Friday, June 18, 2004

அசைவம் பாதி , சைவம் பாதி (?!!)

சில நாட்களுக்கு முன்பு ஒரு குழுமத்தில் ஒருவர்
mms://a805.v9135e.c9135.g.vm.akamaistream.net/7/805/9135/0009/peta.download.akamai.com/9135/skin-trade-ili_med.wmv என்ற link அனுப்பி , மிருகங்களை தின்பவர்கள் கொடியவர்கள் , நாகரீகமற்றவர்கள் என்ற சர்ச்சையை ஆரம்பித்து வைத்தார் .

"தாவரங்களுக்கும் உயிர் உண்டு , அதை கொல்வது மிருகங்களை கொல்வதை விட மிகப் பெரிய பாவம். விலங்குகளாவது சில சமயம் தப்பித்து சென்றுவிடும். பாவம் , இந்த தாவரங்கள். உங்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்க கூட முடியாது.
சைவமாக இருப்பது, உயிர்களின் மேலுள்ள் அன்பினால் என்பதெல்லாம் சும்மா பம்மாத்து.உங்களின் உணவு பழக்கம் வேறு, அசைவர்களின் உணவு பழக்கம் வேறு அவ்வளவு தான். ஒன்றை விட மற்றொன்று சிறந்தது அல்ல"
என்று காலங் காலமாய் சொல்லப் பட்டு வரும் மாற்றுக் கருத்தை அனுப்பினார் மற்றொருவர். அவ்வளவு தான், அதன்பின் வந்த நூற்றுக்கணக்கான ஆதரவு/எதிர்ப்பு மெயில்களை கொல்வது எனக்கு அன்றைய வேலையாகி விட்டது.

விவசாயம் செய்து சாப்பிட , 10000 ஆண்டுகளாகத் தான் மனிதர்களுக்கு தெரியும். அதற்கு முன் மாமிசம் தான். இடையில் வந்த இந்த விவசாயம் செய்து சாப்பிடுவதால் தான் இவ்வளவு உடல் நலக் குறைபுகளுக்கும் காரணம். நம் உடல் கூற்றிற்கு மாமிசம் தான் உகந்தது என்று முன்பு வேலை செய்த நிறுவனத்தின் அதிபர் சொன்னது ஞாபகம் வந்தது. அட்கின் டயட்-டும் இதை ஒத்து வருகிறது.

To become vegetarian is to step into the stream which leads to nirvana.
--Buddha

One is dearest to God who has no enemies among the living beings, who is nonviolent to all creatures.
--Bhagavad Gita

"Behind every beautiful fur, there is a story. It is a bloody, barbaric story. "
--Mary Tyler Moore

Animals are my friends-and I don't eat my friends.
--George Bernard

A human can be healthy without killing animals for food. Therefore if he eats meat he participates in taking animal life merely for the sake of his appetite.
--Leo Tolstoy

Nothing will benefit human health and increase chances for survival of life on Earth as much as the evolution to a vegetarian diet.
--Albert Einstein

என்று பெரிய மனிதர்களை சாட்சிக்கு இழுத்தார் ஒருவர். ஏனோ தெரியவில்லை , காந்தியை அவர் மறந்து விட்டார்.



How can you eat anything with eyes!
--Will Kellogg

என்ற வாசகத்தை படித்த போது, ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.சில வருடங்களுக்கு முன்பு , அலுவலகத்தில் புதிய (சைவ) நண்பரிடம் நான் சாப்பிட்ட ஊரும்,நடக்கும் , மிதக்கும் , நீந்தும்,பறக்கும் வகையறாக்களைப் பற்றி பீற்றிக் கொண்ட போது, என் அம்மா செய்யும் ஆட்டின் தலைக் கறியின் சுவையப் பற்றியும் சொன்னேன். தலையின் பல பாகங்களை பற்றி கேட்டு , இதைக் கூடவா சாப்பிடுவீர்கள் என்று வேதனை கலந்த ஆச்சரியத்துடன் கேட்டார். நான் எல்லாவற்றிற்கும் ஆமாம் போட , .அதைக் கேட்டு வாந்தி எடுக்காத குறையாம் ஓடிய அவர், தன் மனைவியிடமும் அதை சொல்லி வைத்திருக்கிறார். அதிலிருந்து , அவர்கள் இருவரும் என்னை பார்க்கும் பொழுதெல்லாம் , அசுரனைப் பார்பது போல்தான் பார்ப்பார்கள். (எனக்கே இதை எழுதும் போது/அவர்கள் நிலையில் இருந்து கற்பனை செய்து பார்க்கும் போது, சங்கடமாகத் தான் இருக்கிறது. ஆனால் உண்மையை எழுத வேண்டியிருப்பதால் , இதை எழுதுகிறேன்.)

ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு முறை , சைவமாக மாறி விடுவது என்று முடிவெடுத்து அதை என் அம்மாவிடம் சொன்னேன். மறு நாள் காலையில் , கடவுள் கனவில் வந்து , படையல் ( முன்னோர்களுக்கும் / தெய்வங்களுக்கும் அசைவ படையல் படைப்பது கிராமத்தில் எங்கள் குடும்ப வழக்கம்) சாமி பிரசாதம் , அதை சாப்பிட மாட்டேன் என்று சொல்லக் கூடாது என்று சொன்னதாகவும் , அதனால் அசைவம் சாப்பிட்டுத் தானாக வேண்டும் என்று சொன்னார்.தாய் சொல்லை தட்டாமல் ( அந்த ஒரு விஷயத்திலாவது) என் அசைவ துறவறத்தை அன்றே கை விட்டு விட்டேன்.அதன்பின் அசைவ பிரியனாகி விட்டேன்.நான் வருகிறேன் என்றால் , உறவினர் இல்லங்களில் சிறப்பு அசைவ விருந்து உறுதி.எந்த ஊருக்கு சென்றாலும், நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் உணவகம் சென்று ஒரு வெட்டு வெட்டி விடுவேன்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் காந்தியின் சத்திய சோதனையை மீண்டும் ஓரு முறை படித்தேன். வாழ்க்கையில் அவர் எடுத்த பல்வேறு சோதனை முயற்சிகளை படித்த போது , மீண்டும் ஒரு உத்வேகம்/ஞானோதயம் வந்தது.
வாழ்க்கையில் பாதி நாட்கள் அசைவப் பிரியனாக இருந்தாகி விட்டது. மற்றொரு பாதியில் ( பாதி ,என்பது என் கணக்கின் படி. மேலே உள்ளவனின் கணக்கு என்னவோ?.) முழுச் சைவமானால் என்ன என்று?.
கடந்த 2 வருடமாக கஷ்டப் பட்டு , அசைவம் தவிர்த்து வருகிறேன்.அமெரிக்கா வந்து , சைவமானேன் என்றால் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். மருத்துவர் சொல்லியிருப்பார் அல்லது எடையை குறைக்கும் முயற்சி என்பது பலரின் எண்ணம்.

உயிர்களின் மீதான பாச அளவு கூடவோ , குறையவோ இல்லையென்றாலும் , Mcdonalds/KFC என்று திரிந்து வந்த நான் , இப்பொழுதெல்லாம் Pizza Hut நோக்கி செல்ல வேண்டியிருக்கிறது.இது போல போல இதுவரை கவனம் செலுத்தாத பல விஷயங்கள் இப்பொழுது கண்ணிற்கு தெரிய வருகிறது.

மகாத்மா கூட இன்று அகிம்சையாக தெரிவது , நாளை ஹிம்சையாக தெரியலாம் என்று சொன்னார் என்று ரஜினி (தலைவா !!!!) ராம்கியின் பதிவில் படித்தேன். அது தாவரங்களுக்கு பொருந்தும்.
பின்னாளில் தாவரக்களின் வாழ்க்கையைப் பற்றிய நம் அறிவு பெருகும் போது, அதை சாப்பிடுவது கூட தவறாகப் படலாம்.

குற்ற உணவிற்காக குறைக்கா விட்டாலும் , மாமிசமோ/காய்கறியோ சாப்பிடுவதை குறைத்தால் அனைவருக்கும் நன்று. "பேசினாலே காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் இறந்து விடும். அதற்காகத் தான் ஜெயின் மத குருக்கள் , வாயில் துணியை கட்டிக் கொள்கின்றார்கள் என்கிறார்கள்.எனவே பேச்சையும் குறையுங்கள்" என்று ஒரு குரல் கேட்கிறது.

எது சரி?. எது தவறு ?ஒன்னுமே புரியலே இந்த உலகத்திலே..
அதனால தான் அதில் பாதி , இதில் பாதி (!?!)

No comments: