Friday, May 28, 2004

நூலகம்

முதல் வகுப்பில் சேரும் முன்னரே மூன்று வருடங்கள் என் அக்காவுடன் (இந்திரா) பள்ளிக்கு சென்று பாடம் படித்த அனுபவத்தால் , எனக்கு 5 அல்லது 6 வது வயதிலேயே நன்றாக தமிழ் படிக்க வரும்.அப்பா அரசாங்க ஊழியர் என்பதால் கதைப் புத்தகங்கள் படிப்பது அவரின் ஊழியமாக இருந்தது.அவர் வாங்கி குவித்த வார,மாத இதழ்களை பார்த்து பத்திரிக்கை படிக்கும் பழக்கம் எனக்கு மிகச் சிறிய வயதிலேயே வந்து விட்டது.ஒரு நாள் இந்திராவின் தோழி ரேவதி என்னிடம் வந்து , பக்கத்து தெருவில் ஒரு இடம் இருப்பதாகவுப் , அங்கு கையெழுத்து மட்டும் போட்டால் போதும் எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் படிக்கலாம் என்று சொன்னாள்.எதற்காக கையெழுத்து கேட்கிறார்கள் , ஒரு வேளை அதை வைத்து பின்னால் காசு கேட்பார்களோ என்று எனக்கு பயங்கர சந்தேகம். அதனால் உஷாராக வேறு ஒரு கற்பனை பெயரை அங்கே எழுதி விட்டு , வெற்றிகரமாக நூலகத்தின் உள்ளே சென்றேன்.

அங்கே இரண்டு அறைகள் இருக்கும். முதல் அறையில் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் இருக்கும். உள்ளே இருக்கும் அறையில் நாவல்கள் இருக்கும. அதன் முன்னே காவல் பூதமாக நூலக பொறுப்பாளர் அமர்ந்திருப்பார். முதல் நாளே நான் நேரடியாக நாவல் அறைக்கு செல்ல முயல, அவர் என் உயரத்தை பார்த்து என்னை உள்ளே செல்ல விட வில்லை. "உனக்கு அனா , ஆவன்னா தான் படிக்க தெரியும்,அதுக்குள்ள கதை புத்தகமா? போய் முன்னாடி இருக்கும் அம்புலி மாமாவில் கிழிக்காமல் படம் பார்" என்று விரட்டி விட்டார்.எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து , என் திறமையை அவருக்கு காட்ட , அம்புலி மாமாவை எடுத்து சத்தமாக படிக்க ஆரம்பித்தேன்.அவ்வளவு தான் , அடுத்த நிமிடம் நான் வெளியே...

பின்னொரு நாள் , அவர் சற்று அயர்ந்திருந்த சமயம் , உள்ளே ஓடிப்போய் , நான் முதலில் படிக்க ஆரம்பித்த புத்தகம் "விக்கிர மாதித்தன் கதை பாகம் 1". பின் பத்தாம் வகுப்பு வரை நூலகம் என் மற்றொரு வீடானது.

என் அப்பா எப்பொழுதும் ஒரு கதையின் முடிவை படித்து விட்டு தான் , பின் ஆரம்பத்திலிருந்து படிக்க ஆரம்பிப்பார். இந்த பழக்கம் எதனால் வந்திருக்கலாம் என்பது நூலகத்திற்கு செல்ல ஆரம்பித்த பின் தெரிய வந்தது. அங்கே உள்ள புத்தகங்களில் , பலவற்றில் முடிவு பக்கங்களை சில சஸ்பென்ஸ் பிரியர்கள் கிழித்து விடுவார்கள்.சிலர் அவர்களின் விமர்சனத்தை பதித்திருப்பார்கள்.சிலர் புத்தகத்தை "புறா" வாக பயன்படுத்த முயற்சித்திருப்பார்கள்.இது கொடுமை என்றால், பல வருடங்கள் சென்று , சென்னையில் அண்ணா சாலையில் உள்ள ORWO films-ல் வேலை பார்த்து வந்த என் சகோதரியை பார்க்க சென்ற போது , அருகில் உள்ள தேவநேய பாவணர் நூலகத்திற்கு சென்றேன்.அதை பலர் கட்டணம் இல்லாத ஓய்வறையாக பயன் படுத்து வதையும், பலர் அங்கு தூங்கி கொண்டிருப்பதையும் பார்த்து நொந்து போனேன்.

நூலகங்கள் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு அடிப்படை தேவை. வளரும் நாடாக இருந்தாலும் ,வறுமை கோட்டிற்கு கீழே இருந்தாலும் , ஊருக்கு ஒரு நூலகம் இருப்பது , இந்தியாவின் சிறப்பு.ஆயிரத்திற்கு குறைவாக உள்ள எங்கள் கிராமத்தில் கூட ஒரு சிறிய நூலகம் உள்ளது.பொது சொத்தை முறையாக,சரியாக பயன் படுத்த எல்லாரும் தெரிந்து கொண்டால் , இதை இன்னமும் சிறப்பாக பயன்படுத்தலாம். பின்னாளில் சிங்கப்பூரிலும், அமெரிக்காவிலும் உள்ள அதி நவின நூலகங்களை பார்த்து ஏக்க பெரு மூச்சு விட்டது தனி கதை.

1 comment:

Vanthiyathevan said...

நியாயமான ஏக்கமே. எனது சொந்த அனுபவம் கொஞ்சம் வித்தியாசம். செமஸ்டருக்கு 15 நாட்கள் முன்னர் மட்டும் கல்லூரி நூலகம் சென்று வந்து பழக்கம். காரைக்குடியில் 2 முறை மெம்பராகியும் பொது நூலகத்தை சரியாகப் பயன்படுத்த முடியவில்லை. எனக்கும் நூலகத்திற்கும் ஏனோ ஏழாம் பொருத்தம். இன்று வரை.

ஞானம்.