Wednesday, May 19, 2004

வைகை

மானாமதுரை - வானரவீரமாமதுரை என்பது மருவி மானாமதுரையானதாக கூற கேட்டதுண்டு.சீதையை மீட்க சென்ற ஆஞ்சிநேயர் , தன் வானர படைகளுடன் தங்கியிருந்ததால் வந்த காரண பெயர் இது என்பர். பாரதிராஜா படத்தில் வருபது போன்ற அழகிய சிறு நகரம். ( பெரும் கிராமம் என்றும் சொல்லலாம்.)

மட்பானைக்கும், மணக்கும் மல்லிக்கும் பெயர் பெற்ற ஊர் மானாமதுரை. ஆங்கிலேயர் காலத்து இரயில்வே ஜங்சனும், ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் கட்டிய கல்வி கூடங்களும் ( ஒக்கூரில் வேறு ஒருவர் முன்பே கல்வி கூடங்கள் கட்டி விட்டதால் மானாமதுரைக்கு கிடைத்தது இந்த பாக்கியம்) சுற்று வட்டார கிராமங்களில் மானாமதுரையை பெரிய ஊர் ஆக்கியது.

ஊரின் உயிர் நாடி , அதன் நடுவில் செல்லும் வைகை நதி. சிறு வயதில் உங்கள் ஊரில் ஆறு இருக்கிறதா என்று வேறு ஊரில் வசிக்கும் மற்ற உறவின சிறுவர்களை பெருமையுடன் கேலி செய்ய உதவிய நதி. நதியும் நதி சார்ந்த நாகரீகமாக எங்கள் அனைவரின் வாழ்கையிலும் கலந்து விட்ட நதி.

மேல் கரையில் ஆனந்தவள்ளி சோமநாதர் கோவில். கீழ் கரையில் பெருமாள் கோவில். இந்த புறம் மாதா கோவில் , அந்த புறம் மசூதி. ஆற்றின் நடுவே 100 வயதான பாலம். ( இப்பொழுது புது பாலம் கட்டப்பட்டுள்ளது). கலைஞர் முதல் முறை முதல்வராய் வருகை தந்த போது , துரிதமாய் மேடைக்கு செல்ல அமைக்கப் பட்ட பாதி அரித்து , கரைந்து போன கட்டை மண் பாலம் ஒன்று.

நதி என்றவுடன் வற்றாத நதி என்று நினைத்து விட வேண்டாம். எப்பொழுதுமே வற்றிய நதி தான் எங்கள் வைகை.வருடத்திற்கு 10- 15 நாட்கள் மட்டுமே தண்ணீர் வரும். மற்ற நாட்களில் எங்களுக்கு அது மிகப் பெரிய விளையாட்டு மைதானம்.கபடி,கிளித்தட்டு,எறி பந்து என்று குழு விளையாட்டு ஆனாலும் சரி , பட்டம் விடுதல் , புதிர் விளையாட்டு போன்ற மென்மையான விளையாட்டு ஆனாலும் சரி , கிரிக்கெட், வாலிபால் போன்ற நவீன விளையாட்டு ஆனாலும் சரி , சிறுவர்கள் எங்களுக்கு ஆறுதான் மைதானம். பெருசுகளுக்கு அதுவே விவாத மேடை ஆகி விடும் . அவர்கள் பேசும் அரசியலும், அக்கம்பக்கத்து கதைகளும், விளையாடி களைத்து ஓய்வெடுக்கும் போது காதில் விழும்.அப்படி கற்றுக் கொண்டது தான் பல விஷயங்கள்.

கோபம் வந்து விட்டால் ,"சாயங்காலம் ஆற்றுக்கு வாடா , ஒரு கை பார்த்துக்கலாம்" என்று எதிரிகளிடம் சவால் விட்டு மோதும் குஸ்திகளமாகவும் இருக்கும்.சமயத்தில் ஊரும் ஊரும் மோதிக் கொள்ளும் குருசேஷ்திர போர்க்களமாகவும் அமையும்.

ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால், அதுவே நீச்சள் குளமாகி விடும். மீன் பிடிக்க பெரிய படையே கிளம்பி விடும். தண்ணீர் வற்றும் போது , வெறும் கையிலேயே மீன் பிடித்ததுண்டு.தண்ணீர் வந்தால் பலி வாங்காமல் வற்றாது என்று பெரியவர்கள் அபிப்ராயம். ( அது பெரும்பாலும் உண்மை). அதனால் வீட்டிற்கு தெரியாமல் "டிமிக்கி" கொடித்து விட்டு தான் செல்ல வேண்டும்.

சித்திரா பௌர்ணமிக்கு நிலாச்சோறு சாப்பிட இரவில் ஊரே கூடும் சாப்பாட்டு கூடமாகி விடும்.சித்திரை திருவிழா நேரங்களில், நாடக மேடை ஆகி விடும்.இலவச சினிமா திரையரங்காகவும் இருக்கும்.

அழகர் ஆற்றில் இறங்கும் நாள் , எல்லாவற்றிற்கும் உச்சகட்டம்.தங்கை மீனாட்சியின் திருமணம் காண அந்த கரையில் இருந்து அழகர் குதிரை வாகனத்தில் வருவார். அவர் வரும் முன்பே திருமணம் நடந்து விட , கோபித்து கொண்டு வேக வேகமாக திரும்பி ஓடி விடுவார். அழகர் வரும் போது, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வைபவம் உண்டு. அது எல்லார்க்கும் மிகவும் பிடிக்கும்.

சக்தி விகடனில் மதுரை அழகர் ஆற்றில் கதை சில நாட்களுக்கு முன்பு வந்தது.அதில் சொல்லப்பட்டிருக்கும் காரணம், மேலே சொன்ன ( எங்களுக்கு காலம் காலமாய் சொல்லப்பட்ட) கதையில் இருந்து முற்றிலும் மாறு பட்டிறுந்தது.

வைணவமும் , கைலாயமும் ( சைவமும்) அழகர் ஆற்றில் இறங்கும் போது கலப்பதால் , வைகை என்று அழைக்கப் படுவதாக சுகி சிவம் சொல்வது சாலப் பொருத்தம்.

4 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

மானம் காத்த மதுரையா இருக்குமோ?

மு.மணி said...

நீங்கள் மானாமதுரையில் இருந்தீர்களா மகிழ்ச்சியாக உள்ளது.
mani_veenai@yahoo.com

Anonymous said...

நீங்களும் மானாமதுரையா?நான் மானாமதுரை
mani_veenai@yahoo.com
அன்புடன்:
மு.மணி