒரு உத்வேகம்/ஞானோதயம் வந்தது.
வாழ்க்கையில் பாதி நாட்கள் அசைவப் பிரியனாக இருந்தாகி விட்டது. மற்றொரு பாதியில் ( பாதி ,என்பது என் கணக்கின் படி. மேலே உள்ளவனின் கணக்கு என்னவோ?.) முழுச் சைவமானால் என்ன என்று?.
கடந்த 2 வருடமாக கஷ்டப் பட்டு , அசைவம் தவிர்த்து வருகிறேன்.அமெரிக்கா வந்து , சைவமானேன் என்றால் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். மருத்துவர் சொல்லியிருப்பார் அல்லது எடையை குறைக்கும் முயற்சி என்பது பலரின் எண்ணம்.

உயிர்களின் மீதான பாச அளவு கூடவோ , குறையவோ இல்லையென்றாலும் , Mcdonalds/KFC என்று திரிந்து வந்த நான் , இப்பொழுதெல்லாம் Pizza Hut நோக்கி செல்ல வேண்டியிருக்கிறது.இது போல போல இதுவரை கவனம் செலுத்தாத பல விஷயங்கள் இப்பொழுது கண்ணிற்கு தெரிய வருகிறது.

மகாத்மா கூட இன்று அகிம்சையாக தெரிவது , நாளை ஹிம்சையாக தெரியலாம் என்று சொன்னார் என்று ரஜினி (தலைவா !!!!) ராம்கியின் பதிவில் படித்தேன். அது தாவரங்களுக்கு பொருந்தும்.
பின்னாளில் தாவரக்களின் வாழ்க்கையைப் பற்றிய நம் அறிவு பெருகும் போது, அதை சாப்பிடுவது கூட தவறாகப் படலாம்.

குற்ற உணவிற்காக குறைக்கா விட்டாலும் , மாமிசமோ/காய்கறியோ சாப்பிடுவதை குறைத்தால் அனைவருக்கும் நன்று. "பேசினாலே காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் இறந்து விடும். அதற்காகத் தான் ஜெயின் மத குருக்கள் , வாயில் துணியை கட்டிக் கொள்கின்றார்கள் என்கிறார்கள்.எனவே பேச்சையும் குறையுங்கள்" என்று ஒரு குரல் கேட்கிறது.

எது சரி?. எது தவறு ?ஒன்னுமே புரியலே இந்த உலகத்திலே..
அதனால தான் அதில் பாதி , இதில் பாதி (!?!)

Tuesday, June 15, 2004

ஈர விறகு

நிழல் தரும்வரை
நீர் ஊற்றியவன்
நிலம் வீழ்ந்த பின்
நிறமாறியது ஏன்?

ஈரம் உள்ள நெஞ்சு
ஏன் பிடிப்பதில்லை
இந்த மனிதர்களுக்கு
நொந்து கொண்டது
வெயிலில் காய்ந்த
ஈர விறகு

Sunday, June 13, 2004

சுற்றும் உலகம் சுற்றட்டும்!

(தலை) உலகம் சுற்றுகிறது பதிவிற்கு ஈழநாதன் சரியான காரணத்தை சொல்லி விட்டார். நானும் கிட்டத்தட்ட அவர் சொன்ன பேருந்து உதாரணத்தை தான் சொன்னேன்.
http://www.aerospaceweb.org/question/dynamics/q0027.shtml இதை நன்றாக விவரிக்கிறது. நாம் எல்லாரும் , கணினியின் முன் நிலையாக உட்கார்ந்து இருந்தாலும்,
735mph வேகத்தில் (அண்டத்தை பொருத்தவரை) சுற்றிக் கொண்டிருக்கிறோம். அதனால் ஜாக்கிரதையாக தலைகவசம் (ஹெல்மெட்) அணிந்து கொண்டு கணினி முன் அமருங்கள்.


மிகவும் எளிதான கேள்வி போல் இருந்தாலும், சற்றே சிந்திக்க தோன்றும் கேள்வி. இது போல் நம்மை சுற்றி எத்தனையோ பதில்கள் இருந்தாலும், கேள்விகள் நமக்கு தெரிவதில்லை.
நண்பர் ஒருவர் வேடிக்கையாக சொன்னார் "நம்ம ஊரில் ஆப்பிள் மரம் இல்லாததால் தான் , நாம் புவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்கவில்லை என்று".

Thursday, June 10, 2004

வழி தேடி !

வழிப் போக்கன் நான்
செல்ல வழி தேடி திகைக்கிறேன்.

வழியெங்கும் வழிகாட்டிகள்
அவை காட்டும் வழிகள் பல

புதையல் தேடி புதைந்த வழி ஒன்று
உச்சி மலை ஏறி உருண்ட வழி ஒன்று
பரமபத ஏற்ற இறக்கம் பழகி தந்த வழி ஒன்று
போதிமரமென புளிய மரமடைந்த வழி ஒன்று
செக்குமாடாய் சுற்றி வந்த வழி ஒன்று


எந்த வழி சென்றாலும்
இறுதி ஒன்றுதான்...
இலக்கில்லாமல் நான்.


வந்த வழி எண்ணி
வைக்கிறேன் நானும் ஒரு வழி காட்டி

Tuesday, June 08, 2004

(தலை) உலகம் சுற்றுகிறது !

வேலைக்கு சேர்ந்த புதிது.சக ஊழியர் ஒரு நாள் திடீரென்று, உலகம் சுற்றுவது உண்மையா என்று கேட்டார்.எதற்காக அடி போட இந்த கேள்வியோ என்று நினைத்து அமைதியாய் இருந்தேன். ஒரு இடத்தில் இருந்து உயரே எம்பி குதித்தால் ஏன் அதே இடத்தில் விழுகிறோம் , கொஞ்சம் தள்ளி போய் தானே விழ வேண்டும் , உலகம் சுற்றுவது உண்மையா இருந்தால் என்றார்.இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல 20 மணி நேரம் ஆகிறது.ஆனால் பூமி 12 மணி நேரத்தில் அந்த தூரத்தை சுற்றி விடுகிறது. அதனால் , விமானத்தில் பறந்து செல்லாமல், பாராசூட்டில் சென்னைக்கு மேலே கொஞ்சம் உயரத்தில் மிதந்து கொண்டு இருந்தால் போதும், 12 மணி நேரத்தில் நியூயார்க் வந்து விடும்;கிழே இறங்கி விடலாம் என்று என் வாயை கிண்டினார். நான் உள்ளே ராஜேந்திரகுமார் கதையில் வருவது போல் "ஙே" என்று விழித்தாலும் , அரசு போல் "ஹி ஹி" என்று வழிந்து , ஒரு பதில் கேள்வி கேட்டு தப்பித்தேன்.அது என்ன என்பது பின்னொரு நாளில் வெள்ளித் திரையில் காண்க.....

Google-ல் போய் தேடாமல், பந்தை மேலே தூக்கி போடாமல், பதில் முன்பே தெரிந்தவர்கள் அடுத்த ஜென்மத்தில் பெண்கள் இல்லாத ஊரில் பிறப்பார்கள். (நன்றி பாரா)

Saturday, June 05, 2004

பாசம்

தெருவோர
பிச்சைக்கார தாத்தாவின்
இறுதி ஊர்வலம்

தாரை தப்பட்டையுடன்
அமர்களமாய்...

தெருவே ஆச்சரியத்தில்
அதுவரை பார்த்திராத
அவரின் மகனைக் கண்டு..

அந்த
தெருவோர வங்கி
மேலாளரை தவிர...

Thursday, June 03, 2004

விண் தூக்கி (Space Elevator)

என் தமிழாக்கம் தவறாக இருந்தால் ,மன்னித்து விடுங்கள்.

விண் தூக்கி , ஒரு நீண்ட நாள் விஞ்ஞான கனவாக இருந்தது.ஆர்தர் கிளார்க் 1970-ல் எழுதிய ஒரு நாவலில் இடம் பெற்றதில் இருந்து , பற்றிக் கொண்டது இந்த கனவு.ஆர்தர் கிளார்க் இன்று நடைமுறையில் இருக்கும் பல அறிவியல் அற்புதங்களை , தனது கதைகளில் முன்கூட்டியே சொல்லி வைத்த அதி அற்புத (விஞ்ஞான)கற்பனாவாதி.அதனால் தானோ என்னவோ அப்துல் கலாமும் , எல்லாரும் கனவு காணுங்கள் என்று சொல்கிறார். நான் ஆர்தர் கிளார்க் எழுதிய எதையும் படித்ததில்லை என்றாலும், என் இலங்கை நண்பர்கள் அவரைப் பற்றி எப்பொழுதும் பேசக் கேட்டிருக்கிறேன். கடந்த 30,40 வருடங்களாக இலங்கையில் அவர் வாழ்ந்து வருவதில் அவர்களுக்கு அப்படியொரு பெருமை.

இப்பொழுது கனிமத் துறை,கார்பன் நானோ டியூப் , லேஸர்,ரேடார்,ரோபோடிக் போன்ற துறைகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் , விரைவில் விண் தூக்கியை நிஜமாக்கி விடும் என்று பல அறிஞர்களை நம்ப வைத்திள்ளது.அதனால் கற்பனை நிலையில் இருந்து , நடைமுறையில் செயல் படுத்த கூடியதாக இப்பொழுது இது கருதப்படுகிறது.

விண் தூக்கி என்பது , பூமியில் இருந்து கிட்டத்தட்ட 100,000 கி.மீ தூரம் ஆகாயத்தை நோக்கி (beyond geosynchornous orbit) செல்லக் கூடிய ஒரு இணைப்பு. ஆற்றின் இரு கரையை இணைக்கும் பாலம் போல , பூமியையும் , விண்வெளியையும் இது இணைக்கும்.இரும்பையும் விட வலுவான கார்பன் நானோ டியூப்பால் செய்யப்படும் ரிப்பன் போன்ற இந்த விண் தூக்கி.சியாட்டலில் உள்ள ஒரு நிறுவனம் இதற்கான ஆராய்ச்சிகள் இடம் பெற்று வருவதால் அடிக்கடி இதைப் பற்றி செய்திகள் உள்ளூர் பத்திரிக்கைகளில் வரும்.10 பில்லியன் செலவு ஆகும் என்கிறார்கள். இந்தியாவில் ஆறுகளை இணைப்பதற்குள் , இது நடைமுறையில் வந்து விடும் போல இருக்கிறது!!!.

இதன் மூலம் , மனிதர்கள், எரிபொருள்,தனிமங்கள்,சக்தி, வாயுப் பொருள்கள் என்று அனைத்தையும் கொண்டு செல்லலாம்.
தீப்பிழம்பை கக்கி கொண்டு , அசுர வேகத்தில் பறந்து செல்லும் ராக்கெட்டுகள் எல்லாம் பழங்கதையாகி விடும். மெதுவாக , "ஏலேலோ ஐலசா" பாடிக் கொண்டு , எல்லாரும் விண் வெளிக்கும் , அங்கிருந்து மற்ற கோளங்களுக்கும் சென்று வரலாம்.
பசிபிக்கில் இது அமையப்படலாம் என்று பட்சி சொல்கிறது.

இதன் மூன்றாவது ஆண்டு கருத்தரங்குக்கு இந்த மாதம் நடைபெற உள்ளது.(http://www.isr.us/SpaceElevatorConference/schedule.html)


Tuesday, June 01, 2004

அனுபவம் புதுமை

நீள்வாரயிறுதியில் ( வார்த்தை பிரயோகம் : நன்றி , மூக்கன்) வலைஞர்கள் பெரும்பாலும் எங்கேயாவது வெளியூர் சென்று வந்து , அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். நம் பங்கிற்கு அதை எழுதி தொல்லை கொடுக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் 2 விஷயங்கள் அதை புறந்தள்ளி விட்டன.

1. சியாட்டலில் நடை பெற்ற NorthWest Folk Life Festival-ல் 4 மணி நேரம் நடை பெற்ற இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு. பரதம் , குச்சிப்புடி நடனங்கள் இடம் பெற்றன.அரங்கு நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு நடனம் முடிந்தவுடன் "standing ovation" கிடைத்தது.மேலை நாட்டவர் நம் காலாச்சாரங்களுக்கு நல்ல மதிப்பு கொடுக்கிறார்கள்.ஆனால் நாம் அவர்களிடம் கற்றுக் கொண்டதுn கலாச்சார சீர்கேட்டைத் தான்.

From the flyer

"Dance is a sacred art form that Indians have preserved for thousands of years, through various invasions and wars. In the process, they incorporated the rhythms of invading cultures. The classical dances combine fluid motion and lucid expression to become an art form that is pure poetry in motion. Folk dances, on the other hand, are spontaneous expression of emotion with natural rhythmic motions. Tribal and folk dances today provide the thread of continuity between the distant past and the present. They simultaneously reveal the most primitive and the most sophisticated expression of human experience and emotion. All folk dances represent the aspirations and beliefs of the people and are an expression of their life and aesthetic experience. Today's concert presents three classical dance forms--bharata natyam (originated in Tamil Nadu, presented
by Kala Ganesh, Dr. Joyce Paul and students of Srishti Academy), kuchipudi (originated in Andhra Pradesh, performed by Bhavana Vytla) and kathak (from North India, Leela Kathak Institute). Folk dances from various parts of India will show the color and rustic charm of rural India, and the IAWW youth program will present contemporary fashions with traditional costumes"

குச்சிப்புடி நடனம் ஆடியவர் ஒரு தாம்பாளத்தின் மீது நின்று ஆடி ஆச்சரியப்படுத்தினார்.

2."அரியர்ஸ் இல்லாதவன் அரை மனிதன்" என்று கல்லூரிகளில் உள்ள பழமொழி. அது போல "டிக்கெட் வாங்காதவன் அரை மனிதன்" என்று அமெரிக்காவில் சொல்லலாம். நான் ஏற்கனவே இரண்டு முறை டிக்கெட் வாங்கி சந்தேகத்திற்கு இடமில்லாமல் முழு மனிதனாகி இருந்தேன்.நிலத்தில் வாங்கியது பத்தாதென்று , சென்ற வாரயிருதியில் லேக் செலானில் ( சியாட்டலில் இருந்து 3 மணி நேர பயணம்) நீரிலும் speeding ticket எனக்கு. கரையோரத்தில் அலை எழும்படி ( 5 mph க்கு மேல்) speed boat-ல் செல்ல கூடாதாம். பின்னொரு boat-ல் "மாமா"க்கள் நீரில் விரட்டி வந்தது நல்ல அனுபவம். "களவும் கற்று மற" என்று மனதை தேற்றிக் கொண்டேன். Fine எதுவும் இல்லை என்பதும் ( ஒரு புத்தகம் கொடுத்து படிக்க சொன்னார்கள்) , insurance premium பாதிக்கப்படாது என்பதும் சந்தோஷ படக் கூடிய விஷயங்கள்.